சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிப் பொருட்கள் வழங்கும் முகாம் : மத்திய அமைச்சர் திரு தவார்சந்த் கெலாட் தொடக்கம்

Posted On: 10 DEC 2020 3:43PM by PIB Chennai

மகாராஷ்டிராவின் லாத்தூர் மாவட்டத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிப் பொருட்கள் வழங்கும் முகாமை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் திரு தவார்சந்த் கெலாட் காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதில் 8,797 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் திரு தவார்சந்த் கெலாட்  பேசியதாவது:

கொவிட்-19 தொற்றுச் சூழலிலும், மத்திய அரசு எடுத்த சிறப்பு நடவடிக்கைகளால், மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட நிகழ்ச்சிகள் தடையின்றி நடக்கின்றன. இந்த முயற்சியில், அனைத்து தடுப்பு நடவடிக்கைகளுடன், மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி லாத்தூரில் நடக்கிறது.

நாட்டில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச உதவிப் பொருட்கள் வழங்குவதற்காக அவற்றை தயாரிக்கும் அலிம்கோ நிறுவனம் ரூ.338 கோடியில் நவீனப்படுத்தப்படுகிறது. கடந்த 2014-15ம் ஆண்டு முதல் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிப் பொருட்கள் வழங்கும் 9331முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் 16.87 லட்சம் பயனாளிகள் ரூ.1003.09 கோடி மதிப்பிலான கருவிகளையும், உதவிப் பொருட்களையும் பெற்றுள்ளனர். சமூக நீதி அமைச்சகம், நாடு முழுவதும் 637 சிறப்பு முகாம்களை  நடத்தியுள்ளது. இந்த முகாம்கள் மூலம் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் 10 சாதனைகளை சமூக நீதி அமைச்சகம் படைத்துள்ளது.

காது கேளாத குழந்தைகளுக்கு காக்ளியர் பொருத்தும் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக 186 மருத்துவமனைகள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன. அங்கு இதுவரை 2,995 அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை மாற்றுத் திறனாளிகளுக்கு 19,402 மோட்டார் பொருத்திய மூன்று சக்கர வண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அமைச்சர்  திரு தவார்சந்த் கெலாட் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1679669

******

(Release ID: 1679669)



(Release ID: 1679695) Visitor Counter : 197