பிரதமர் அலுவலகம்

ஜெயினாச்சாரியா ஸ்ரீ விஜய் வல்லப் சுரீஷ்வர் ஜி மகராஜின் 151 வது பிறந்த நாளை குறிக்கும் விதமாக அமைதிக்கான சிலையை திறந்து வைத்து பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரையின் சிறப்பம்சங்கள்

Posted On: 16 NOV 2020 3:55PM by PIB Chennai

வணக்கம்!

என்னுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் கஜபதி ஜெயினாச்சார்யா ஸ்ரீ விஜய் நித்தியானந்த் சுரீஷ்வர் ஜி, ஆச்சார்யா ஸ்ரீ விஜய் சிதானந்த் சூரி ஜி, ஆச்சார்யா ஸ்ரீ ஜெயானந்த் சூரி ஜி, முனி ஸ்ரீ மோக்ஷானந்த் விஜய் ஜி, ஸ்ரீ அசோக் ஜெய் ஜி, ஸ்ரீ சுதிர் மேத்தா ஜி, ஸ்ரீ ராஜ்குமார் ஜி, ஸ்ரீ கீஷுலால் ஜி மற்றும் ஆச்சாரியா ஸ்ரீ விஜய் வல்லப் சுரீஷ்வர் ஜியின் சீடர்களே. பஞ்சாப் கேசரி ஆச்சாரியா ஸ்ரீ விஜய் வல்லப் சூரி ஜியின் நூற்றி ஐம்பதாவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த புதிய வருடம், ஆன்மீகம் சார்ந்த, தாக்கம் ஏற்படுத்தும் ஆண்டாக அமைந்துள்ளது. மகாவீரரின் அகிம்சை, பன்மை மற்றும் உடைமை இல்லாத் தன்மை பறை சாற்றப்படுவதுடன்குரு வல்லபின் செய்திகளும் மக்களுக்கு கொண்டு சேர்க்கப்படுகின்றன. ஸ்ரீ நித்தியானந்த் சுரீஷ்வர் ஜி சற்று முன்னர் பேசுகையில், குஜராத் மாநிலம் நமக்கு 2 வல்லப்களைத் தந்துள்ளதாகக் குறிப்பிட்டார்- அரசியல் துறையில் திரு சர்தார் வல்லபாய் பட்டேல் மற்றும் ஆன்மீகத் துறையில் ஜெயினாச்சாரியா ஸ்ரீ விஜய் வல்லப் சுரீஷ்வர் ஜி மகராஜ். இருவருக்கும் இடையே ஒரு பொருத்தத்தை நான் காண்கிறேன். இருவருமே இந்தியாவின் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்திற்காக தங்களது வாழ்நாளை தியாகம் செய்தார்கள்.

சக ஞானிகளே,

மனிதத்தன்மை, அமைதி, அகிம்சை, சகோதரத்துவ பாதையை, உலகிற்கே இந்தியா கற்றுத் தந்துள்ளது. இன்று திறக்கப்பட்டுள்ள அமைதிக்கான சிலை, அமைதிக்கும், அகிம்சைக்கும், சேவைக்கும் உந்துசக்தியாக விளங்கும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.

நண்பர்களே,

மதம் என்பது கரையில் கட்டப்படுவது அல்ல, அனைவருக்கும் சமமாக கிடைக்கும் ஓடும் நதி ஆகும் என்று ஆச்சாரியா விஜய் வல்லப் ஜி அடிக்கடி கூறுவார்கள். அவரது இந்தக் கூற்று தற்போதைய உலகிற்கு மிகவும் ஏற்றதாக இருக்கிறது. அவரது வாழ்க்கைத் தத்துவங்கள் மீண்டும் மீண்டும் பேசப்பட வேண்டும். அவர் ஒரு தத்துவஞானி மற்றும் சமூக சீர்திருத்தவாதி. அவர் தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு பொது சேவகரும் கூட. கடவுளுக்கு சமமான கவிஞர்களான துளசிதாஸ் ஆனந்தன் மற்றும் மீரா போன்றவர் அவர். எனவே, அவரது போதனைகளும், கருத்துக்களும் புதிய தலைமுறைக்கு எட்டுவது மிகவும் அவசியம்.

நண்பர்களே,

இந்தியாவின் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் நாட்டில் எப்போதெல்லாம் உள்நாட்டுத் தீர்வு தேவைப்பட்டதோ அப்போதெல்லாம் துறவிகளின் பாரம்பரியம் கை கொடுத்துள்ளது. ஆச்சார்யா விஜய் வல்லப் ஜியும் இது போன்ற ஒரு ஞானி. அடிமை காலகட்டத்திலும் நாட்டின் கிராமப்புறங்களுக்கும், நகரங்களுக்கும் நடந்தே சென்று நாட்டின் அடையாளம் குறித்த தாக்கத்தை ஏற்படுத்த முயன்றார். இன்று நாம் நமது சுதந்திரத்தின் 75 ஆவது ஆண்டை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம். இந்திய விடுதலைக்கான அடித்தளம், பக்தி இயக்கத்திலிருந்து துவங்கியது என்பதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். பக்தி இயக்கத்தின் மூலமாக ஞானிகள், மகான்கள், ரிஷிகள், ஆச்சாரியர்கள், இந்தியாவின் ஒவ்வொரு மூலை முடுக்குகளிலும் தோன்றியிருக்கிறார்கள். சுதந்திரப் போராட்டத்திற்கு அடித்தளமிட்டவர்களில் குரு வல்லபிற்கு மிகப் பெரும் பங்கு உள்ளது

பக்தி இயக்கம் வழியாக சுதந்திரப் போராட்டத்தின் போது செயல்பட்டதைப் போன்று  இன்றைய இருபத்தியோராம் நூற்றாண்டில் இந்தியா தற்சார்பு அடைவதற்கு தேவையான அடித்தளங்களை தயார் செய்வது ஆச்சாரியர்கள், முனிவர்கள், கதாகாலக்ஷேபம் செய்வோரின் கடமை என்று குறிப்பிட்டுக் கொள்கிறேன். நீங்கள் எங்கு சென்றாலும் யாருடன் பேசினாலும் உள்ளூர் பொருட்களை ஊக்குவிக்குமாறு நாட்டில் உள்ள அனைவரையும் வலியுறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இந்த மனிதர்களால் பல்வேறு சுதந்திரப் போராட்ட வீரர்கள் ஈர்க்கப்பட்டார்கள். பண்டித மதன் மோகன் மாளவியா, மொரார்ஜி தேசாய் போன்ற பல்வேறு மக்கள் தலைவர்கள் இவர்களைச் சந்தித்து ஆலோசனை பெற்றார்கள். இந்தியா சுதந்திரம் அடையவும், சுதந்திர இந்தியா எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் அவர்கள் கனவு கண்டிருந்தார்கள். குறிப்பாக சுதேசி மற்றும் தற்சார்பு இந்தியாவிற்காக அவர்கள் குரல் கொடுத்தார்கள். தங்கள் வாழ்நாள் முழுவதும் கதராடை அணிந்து சுதேசி உறுதிமொழியை ஏற்று இருந்தார்கள். ஞானிகளின் வார்த்தைகள் எவ்வாறு சாகாவரம் பெற்று நிலைத்து நிற்கும் என்பதற்கு ஆச்சாரியா விஜய் வல்லப் ஜியின் முயற்சிகள் நேரடி எடுத்துக்காட்டு. சுதந்திரத்திற்கு முன்பாக நாடு குறித்த அவரது கனவு தற்சார்பு இந்தியா பிரச்சாரத்தின் மூலம் தற்போது நிறைவேறி வருகிறது.

நண்பர்களே,

ஆச்சாரியா வல்லப் ஜியின் சமூகத் தத்துவங்களால் கவரப்பட்டு ஏராளமான இளைஞர்கள் இன்று சமூக சேவையில் ஈடுபட்டு வருகின்றனர். சேவை, கல்வி, தற்சார்பு ஆகியவை திரு ஆச்சார்யாவின் மனதுக்கு மிகவும் நெருக்கமானவை என்பதை சக ஞானிகளான நீங்கள் அறிவீர்கள். அடிமைக் காலத்தின் போது, பல்வேறு சவால்களுக்கு இடையேயும் கல்வி குறித்து அவர் போதித்து, குருகுலங்கள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை  நிறுவினார். அனைத்து வீடுகளுக்கும் கல்வி வெளிச்சம் வழங்கப்படவேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். எனினும் ஆங்கிலேயர்கள் தயாரித்த கல்வி முறையால் இந்திய சுதந்திரத்திற்கும், வளர்ச்சிக்கும் பயன் ஏற்படாது என்பதை அவர் அறிந்திருந்தார். எனவே, கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இந்திய  கலாச்சாரம் சார்ந்த கல்வியை அவர் ஏற்படுத்தினார். ஒரு வகையில் கல்வித் துறையில் இந்தியா தற்சார்பு அடைவதற்கான பிரச்சாரத்தை ஆச்சாரியா விஜய் வல்லப் ஜி துவக்கினார். பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசத்தில் இந்திய கலாச்சாரத்துடன் கூடிய கல்வி நிறுவனங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

நண்பர்களே,

ஆச்சார்யா ஜியின் கல்வி நிறுவனங்கள் தற்போது ஒரு சோலையாக செயல்படுகின்றன. இந்திய கலாச்சாரத்தைப் போதிக்கும் பள்ளிகளாக இவை தற்போது சேவையாற்றி வருகின்றன. கடந்த நூறு ஆண்டுகளில் ஏராளமான திறமையான இளைஞர்கள் இந்த நிறுவனங்களில் இருந்து தேர்ச்சி அடைந்துள்ளனர். பல்வேறு தொழில் அதிபர்கள், தலைமை நீதிபதிகள், மருத்துவர்கள், பொறியாளர்கள் இந்த நிறுவனங்களில் பயின்று நாட்டிற்கு தங்கள் பங்களிப்பை அளித்து வருகின்றனர். இந்த நிறுவனங்களில் மற்றுமொரு முக்கிய அம்சம் உள்ளது, அது பெண் கல்வி. பெண் கல்விக்காக இந்த நிறுவனங்கள் அளித்து வரும் பங்களிப்பிற்கு நாடு என்றும் கடன்பட்டிருக்கும். அசாதாரண காலகட்டத்திலும் பெண் கல்வியை அவர் ஊக்குவித்தார். பல்வேறு பெண்கள் விடுதியை நிறுவி, முக்கியப் பொறுப்புகளில் அவர்களை ஈடுபடச் செய்தார்ஜெயின் மதத்தைச் சார்ந்த பெண்கள் பூஜைகளில் ஈடுபடும் பாரம்பரியத்தை அவர் துவக்கினார். அவரது இந்த செயல்களுக்குக் காரணம் பெண்களுக்கு சமூகத்திலும், கல்வியிலும் சமவாய்ப்புகள் வழங்கப்படவேண்டும் என்பதே. பாகுபாடு முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். இன்று இந்த முயற்சியில் நாட்டில் எவ்வளவோ முன்னேற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பதை நீங்கள் காண்பீர்கள். முத்தலாக் போன்ற சட்ட விரோத செயல்களுக்கு எதிராக சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. பெண்கள் பணிபுரிவதில் தடையாக இருந்த பல்வேறு துறைகளில் அவர்களுக்கு வாய்ப்புகள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன. ராணுவப் படைகளிலும் நம் நாட்டு மகள்கள் தங்களது திறமையை நிரூபிக்க பல வாய்ப்புகள் வழங்கப்படுகிறதுமேலும் தேசிய கல்விக்கொள்கை தற்போது நாட்டில் செயல்படுத்தப்படுகிறது. இந்தக் கொள்கை நவீன கல்வியை வழங்குவதுடன் பெண்களுக்குப் புதிய வாய்ப்புகளையும் ஏற்படுத்தும்.

நண்பர்களே,

ஆச்சார்யா வல்லப் ஜி, ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற தாரக மந்திரத்தைக் கடைப்பிடித்து வந்தார். மனித நேயத்தின் உண்மைத் தன்மையைப் பின்பற்றி சாதி, மத மற்றும் சமூக எல்லைகளைத் தாண்டி அனைவரும் வளர்ச்சி அடைவதற்காக செயல்பட்டார். சமூகத்தில் திறமையான துறைகளைச் சேர்ந்தவர்களும், வளர்ச்சியில் கீழ் மட்டத்தில் உள்ள மக்களுக்கு சேவை புரிய அவர் காரணியாக இருந்தார். மகாத்மா காந்தியின் போதனைகளை குரு வல்லப் ஜி பின்பற்றினார். ஏழைகளுக்கும் அடிப்படை வசதிகள் வழங்கப்படுவதை அவர் உறுதி செய்தார். அவர் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவுகளை இன்று நாம் காண்கிறோம். அவரால் ஈர்க்கப்பட்டே நாட்டின் பல்வேறு நகரங்களில் ஏழைகளுக்கென விடுதிகளும், மருத்துவமனைகளும் துவங்கப்பட்டு அவர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. ஏழைக் குழந்தைகளின் எதிர்காலத்திற்கும், தாய்மார்கள், சகோதரிகளின் வாழ்வாதாரத்திற்கு உதவும் ஏழ்மைக் குடும்பங்களின் சிகிச்சைகளுக்கும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள்  பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ளன.

நண்பர்களே,

ஆச்சாரியா விஜய் வல்லப்ஜியின் வாழ்க்கை முழுவதும் பிறருக்காக இரக்கமும் அன்பும் கொண்டிருந்ததாக அமைந்திருந்தது. இதன் காரணமாக பல்வேறு பறவை மருத்துவமனைகளும், கோசாலைகளும் அவரது ஆசீர்வாதங்களுடன் நாட்டில் இயங்கி வருகின்றன. இவை சாமானிய நிறுவனங்கள் அல்ல. இவை இந்தியாவின் நெறிமுறைகளைப் பிரதிபலிக்கின்றன இவைதான் இந்தியா மற்றும் இந்திய கலாச்சாரத்தின் அடையாளங்கள்.

நண்பர்களே,

ஆச்சார்யா விஜய் வல்லப் ஜி

தமது வாழ்நாளிலே தியாகம் செய்த மனித மதிப்பை இன்று நாடு மீண்டும் வலியுறுத்துகிறது. கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள சவாலான காலம், நமது சேவை மற்றும் ஒற்றுமையை சோதிக்கும் உரைகல்லாக இருந்தது. எனினும், இந்தக் காலகட்டத்தில் ஏழைகளுக்கு நல்வாழ்வை அளிப்பதோடு  உலகிற்கே எடுத்துக்காட்டாக நம்நாடு திகழ்ந்துள்ளது.

நண்பர்களே,

மனித நேயத்திற்கு சேவை புரிவதே அனைத்து இந்தியரின் மதம்என்று ஆச்சார்யா விஜய் வல்லப் சூரி ஜி கூறுவார். அவரது இந்த கூற்றை தாரக மந்திரமாகப் பின்பற்றி நாம் முன்னேற வேண்டும். நமது ஒவ்வொரு செயல்களினாலும் நமது நாடு எவ்வாறு பயன் அடையும் என்றும் நாட்டிலுள்ள ஏழை மக்கள் எவ்வாறு பயன் அடைவார்கள் என்பதையும் நாம் எண்ண வேண்டும். நான் ஏற்கனவே கூறிய உள்ளூர் பொருட்களை ஊக்குவிப்பது மிகப்பெரிய உந்து சக்தியாகும். இதனை ஞானிகள் முன்னெடுத்தும் செல்வார்கள். ஞானிகள், மகான்கள், முனிவர்கள் இந்த கருத்தை எடுத்துச் செல்வார்கள். இந்த வருட தீபாவளி மற்றும் இதர பண்டிகைகளின் போது உள்ளூர் பொருளாதாரத்திற்கு கிடைத்த ஆதரவு புதிய ஆற்றலை நமக்கு தரும். ஆச்சார்யா விஜய் வல்லபின் 150-ஆவது பிறந்தநாள் விழாவில் அவர் வாழ்க்கையில் தொடங்கிய அனைத்தையும் நாம் முழு ஈடுபாட்டுடன் செயல்படுத்துவோம் என்பதை உறுதியிட்டு தெரிவித்துக் கொள்வோம். பொருளாதார ரீதியாக மட்டுமல்லாமல், சிந்தனையின் மூலமாகவும் இந்தியா தன்னிறைவு அடைய நாம் இணைந்து செயல்படுவோம்.

*****


(Release ID: 1673461) Visitor Counter : 200