உள்துறை அமைச்சகம்

மனித உரிமை தினத்தைக் கொண்டாடியது, தேசிய மனித உரிமை ஆணையம்

Posted On: 10 DEC 2020 5:16PM by PIB Chennai

மனித உரிமை தினத்தை, தேசிய மனித உரிமை ஆணையம் தில்லியில் இன்று கொண்டாடியது. இந்நிகழ்ச்சியில் மத்திய உள்துறை இணையமைச்சர் திரு நித்யானந்த் ராய் காணொலிக் காட்சி மூலம் கலந்து கொண்டு உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

மனித உரிமைகள், வேத காலத்தில் இருந்து இந்தியாவில் இருக்கின்றன. மனித இனத்தையும், மனிதநேயத்தையும் பிரதமர் திரு நரேந்திர மோடி எப்போதும் மதிப்பவர். மனித இனத்துக்கு சேவை செய்வதுதான், அவரது வாழ்க்கையின் லட்சியம். மனித உரிமை ஆணையத்துக்கு அதிகாரம் வழங்குவதில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா உறுதியுடன் உள்ளார். சமூகத்தில் பின்தங்கியவர்களின் நலன் மற்றும் மேம்பாட்டுக்கு மத்திய அரசு அதிக முன்னுரிமை அளிக்கிறது. பின்தங்கிய சமூகத்தினரின் உரிமைகள் பாதுகாக்கப்படும். மனித உரிமைகளைப் பாதுகாத்து வளர்ப்பதில், உள்ளூர் பஞ்சாயத்துக்களின் பங்கு முக்கியமானது. அதனால் உள்ளூர் பஞ்சாயத்துக்களுக்கு அதிகாரம் அளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

கொரோனா தொற்று காலத்தில், பிரதமரின் ஏழைகள் நலன் திட்டத்தின் கீழ், ஒவ்வொருவரின் உணவு உரிமையை மத்திய அரசு உறுதி செய்தது. அப்போதுதான் யாரும் பசியோடு இருக்க மாட்டார்கள். இது தவிர மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், தொழிலாளர்களின் ஊதியம் உயர்த்தப்பட்டது.  கொவிட்-19-ஆல் பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில், மத்திய அரசு நேரடியாக நிதியுதவி அளித்தது. 

மனித உரிமைகளைப் பாதுகாத்து வளர்ப்பதில், தேசிய மனித உரிமை ஆணையத்தின் பங்கு பாராட்டுக்குரியது. எந்த அச்சமும், பாரபட்சமும் இல்லாமல் தேசிய மனித உரிமை ஆணையம் தனது பணியை மேற்கொள்கிறது. மனித உரிமைகளை வலுப்படுத்துவது சமூகத்தின் ஒட்டு மொத்த பொறுப்பு.

இவ்வாறு மத்திய அமைச்சர் திரு நித்யானந்த் ராய் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1679694

••••••••••••••


(Release ID: 1679729) Visitor Counter : 371