புவி அறிவியல் அமைச்சகம்

வங்காள விரிகுடாவில் ஆழ்ந்த காற்றழுத்தம் தென் தமிழகம், தெற்கு கேரளாவுக்கு மஞ்சள் எச்சரிக்கை


* அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும்

* கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கையில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

Posted On: 01 DEC 2020 1:25PM by PIB Chennai

தென்மேற்கு, தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தம், அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் என்பதால், தென் தமிழகம் மற்றும் தெற்கு கேரளாவுக்கு,   இந்திய வானிலைத் துறை மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.  

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நேற்று உருவான  காற்றழுத்தம், மேற்கு நோக்கி நகர்ந்துதென் மேற்கு மற்றும் அதனையொட்டியுள்ள தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் இன்று காலை 5.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்தமாக   தீவிரமடைந்துள்ளது.   இன்று காலை 8.30 மணியளவில், இது இலங்கையின் திரிகோணமலைக்கு கிழக்கு- தென் கிழக்கு திசையில் 500 கி.மீ தொலைவிலும், கன்னியாகுமரிக்கு கிழக்கு - தென் கிழக்கு திசையில் 900 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது

இது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் வாய்ப்புள்ளதுஇது மேற்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகர்ந்து, இலங்கை கடற்கரையை டிசம்பர் 2ம் தேதி மாலை அல்லது இரவு கடக்கும் எனத் தெரிகிறது. இது மேற்கு நோக்கி மேலும் நகர்ந்து மன்னார் வளைகுடா மற்றும் அதனையொட்டியுள்ள குமரி முனை ஆகிய பகுதிகளை 3ம் தேதி காலை நெருங்கும். அதன்பின் மேற்கு நோக்கி நகர்ந்து, தென் தமிழக கடற்கரையை நெருங்கும்

இதன் காரணமாக தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கையில் ஒரு சில இடங்களில் டிசம்பர் 2 மற்றும் 3ம் தேதிகளில் கனமழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளன.

தெற்கு கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா மற்றும் ஆலப்பழா  ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் டிசம்பர் 3ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென் தமிழகத்தில் டிசம்பர் 2 மற்றும் 4ம் தேதியும், தெற்கு கேரளாவில் டிசம்பர் 3 மற்றும் 4ம் தேதியும் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

வட தமிழகம், புதுச்சேரி, மாஹே மற்றும் காரைக்கால் மற்றும் வடக்கு கேரளாவில் டிசம்பர் 2 மற்றும் 3ம் தேதிகளில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தின் கடலோர பகுதிகளில் டிசம்பர் 1 மற்றும் 4ம் தேதிகளில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

ஆந்திராவின் தெற்கு கடலோர பகுதிகளில் ஒரு சில இடங்களில் டிசம்பர் 2 மற்றும் 3ம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளது. லட்சத்தீவு பகுதியில் டிசம்பர் 3 மற்றும் 4ம் தேதிகளில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

 தெற்கு வங்க கடல் பகுதியில் மணிக்கு 45 கி.மீ முதல் 90 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால், டிசம்பர் 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை தென்மேற்கு வங்காள விரிகுடா, இலங்கை கடல் பகுதி, குமரி முனை, மன்னார் வளைகுடா, தென் தமிழக-கேரளா கடலோர பகுதிகள், லட்சத்தீவு, மாலத்தீவு, அதனையொட்டியுள்ள வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1677329

**************


(Release ID: 1677384) Visitor Counter : 159