மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் வேதிப் பொறியியல் துறையின் பொன்விழா கட்டிடத்தைக் காணொலி வாயிலாக மத்திய கல்வி அமைச்சர் திறந்து வைத்தார்
Posted On:
20 OCT 2020 7:28PM by PIB Chennai
திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் (என் ஐ டி) வேதிப் பொறியியல் துறையின் பொன்விழாக் கட்டிடத்தை மத்திய கல்வி அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் 'நிஷாங்க்' காணொலி வாயிலாக இன்று திறந்து வைத்தார். திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் தலைவர் திரு பாஸ்கர் பட், இயக்குநர் டாக்டர் திருமதி மினி ஷாஜி தாமஸ், வேதிப் பொறியியல் துறைத் தலைவர் டாக்டர் திருமதி கே எம் மீரா ஷெரீஃபா பேகம் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், தரவரிசையில் சிறந்து விளங்கும் தொழில்நுட்பக் கழகத்துக்கு தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார். திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் மாணவர்களின் தயாரிப்புகளுக்கு காப்புரிமை பெறுவது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருவது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இந்த தொழில்நுட்பக் கழகம், மாணவர்களை வருங்காலத்தில் தொழிலதிபர்களாக ஆக்கும் சரியான பாதையில் செல்வதாகவும் அமைச்சர் கூறினார். தற்சார்பு இந்தியா உள்ளிட்ட அரசின் திட்டங்களில் திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகம் இணைந்து கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார். உன்னத் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் தொழில்நுட்ப கல்வி மாணவர்கள், ஊரக மாணவர்களை ஜெஈஈ,என்ஐடிடி போன்ற தேர்வுகளுக்குப் பயிற்சி அளிப்பதை அமைச்சர் பாராட்டினார். நாட்டிலுள்ள ஒவ்வொரு மாணவரும் ஒரு கிராமப்புற மாணவருக்கு கல்வி பயிற்சி அளித்து உதவினால் நம் நாடு வரும் ஆண்டுகளில் பெரும் வளர்ச்சி அடையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். கொவிட் பரவல் காலத்தில் ஆன்லைன் வகுப்புகள், பாதுகாப்பான சூழல் மற்றும் சமூகத் தொண்டு புரிந்து வரும் திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தை அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் 'நிஷாங்க்' பாராட்டினார்.
ஸ்வரிம் பாரத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் வகையில் பொன்விழாக் கட்டிடம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 7.65 கோடி ரூபாய் மதிப்பில் ஆய்வகங்கள், ஆராய்ச்சிக் கூடங்கள், கூட்ட அரங்கம் உள்ளிட்ட வசதிகள் கொண்டதாக இந்த கட்டிடம் அமைக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1666186
-----
(Release ID: 1666270)
Visitor Counter : 115