நிதி அமைச்சகம்
ரூ.100 கோடிக்கு மேல் கணக்கு காட்டாமல் வழக்கறிஞர் வரி ஏய்ப்பு தில்லி, ஹரியானாவில் வருமான வரித்துறை அதிரடி சோதனை
Posted On:
15 OCT 2020 7:34PM by PIB Chennai
வர்த்தக வழக்குகளில் ஆஜராகும் தில்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், வர்த்தக பிரச்னைகளை தீர்க்க வரும் வாடிக்கையாளர்களிடம் ரூ.100 கோடிக்கு மேல் பணம் பெற்றுக் கொண்டு, அவற்றை முறையாக கணக்கு காட்டாமல் இருப்பது வருமான வரித்துறைக்கு தெரியவந்தது. இதனடிப்படையில் வருமான வரித்துறையினர் தில்லி, தேசிய தலைநகர் மண்டலம் மற்றும் ஹரியானாவில் 38 இடங்களில் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.
இந்த தேடுதல் வேட்டையில் ரூ.5.5 கோடி ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 10 லாக்கர்கள் முடக்கப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாக கணக்கில் காட்டப்படாத பண பரிமாற்ற ஆவணங்கள், முதலீடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த வக்கீலுடன் இணைந்து பணியாற்றும் மற்ற வக்கீல்கள் நிதி நிறுவனம் மற்றும் கட்டுமான நிறுவனங்களை நடத்துபவர்களாகவும் உள்ளனர். இவர்கள், தங்கள் பண பரிவர்த்தனைகளை கணக்கில் காட்டாததும், பறிமுதல் செய்யப்பட்ட டிஜிட்டல் தகவல்கள் மூலம் தெரியவந்தது.
வர்த்தக வழக்கு பிரச்னையை தீர்ப்பதற்காக வாடிக்கையாளர் ஒருவருடம் ரூ.117 கோடி கட்டணம் பெற்ற வக்கீல் ரூ.21 கோடியை மட்டும் காசோலை மூலமாக பெற்றதாக கணக்கு காட்டியுள்ளார். மற்றொரு வழக்கில் ஒரு இன்ஜினியரிங் நிறுவனத்திடம் இருந்து ரூ.100 கோடிக்கு மேல், அந்த வக்கீல் பணம் பெற்றுள்ளார்.
இந்த கணக்கில் காட்டப்படாத பணங்கள் எல்லாம், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வர்த்தக கட்டிடங்கள் மற்றும் பள்ளிகளை நடத்தும் அறக்கட்டளைகளை கையகப்படுத்துவதிலும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில், முக்கிய பகுதிகளில் சொத்துக்களை வாங்க ரூ.100 கோடிக்கு மேல் முதலீடு செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் மீட்கப்பட்டன. வக்கீல் மற்றும் அவரது கூட்டாளிகள் பல பள்ளிகளையும் விலைக்க வாங்கியுள்ளனர். இதற்கு ரூ.100 கோடிக்கு மேல் ரொக்கமாக செலுத்தியுள்ளனர். இங்கு மாணவர்கள் சேர்க்கைக்காகவும் பல கோடிகளை பெற்றுள்ளனர். இது தொடர்பாக மேலும் விசாரணைகள் நடக்கின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1664884
**********************
(Release ID: 1664950)
Visitor Counter : 238