சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட்-19க்கு ஒருங்கிணைந்த சிகிச்சை முறை : பிரிக்ஸ் மாநாட்டில் டாக்டர் ஹர்ஷ் வர்தன் பேச்சு

Posted On: 11 NOV 2020 5:12PM by PIB Chennai

கொவிட்-19-க்கு அனைவருக்கும் கிடைக்கக்கூடிய பரவலாக்கப்பட்ட, ஆனால் ஒருங்கிணைந்த சிகிச்சை முறை யுக்தியை பின்பற்றியதாக, பிரிக்ஸ் சுகாதாரத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.

 

பிரிக்ஸ் நாடுகளின் சுகாதாரத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன்  இன்று காணொலிக் காட்சி மூலம் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

நவீன உலகம் மிகப் பெரிய சுகாதார சவால்களை சந்தித்தபின், நாம் இன்று காணொலிக் காட்சி மூலம் சந்திக்கிறோம். முதலில், கொவிட்-19 முன்கள பணியாளர்களுக்கு நன்றி செலுத்த விரும்புகிறேன். உலக சுகாதார நெருக்கடி நேரத்தில், அவசர நிலையை சந்திக்கும் விழிப்புணர்வை நாம் பெற்றுள்ளோம். பிரிக்ஸ் அமைப்பில் பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நாடுகள் இடம் பெற்றுள்ளன. உலகின் 40% மக்கள் பிரிக்ஸ் நாடுகளில் உள்ளனர். கொவிட் 19 உட்பட பல சுகாதார சவால்களை  கடந்து செல்ல பிரிக்ஸ் அமைப்பில் உள்ள பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் பணியாற்றி வருகின்றன.

நமது சுகாதார முறைகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்பதை கொவிட்-19 உணர வைத்துள்ளது. இந்தியாவில் கொவிட் 19 தொற்று தொடங்கியதிலிருந்தே, எங்களது தொலைநோக்கு பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து பல தனிச்சிறப்பான யுக்திகளை கையாண்டன. பரவலாக்கப்பட்ட, ஆனால் ஒருங்கிணைந்த சிகிச்சை யுக்தியை நாங்கள் பின்பற்றி அனைவருக்கும் சம அளவில் கிடைக்கூடிய சுகாதார வசதிகளை வழங்கினோம். இதுதான் கொவிட்-19-க்கு எதிரான  போராட்டத்தில் எங்கள் தனிச்சிறப்பான யுக்தியின் உந்து சக்தியாக இருந்தது. 

முன்கூட்டியே பரிசோதனை நடத்தி, பயணிகளை தனிமைப்படுத்தி, முடக்கங்களை அறிவித்து, கட்டுப்பாடு மண்டலங்களை உருவாக்கி நோய் பரவலைக் கட்டுப்படுத்தினோம்.

பெருந்தொற்று மேலாண்மை முயற்சிகளில் ஆரோக்கிய சேது கைபேசி செயலி உட்பட பல தொழில்நுட்ப புதுமைகள் பயன்படுத்தப்பட்டன. முன்னணி சுகாதாரப் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்க ஐகாட் என்ற ஒருங்கிணைந்த பயிற்சி இணையதளம் உருவாக்கப்பட்டது.

பிபிஇ, வென்டிலேட்டர்களின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க 24 மணிநேரமும் பணியாற்றினோம். அனைத்து துறையிலும் தன்னிறைவு பெற தற்சார்பு இந்தியா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

 

கடந்த சில மாதங்களாக நாம் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். கொவிட்-19 மேலாண்மை நடவடிக்கையால்நாம் வலுவாக மீண்டு வருவோம்  என்று நம்புகிறேன். பயனுள்ள வகையில் உங்களுடன் இணைந்து செயல்படுவதை எதிர்நோக்கியுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1671948

----- 


(Release ID: 1672051) Visitor Counter : 151