குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

பருவநிலை மாற்றத்தைக் கையாள்வதில் `குழந்தைகளை மையமாகக் கொண்ட' அணுகுமுறையை சேர்க்க குடியரசு துணைத் தலைவர் அழைப்பு

Posted On: 20 NOV 2020 5:38PM by PIB Chennai

பருவநிலை மாற்றத்தைக் கையாள்வதில் `குழந்தைகளை மையமாகக் கொண்ட' அணுகுமுறையை சேர்க்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் திரு. எம். வெங்கய்ய நாயுடு இன்று அழைப்பு விடுத்தார். முக்கிய பிரச்சினையாக இருக்கும் தேசிய பருவநிலை மாற்றம் மற்றும் தகவமைப்பு உத்திகள், கொள்கைகள் மற்றும் திட்டமிடல்களில் குழந்தைகளின் உரிமைகள் பிணைந்திருக்க வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.

`குழந்தைகளுடன் பருவநிலை மாறுபாடு நாடாளுமன்றம்' என்ற தலைப்பில் `குழந்தைகளுக்கான நாடாளுமன்றவாதிகள் குழு' ஏற்பாடு செய்திருந்த இணையவழி கருத்தரங்கில் குடியரசு துணைத் தலைவர் உரையாற்றினார். உலக குழந்தைகள் தினத்தை ஒட்டி இன்று இதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பருவநிலை மாறுபாடு என்ற முக்கியமான விஷயம் தொடர்பாக நாடாளுமன்றவாதிகளுக்கும் சிறுவர்களுக்கும் இடையில் கலந்துரையாடலை ஊக்குவிப்பது இந்த நிகழ்ச்சியின் நோக்கமாக இருந்தது.

முந்தைய தலைமுறையைவிட இப்போதைய குழந்தைகள் அதிக விஷயங்களை அறிந்திருக்கிறார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு, பருவநிலை மாறுபாடு குறித்த கலந்தாடல்களில் குழந்தைகளையும் ஈடுபடுத்த வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் வலியுறுத்தினார். பருவநிலை மாறுபாடு, அதன் தாக்கங்கள், அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கூட அளவிலேயே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்று அவர் கூறினார். அடிப்படை அளவில் அவ்வாறு செய்வதால் குழந்தைகளை பருவநிலை மாற்றம் குறித்த தூதர்களாகவும், எதிர்காலத்துக்கான படிநிலை மாற்றத்தை ஏற்படுத்தும் தலைவர்களாகவும் உருவாக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரங்களைக் குறிப்பிட்ட திரு நாயுடு, பருவநிலை மாற்றத்தால் ஆண்டுதோறும் கூடுதல் மரணங்கள் நிகழும் என்றும், எளிதில் நோய்களுக்கு, காயங்களுக்கு, ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு ஆட்படும் குழந்தைகள் இதில் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார். ``14 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் உலக மக்கள் தொகையில் 25 சதவீதம் இருக்கிறார்கள். பருவநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் ஆபத்து உள்ள மிகப் பெரிய குழுவாக அவர்கள் இருக்கிறார்கள்'' என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.

வறட்சி, வெள்ளம், புயல், காட்டுத் தீ போன்ற தீவிர வானிலை மாறுபாடு தொடர்பான நிகழ்வுகள் அதிகரித்து வருவது பற்றிக் குறிப்பிட்ட குடியரசு துணைத் தலைவர், பசுமைக்குடில் பாதிப்பு வாயுக்கள் தொடர்ந்து உற்பத்தி ஆகிக் கொண்டிருப்பதால், பூமியின் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், அதனால் மனிதர்கள் உயிர் வாழ்வதற்கே அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்றும் கூறினார்.

புவி வெப்பமாதல் காரணமாக வெப்பம் தொடர்பான மன அழுத்தம், பூச்சிகளால் பரவும் நோய்கள் அதிகரித்து வருவதை அவர் சுட்டிக்காட்டினார். பருவநிலை மாற்றம் காரணமாக உணவுப் பாதுகாப்பும் பாதிக்கப்பட்டு, பட்டினியும் ஊட்டச்சத்து குறைபாடும் ஏற்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார். இதில் குழந்தைகள் தான் மிக மோசமாகப் பாதிக்கப்படுவார்கள் என்றார் அவர்.

பருவநிலை மாறுபாடு மற்றும் பேரழிவுகளால் குழந்தைகள் எந்த அளவுக்குப் பாதிக்கப்படுவார்கள் என்பதைக் குறிப்பிட்டுப் பேசிய திரு. நாயுடு, ஊட்டச்சத்து குறைபாடு, பள்ளிக்கூடங்கள் மூடப்படுதல், குழந்தைத் தொழிலாளர் நடைமுறை அதிகரிப்பு, உளவியல் பாதிப்புகள் போன்ற பிரச்சினைகள் ஏற்படும் என்று கூறினார். ``ஏழ்மையான மற்றும் வசதிகள் கிடைக்காத பகுதிகளில் உள்ள குழந்தைகள் இந்தப் பாதிப்புகளுக்கு அதிகம் ஆட்படுவார்கள்'' என்றும் அவர் எச்சரித்தார்.

தனது குழந்தைப் பருவ வாழ்க்கையை நினைவு கூர்ந்த திரு. நாயுடு, சுத்தமான காற்றுடன் கூடிய ஆரோக்கியமான சுற்றுச் சூழலில் வாழும் வாய்ப்பு தனக்குக் கிடைத்தது என்றும், இன்றைய குழந்தைகளுக்கு அவை மறுக்கப்படக் கூடாது என்றும் கூறினார்.

நீடித்த பயன் தரக்கூடிய செயல்பாடுகள் தேவை என்று வலியுறுத்திய திரு. நாயுடு, வளர்ச்சிக்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் இடையில் சமநிலையிலான அணுகுமுறை இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். குறைவாகக் கிடைக்கும் ஆதாரவளங்களை நாம் பாதுகாக்க வேண்டும், வரக் கூடிய தலைமுறையினருக்காக அக்கறை காட்ட வேண்டும் என்று அவர் கூறினார்.

பருவநிலை மாறுபாட்டால் சரி செய்ய முடியாத அளவுக்கு பாதிப்புகள் தொடங்குவதற்கு முன்னதாக நாம் செயல்படுவதற்கு சுமார் பத்தாண்டு காலம் மட்டுமே இருப்பதாக நிபுணர்கள் கூறுவதை அவர் சுட்டிக்காட்டினார். கொள்கை உருவாக்குபவர்கள், தலைவர்கள், பெற்றோர்கள் மற்ரும் தாத்தா பாட்டிமார்கள் கூட்டாக சேர்ந்து செயல்பட்டு, இந்த மோசமான சூழ்நிலையை சரி செய்ய, நம் பிள்ளைகளுக்கு ஆரோக்கியமான சுற்றுச்சூழலை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார். ``பரிதாபகரமான சூழ்நிலையோ அல்லது செயல்படாமல் இருப்பதாலோ எதிர்காலம் சீர்குலைந்து போக அனுமதித்துவிடக் கூடாது'' என்று அவர் குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது, புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட மின் உற்பத்தி நிலையங்கள் உருவாக்குதல், கார்பன் உற்பத்தியை இந்தியாவில் குறைத்தது உள்ளிட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிகளை மேற்கொண்டிருப்பதற்காக அரசுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

நெகிழி மாசு பற்றி கவலை தெரிவித்த குடியரசு துணைத் தலைவர், ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களில் 50 சதவீதம் அளவுக்கு கடலுக்கு போய் சேருவதால் கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழந்து, உணவு சங்கிலி சுழற்சியில் மீண்டும் மனிதர்களுக்கே வந்து சேருகின்றன என்று திரு. நாயுடு விவரித்தார். 2022-க்குள் நாடு முழுக்க, ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் நெகிழி பொருட்களை ஒழித்துவிட வேண்டும் என்று பிரதமர் விடுத்துள்ள வேண்டுகோளுக்கு எல்லோரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

குழந்தைகளுக்குப் பாதுகாப்பான உலகை கட்டமைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்த குடியரசு துணைத் தலைவர், குழந்தைகள் உயிர் வாழ்வதற்கு, வளர்வதற்கு நேரடி அச்சுறுத்தலாக பருவநிலை மாறுபாடு இருக்கிறது என்று தெரிவித்தார். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பெற்றோர்கள் மற்றும் சமுதாயத்தின் ஆதரவுடன் குழந்தைகள் தாங்களே மாற்றத்தை உருவாக்குபவர்களாக மாறலாம் என்று அவர் கருத்து தெரிவித்தார். ``குழந்தைகளிடம் இருந்து நீங்கள் தொடங்கினால், சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி விடலாம்'' என்று அவர் கூறினார். தூய்மை பாரதம் திட்டத்தில் குழந்தைகள் பங்கேற்பால் மாற்றம் ஏற்பட்டதை அவர் உதாரணமாக சுட்டிக்காட்டினார்.

வாழ்க்கையில் `இயற்கை' மற்றும் `கலாச்சாரம்' ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய திரு. நாயுடு, இயற்கையுடன் நாம் நண்பர்களாக இருந்து, கலாச்சாரத்திற்காகப் பெருமை கொள்ள வேண்டும் என்று கூறினார். ``உலகமே ஒரு குடும்பம் என்பது போன்ற மகத்தான நாகரிக மாண்புகளை நமது முன்னோர்கள் நமக்கு அளித்துச் சென்றிருக்கிறார்கள்'' என்று கூறிய அவர், எல்லோரும் அதைப் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். வாழ்க்கையின் நெறிகள் அழிந்துவிட அனுமதிக்கக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.

இந்திய பெண்கள் மற்றும் குழந்தைகளின் வாழ்வில் ஆக்கபூர்வமான மாற்றத்தை ஏற்படுத்த கடினமாக உழைத்து வருவதற்காக, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானிக்கு திரு. நாயுடு பாராட்டு தெரிவித்தார். குழந்தைகளுக்கான நாடாளுமன்றவாதிகள் குழு மூலமாக குழந்தைகள் உரிமைகள் குறித்த பிரச்சினைகளை எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி வந்தனா சவானுக்கும் பாராட்டு தெரிவித்தார்.

மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி, குழந்தைகளுக்கான நாடாளுமன்றவாதிகள் குழு அமைப்பாளர் திருமதி வந்தனா சவான், யுனிசெப் அமைப்பின் இந்தியாவுக்கான பிரதிநிதி டாக்டர் யாஸ்மின் அலி ஹாக், நாடாளுமன்ற உறுப்பினர்கள், குழந்தைகள் உரிமை ஆர்வலர்கள் மற்றும் குழந்தைகள் இந்தக் காணொலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

**********************

 



(Release ID: 1674476) Visitor Counter : 502