சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் திரு அஷ்வினி குமார் சௌபேவும், தென்கிழக்கு ஆசியாவுக்கான இங்கிலாந்து அமைச்சரும் இருநாட்டு உறவுகள் குறித்து காணொலி காட்சியின் மூலம் கலந்துரையாடினர்
கொவிட்-19 காலத்தில் பாராசிட்டமால் மருந்துகளை இந்தியாவில் இருந்து கொள்முதல் செய்ய உதவியதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு இங்கிலாந்து அமைச்சர் நன்றி தெரிவித்தார்
Posted On:
05 OCT 2020 6:29PM by PIB Chennai
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் திரு அஷ்வினி குமார் சௌபேவும், தென்கிழக்கு ஆசியாவுக்கான இங்கிலாந்து அமைச்சர் திரு தாரிக் அஹமதும், சுகாதாரத்துறையில் இரு நாட்டு உறவுகள் குறித்து காணொலி காட்சி மூலம் இன்று கலந்துரையாடினர். கொவிட்-19 தடுப்பூசியை பொது மக்களிடம் கொண்டு சேர்ப்பது தொடர்பாக இரு நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டது.
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் அனைவரும் ஒன்றிணைந்திருப்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர் திரு அஷ்வினி குமார் சௌபே, வாசுதெய்வ குடும்பகம் என்ற இந்தியாவின் பாரம்பரியத்தை நினைவு கூறும் வகையாக உலகமே ஒரு குடும்பமாக இணைந்து கொரோனா பரவலை தடுக்க போராடி வருவதாக கூறினார்.
இந்தியா-இங்கிலாந்துக்கிடையே கடந்த 2013 ஆம் ஆண்டு ஜெனிவாவில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நினைவுகூர்ந்த அமைச்சர், சுகாதாரத் துறையில் இருநாடுகளின் உறவு வலுவாக இருப்பதாகத் தெரிவித்தார்.
அடுத்த காரியக்குழு கூட்டத்தில், ஆயுஷ்மான் பாரத் திட்டம் குறித்து விவாதிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த அமைச்சர் திரு சௌபே, மருந்துகளை ஏற்றுமதி செய்தல், அவற்றை ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்டவை குறித்து இரு நாடுகளும் மேலும் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
கொவிட்-19 காலத்தில் பாராசிட்டமால் மருந்துகளை இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு கொள்முதல் செய்ய உதவியதற்கு, பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு, இங்கிலாந்து அமைச்சர் திரு தாரிக் அஹமது நன்றி தெரிவித்துக் கொண்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்தி குறிப்பு ஆங்கிலத்தில் இங்கே காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1661796
**********************
(Release ID: 1661843)
Visitor Counter : 181