பிரதமர் அலுவலகம்
பெங்களூரு தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரை
Posted On:
19 NOV 2020 12:01PM by PIB Chennai
எனது அமைச்சரவை தோழர் திரு ரவி சங்கர் பிரசாத் அவர்களே, கர்நாடக முதலமைச்சர் திரு பி.எஸ் எடியூரப்பா அவர்களே, தொழில்நுட்ப உலகைச் சேர்ந்த அனைத்து எனதருமை நண்பர்களே, வணக்கம். தொழில்நுட்பம் பற்றிய இந்த முக்கியமான உச்சிமாநாட்டை ஏற்பாடு செய்வதற்கு தொழில்நுட்பம் உதவியிருப்பது மிகப் பெருத்தமானதாகும்.
நண்பர்களே, 5 ஆண்டுகளுக்கு முன்பு நாம் டிஜிட்டல் இந்தியா இயக்கத்தைத் தொடங்கினோம். இன்று, டிஜிட்டல் இந்தியா வழக்கமான அரசின் முன்முயற்சியாக பார்க்கப்படாமல், இந்தியாவின் வாழ்க்கை முறையாக மாறியிருப்பது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். குறிப்பாக ஏழைகள், ஒடுக்கப்பட்டோர், அரசில் உள்ளோருக்கு பெரும் பயன் கிடைத்துள்ளது. டிஜிட்டல் இந்தியாவின் பலனாக, அதிக அளவில் மனிதநேயத்தை மையப்படுத்திய வளர்ச்சி அணுகுமுறையை நம் நாடு கண்டுள்ளது. தொழில்நுட்பத்தை மிகப் பெருமளவில் பயன்படுத்துவது, நமது குடிமக்களின் வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.
நமது அரசு டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்பத் தீர்வுகளுக்கான ஒரு சந்தையை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது. அது அனைத்து திட்டங்களுக்கும் தொழில்நுட்பத்தை ஒரு முக்கிய பகுதியாக மாற்றியுள்ளது. முதலில் தொழில்நுட்பம் என்பதே நமது நிர்வாக முறையாகும். தொழில்நுட்பத்தின் மூலம் மனித கண்ணியத்தை நாம் கூட்டியுள்ளோம். ஒரு ‘கிளிக்’கில் லட்சக்கணக்கான விவசாயிகள் பண ஆதரவைப் பெற்று வருகின்றனர். கோவிட்-19 பொது முடக்கம் உச்சத்தில் இருந்த போது, இந்தியாவின் ஏழைகள் முறையான, துரிதமான உதவிகளைப் பெறுவதற்கு தொழில்நுட்பம்தான் பெரிதும் உதவியது. இந்த அளவிலான நிவாரணம் இணையற்றதாகும். இந்தியா, ஆயுஷ்மான் பாரத் என்னும் உலகின் மிகப் பெரிய சுகாதாரத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறதென்றால், அதற்கு தொழில்நுட்பம்தான் மிகப் பெரிய பங்காற்றியுள்ளது. இந்தத் திட்டம் இந்தியாவின் ஏழைகளுக்கு பிரத்யேகமாக உதவியுள்ளது. இப்போது, அவர்கள் இந்தியாவின் எந்தப் பகுதியிலும், உயர்தரமான சிகிச்சையைப் பெறுவது பற்றி கவலைப்படத் தேவையில்லை.
சிறப்பான சேவை மற்றும் செயல் திறனை உறுதி செய்ய, நமது அரசு, தரவு பகுப்பாய்வின் ஆற்றலைப் பயன்படுத்தி வருகிறது. இணையம் இந்தியாவுக்கு 25 ஆண்டுகளுக்கு முன்பு வந்தது. இணைய இணைப்புகளின் எண்ணிக்கை அண்மையில் 750 மில்லியன்களைத் தாண்டியுள்ளது என ஒரு அறிக்கை தெரிவிக்கிறது.. இதில் பாதி எண்ணிக்கை கடந்த நான்கு ஆண்டுகளில் வந்துள்ளது என்பதை நீங்கள் அறிவீர்களா? கோப்புகளைத் தாண்டி, நமது திட்டங்கள் சென்றுள்ளதற்கு தொழில்நுட்பம்தான் முக்கிய காரணமாகும். அதன் வேகமும், அளவும் மக்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளது. இன்று, ஏழைகள் தங்கள் வீடுகளை, முன்பு இல்லாத வகையில், வேகமாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் கட்டுகின்றனர் என்றால், அதற்கு உதவ நம்மால் முடிந்திருப்பதற்கு தொழில்நுட்பத்துக்கு தான் நன்றி கூற வேண்டும். இன்று, ஏறத்தாழ அனைத்து வீடுகளுக்கும் மின்சாரத்தை வழங்க நம்மால் முடிந்துள்ளதில், தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது. இன்று நம்மால், சுங்கச்சாவடிகளில் வேகமாக கடந்து செல்ல முடிவதற்கும் தொழில்நுட்பம்தான் காரணம். இன்று, குறுகிய காலத்தில் நமது பெரும் மக்கள் தொகைக்கு நம்மால் தடுப்பூசி போடும் திறன் பெறுவதற்கும் தொழில்நுட்பம்தான் நமக்கு நம்பிக்கையை ஊட்டியுள்ளது.
நண்பர்களே, தொழில்நுட்பத்துக்கு வரும்போது, அதனைக் கற்பதிலும், ஒன்று சேர்ந்து வளருவதிலுமே முன்னேற்றம் அடங்கியுள்ளது. இந்த அணுகுமுறையால் ஈர்க்கப்பட்டு, ஏராளமான இன்குபேசன் மையங்கள் இந்தியாவில் திறக்கப்பட்டு வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக, இந்தியாவில் ஹெக்காத்தான் என்னும் உயரிய கலாச்சாரம் உருவாக்கப்பட்டுள்ளது. நான் அதில் சிலவற்றில் கலந்து கொண்டிருக்கிறேன். நமது பூமியும், நாடும் எதிர்நோக்கும் முக்கிய சவால்களுக்குத் தீர்வு காணும் வழிவகைகளை இளைஞர்கள் சேர்ந்து சிந்தித்து வருகின்றனர். சிங்கப்பூர் மற்றும் ஆசியான் நாடுகளின் ஒத்துழைப்புடன் அதுபோன்ற ஹெக்காத்தான்கள் நடைபெற்றுள்ளன. துடிப்பு மிக்க நமது ஸ்டார்ட் அப் சமுதாயத்தினருக்கு, மத்திய அரசு ஆதரவு வழங்கி வருகிறது. அவர்களது திறமையும், வெற்றியும் தற்போது உலக அளவில் பிரபலமடைந்துள்ளது.
நண்பர்களே, சவால்கள் மக்களில் சிறந்தவர்களைக் கொண்டு வருகிறது என்பதை நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறோம். உண்மையில், இந்திய தொழில்நுட்பவியலாளர்களுக்கு இது மிகவும் பொருந்தும். வாடிக்கையாளரின் வற்புறுத்தல் அல்லது குறுகிய அவகாசத்தில் நீங்கள் ஒரு வேலையை செய்ய வேண்டி வரும்போது, நீங்கள் உங்களிடம் காணாத திறமைகள் வெளிப்படத் தொடங்கும். உலகளாவிய முடக்கம், பயணக் கட்டுப்பாடுகள், பணியிடங்களுக்குச் செல்ல முடியாமல் மக்களை வீடுகளுக்குள்ளே முடக்கி வைத்தன. அந்தச் சமயத்தில் நமது தொழில்நுட்பத் துறையின் விரிதிறனை நாம் காண முடிந்தது. அப்போது, நமது தொழில்நுட்பத்துறை செயலில் இறங்கி, வீடுகளில் இருந்தவாறோ, அல்லது எங்கிருந்தபடியோ, வேலைகள் தொடர்ந்து நடப்பதற்கு தேவையான தொழில்நுட்பத் தீர்வுகளை வழங்கியது. மக்களை ஒன்றிணைப்பதில் புதிய வாய்ப்பு உள்ளதை தொழில்நுட்பத் தொழில் துறை இதன் மூலம் உணர்ந்தது.
கோவிட்-19 பாதையில் இடையூறை ஏற்படுத்தியதே தவிர, முடிக்கவில்லை. இந்த அளவுக்கு தொழில்நுட்ப பயன்பாடு, பத்தாண்டுகளில் ஏற்படவில்லை. சில மாதங்களில் இது நடந்துள்ளது. எங்கிருந்தபடியும் வேலை செய்யலாம் என்ற முறைதான் இனி இருக்கப்போகிறது. கல்வி, சுகாதாரம், பொருட்களை வாங்குதல் மற்றும் பல துறைகளில் அதிக அளவு தொழில்நுட்பப் பயன்பாட்டை நாம் காணலாம். தொழில்நுட்ப உலகைச் சேர்ந்த மிகச் சிறந்த இளைஞர்களை நேரடியாக சந்திக்கும் வாய்ப்பை நான் பெற்றுள்ளதால், இதை என்னால் நம்பிக்கையுடன் கூற முடிகிறது. உங்களது முயற்சிகளின் பயனாக, தொழில்நுட்பத்தை சிறப்பாகப் பயன்படுத்தும் அனுபவத்தை நம்மால் நிச்சயமாக பெற முடிந்துள்ளது. தொழில்நுட்ப உபகரணங்களை மேலும் சிறந்த முறையில் நம்மால் நிச்சயமாக பயன்படுத்தச் செய்ய முடியும்.
நண்பர்களே, தொழில் யுகத்தின் சாதனைகளை நம்மால் காண முடிகிறது. தற்போது, தகவல் யுகத்தின் நடுவில் இருக்கிறோம். நாம் எதிர்பார்த்ததை விட, எதிர்காலம் விரைந்து வந்து கொண்டிருக்கிறது. எனவே, முடிந்த நமது யுகத்தின் சிந்தனைகளை விரைவாக கைவிட வேண்டும். தொழில் யுகத்தில், மாற்றம் என்பது நேராக இருந்தது. ஆனால் , தகவல் யுகத்தில், மாற்றம் என்பது இடையூறுகளைக் கொண்டதாகவும், பெரியதாகவும் உள்ளது. தொழில் யுகத்தில், முதல் நகர்வின் பயன் எல்லாவற்றையும் பொறுத்ததாக இருந்தது. தகவல் யுகத்தில், முதல் நகர்வு பற்றி பொருட்படுத்த தேவையில்லை. சிறந்த நகர்வே அவசியம். தற்போதைய சந்தையின் அனைத்து சமன்பாடுகளையும் குலைக்கும் பொருளை யார் வேண்டுமானாலும், எந்த நேரத்திலும் உருவாக்கலாம்.
தொழில் யுகத்தில், எல்லைகள் பெரிய விஷயமாகும். ஆனால், தகவல் யுகம் எல்லைகளைத் தாண்டியது. தொழில் யுகத்தில், மூலப் பொருள் ஆதாரம் முக்கிய சவாலாகும். அதை சிலர் மட்டுமே அணுக முடிந்தது. தகவல் யுகத்தில், மூலப்பொருளான தகவல், எல்லா இடத்திலும் உள்ளது. அதை அனைவரும் அணுக வேண்டும். தகவல் யுகத்தில் இந்தியா ஒரு நாடாக, முன்னேறி தனித்துவம் வாய்ந்ததாகத் திகழ்கிறது. சிறந்த திறமைகளையும், மிகப்பெரிய சந்தையையும் நாம் கொண்டுள்ளோம். நமது உள்ளூர் தொழில்நுட்பத் தீர்வுகளுக்கு உலக அளவில் செல்லும் ஆற்றல் உள்ளது.. இந்தியா சிறந்த இனிய இடத்தில் உள்ளது. இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு, உலகத்தில் ஈடுபடுத்தப்படும் தொழில் நுட்பத் தீர்வுகளுக்கான தருணம் இது.
நண்பர்களே, நமது கொள்கை முடிவுகள் எப்போதும் தொழில்நுட்ப, புதுமை தொழில்களை தாராளமயமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அண்மையில், ஐடி துறை மீதான சுமையை பல்வேறு வழிகளில் நாம் எளிதாக்கியுள்ளதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இது தவிர, இந்தியாவுக்கான எதிர்கால கொள்கை வரைவுகளை வகுக்கும் வகையில், தொழில்நுட்பத் தொழிலில் சம்பந்தப்பட்டவர்களை ஈடுபடுத்த, நாங்கள் எப்போதும் முயன்று வருகிறோம். நீங்கள் அனைவரும் இந்தத் தொழிலில் முன்னோடிகள். நமது உற்பத்தி அளவை அடுத்த மட்டத்துக்கு கொண்டு செல்வதற்கான ஒருமித்த முயற்சியை நாம் ஏற்படுத்த முடியுமா? இந்த மனப்போக்கு பன்னோக்கில் வெற்றிகரமான உற்பத்தி பொருட்களைத் தயாரிக்கும் சூழல் முறையைக் கட்டமைக்கும் ஆற்றலை உருவாக்கும். இந்த வரைவுகளை உருவாக்குதல், மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பதுடன், அதற்கான வலைகளையும், மீன்கள் நிறைந்த ஏரியையும் கொடுப்பதற்கு ஒப்பாகும்.
இத்தகைய வரைவுஅளவிலான மனப்பான்மையே யுபிஐ ஆகும். டிஜிடல் பரிவர்த்தனை போல, பாரம்பரிய உற்பத்தி அளவிலான சிந்தனையிலிருந்து நாம் விடுபட்டு வரவேண்டும். இந்தியாவுக்கு யுபிஐ-யை நாம் வழங்கினோம். ஒவ்வொருவரும் தங்கள் டிஜிட்டல் பொருட்களை விற்பனை செய்து, பரிவர்த்தனை செய்ய ஒரு குடை போன்ற தளமாகும் இது. இது பல பொருட்களை அதிகாரமயமாக்கியுள்ளது. கடந்த மாதம் 2 பில்லியன்களுக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் பதிவாகியுள்ளது. இதே போல, தேசிய டிஜிட்டல் சுகாதார இயக்கத்துடன் சிலவற்றை நாம் செய்து வருகிறோம். உங்களில் சிலர் ஸ்வமிதா திட்டம் பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். இது நமது ஊரகப் பகுதிகளில் லட்சக்கணக்கான மக்களுக்கு நிலப்பத்திரங்களை வழங்கும் உன்னதத் திட்டமாகும். ட்ரோன்கள் போன்ற தொழில்நுட்பத்தின் மூலம் இது செயல்படுத்தப்படும். இது ஏராளமான தாவாக்களுக்கு முடிவு கட்டுவதுடன், மக்களை அதிகாரம் பெற்றவர்களாக மாற்றும். சொத்து உரிமைகள் வழங்கப்பட்டவுடன், தொழில்நுட்பத் தீர்வுகள் முன்னேற்றத்தை உறுதிப்படுத்தும்.
நண்பர்களே, தொழில்நுட்பமானது, பாதுகாப்புத் துறை பரிணாமம் பெறுவதற்கான வேகத்தை உருவாக்கி வருகிறது. முந்தைய காலத்தில், யாரிடம் சிறந்த யானைப்படை, குதிரைப்படை உள்ளது என்பதைப் பொருத்து போர்கள் நிர்ணயிக்கப்பட்டன. அதன்பின்பு, பீரங்கி ஆற்றல் வந்தது. இப்போது, உலகப் பிரச்சினைகளில் தொழில்நுட்பம் மிக முக்கியமான பங்கு ஆற்றுகிறது. மென்பொருளில் இருந்து ட்ரோன்கள், யுஏவிக்கள் வரை, தொழில்நுட்பம் பாதுகாப்புத் துறையை மறுவடிவமைக்கிறது.
நண்பர்களே, அபரிமிதமான தொழில்நுட்பப் பயன்பாடு அதிகரிப்புடன், தரவு பாதுகாப்பு, இணையவெளி பாதுகாப்பு மிகவும் முக்கியம் வாய்ந்ததாக மாறியுள்ளது. மகத்தான இணையவெளி பாதுகாப்பு தீர்வுகளை வடிவமைப்பதில் நமது இளைஞர்கள் முக்கிய பங்காற்ற முடியும். இணைய வெளி தாக்குதல்கள் மற்றும் தொற்றுகளுக்கு எதிராக டிஜிட்டல் பொருட்களுக்கு சிறந்த முறையில் பாதுகாப்பு தடுப்புகளை உருவாக்க இத்தீர்வுகள் பயன்படும். இன்று நமது பின்டெக் தொழில் நன்றாக செயல்பட்டு வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் எந்தவித தயக்கமும் இன்றி பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது மக்களின் நம்பிக்கையால் ஏற்பட்டுள்ளது. இதனைப் பாதுகாப்பதும், வலுப்படுத்துவதும் மிகவும் அவசியமாகும். வலுவான தரவும், நிர்வாக வரைவும் நமது முன்னுரிமையாகும்.
நண்பர்களே, இன்று நான் முக்கியமாக தகவல் தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தியுள்ளேன். அறிவியல் துறைகளிலும் புதுமைக்கான இத்தகைய வாய்ப்பு மற்றும் தேவை பொருத்தமாகும். உயிரி அறிவியல், பொறியியல் என எந்தத் துறையாக இருந்தாலும், புதுமை, புதிய கண்டுபிடிப்புகள் முன்னேற்றத்திற்கான முக்கிய திறவுகோலாகும். புதுமை, புதிய கண்டுபிடிப்புகள் விஷயத்தில் இந்தியாவுக்கு தெளிவான அனுகூலம் உள்ளது. இதற்கு நமது இளைஞர்களின் திறமையும், ஆர்வமும் காரணிகளாகும்.
நண்பர்களே, நமது இளைஞர்களின் ஆற்றல், தொழில்நுட்பத்தின் வாய்ப்புகள் முடிவற்றவை. சிறந்தவற்றை வழங்கி அவர்களை ஊக்குவிக்க இதுவே சரியான தருணமாகும். நமது ஐடி துறை நம்மை பெருமிதம் கொள்ளச் செய்யும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. உங்களுக்கு எனது நன்றிகள்.
*******
(Release ID: 1674020)
Visitor Counter : 460
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam