புவி அறிவியல் அமைச்சகம்

தேசிய பருவமழை இயக்கம் மற்றும் திறன் கொண்ட கணினி பயன்பாட்டு அமைப்புகளுக்காக ரூபாய் ஆயிரம் கோடியை இந்தியா முதலீடு செய்திருப்பதன் வாயிலாக ரூபாய் 50,000 கோடி அளவிலான பலன்களைப் பெற்று வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் 1.07 கோடி விவசாயக் குடும்பங்களும், 53 லட்சம் மீனவக் குடும்பங்களும் பயனடைந்துள்ளன- என்சிஏஈஆர் அறிக்கை

प्रविष्टि तिथि: 03 NOV 2020 6:22PM by PIB Chennai

"தேசிய பருவமழை இயக்கம் மற்றும் திறன் கொண்ட கணினி பயன்பாட்டு அமைப்புகளுக்காக மத்திய புவி அறிவியல் அமைச்சகம் செலவு செய்துள்ள ஒவ்வொரு ரூபாய்க்கும் 50 ரூபாய்க்கான பலன்களை நாட்டின் பொருளாதாரம் அடையும்," என்று தேசிய செயல்முறை சார்ந்த பொருளாதார ஆராய்ச்சிக் குழு (என்சிஏஈஆர்) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய பருவமழை இயக்கம் மற்றும் திறன் கொண்ட கணினி பயன்பாட்டு அமைப்புகளுக்கான முதலீட்டினால் ஏற்படக் கூடிய பொருளாதார நலன்கள் குறித்த அறிக்கையை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, புவி அறிவியல் துறைகளுக்கான அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் இன்று வெளியிட்டார்.

தில்லியில் இயங்கும் என்சிஏஈஆர் என்பது  பொருளாதாரக் கொள்கைகள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபடும் ஓர் தனியார் அமைப்பாகும். இந்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின் வேளாண் குறித்த வானிலை ஆராய்ச்சி சேவைகளை நாட்டில் உள்ள ஏராளமான விவசாயிகள் பயன்படுத்தி, அதன் மூலம் பயனடைந்து வருவதாகக் கூறினார்.

 "விவசாயிகளுக்காக, இந்திய வானிலை ஆராய்ச்சி மையம், தொகுதிவாரியான வானிலை அறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கைகளை அண்மையில் துவக்கியுள்ளது. தற்போது 2000 தொகுதிகளில் உள்ள விவசாயிகள் இந்த சேவையினால் பயனடைந்து வருகிறார்கள். இன்றளவில் செல்பேசி செயலி, மேக்தூத் மற்றும் சமூக ஊடகங்கள் உள்ளிட்ட பல்வேறு வழிகளின் மூலமாக சுமார் 4.3 கோடி விவசாயிகளுக்கு இந்த முன்னறிவிப்புகளும் எச்சரிக்கைகளும் சென்று சேர்கின்றன" என்று அவர் தெரிவித்தார்.

கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையமான ஐஎன்சிஓஐஎஸ், தினமும் கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு மாநில வாரியாக முன்னறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கைகளை வழங்குவதாகக் குறிப்பிட்ட அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், பல்வேறு தகவல் தொடர்பு தொழில் நுட்பங்களின் வாயிலாக அறிவிக்கப்படும் இந்த தகவல்களை தற்போது 7 லட்சம் மீனவர்கள் பயன்படுத்தி வருவதாகக் கூறினார்.

இன்று வெளியிடப்பட்ட அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

*தேசிய பருவமழை மிஷன் மற்றும் திறன் கொண்ட கணினி பயன்பாட்டு அமைப்புகளுக்காக ரூபாய் ஆயிரம் கோடியை இந்தியா முதலீடு செய்திருப்பதன் வாயிலாக ரூபாய் 50,000 கோடி அளவிலான பலன்களைப் பெற்று வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் 1.07 கோடி விவசாயக் குடும்பங்களும், 53 லட்சம் மீனவக் குடும்பங்களும் பயனடைந்துள்ளன.

* கால்நடைகளுக்கு தடுப்பு மருந்துகள் வழங்குவது அவற்றின் இருப்பிடங்களை புதுப்பிப்பது உள்ளிட்டவைகளுக்கு 76 சதவீத கால்நடை உரிமையாளர்கள் வானிலை சார்ந்த தகவல்களை பயன்படுத்தி வருகின்றனர்.

* கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் முன், 82 சதவீத மீனவர்கள் கடல் குறித்த முன்னறிவிப்பை பயன்படுத்துகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1669813

----


(रिलीज़ आईडी: 1669918) आगंतुक पटल : 273
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , Assamese , Manipuri , English , Urdu , हिन्दी