ஜல்சக்தி அமைச்சகம்

'அனைவருக்கும் தண்ணீர்' என்ற இயக்கத்தை முன்னெடுத்து நடத்தும் பஞ்சாப் கிராம தலைவி

சமூக பங்களிப்புடன் தமது கிராமத்தை மாற்றி அமைக்கும் ‘ஜல் ஜீவன் மிஷன்' திட்ட போராளி

Posted On: 04 OCT 2020 2:03PM by PIB Chennai

பஞ்சாப் மாநிலம் பத்தின்டா மாவட்டத்தில் உள்ள மேம்ஹா பாக்வனா கிராமத்தின் தலைவர் திருமதி குல்விந்தர் கார் ப்ரார். இதர அரசு ஊழியர்களைப் போல் அல்லாமல் இவரது வாழ்க்கை முற்றிலும் வேறுபட்டது.

தனது இளம் வயது முதலே குடிநீர் தட்டுப்பாட்டால் தமது கிராம பெண்களின் இன்னல்களைக் கண்டு வந்தார். அப்போது முதலே இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று அவர் முடிவெடுத்தார். கிராமத் தலைவரான பின்பு, இந்த குடிநீர் பிரச்சினையை தீர்க்க அதிக நிதி தேவைப்படும் என்பதை அவர் உணர்ந்தார். ஜல் ஜீவன் மிஷன் திட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு வீடுகளுக்கு வழங்கப்பட்ட குடிநீர் இணைப்புகள் மேஹ்மா கிராமத்திற்கும் கிடைக்கப்பெற்றது.

இதைத் தொடர்ந்து கிராம குடிநீர் மற்றும் சுகாதார குழு பிரதிநிதிகள் வீடுகள்தோறும் சென்று பொதுமக்களிடம் குடிநீர் இணைப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். பெரும்பான்மையான மக்கள் இதற்கு ஒத்துழைத்தாலும், ஒரு சிலர், இதற்காக தேவைப்படும் கட்டணத்தை சுட்டிக்காட்டி தங்கள் இயலாமையை வெளிப்படுத்தினர். இதனால் கிராம பஞ்சாயத்து, அவர்களுக்கான கட்டணத்தை தள்ளுபடி செய்ய முடிவு செய்து, அதற்கான தொகையை பஞ்சாயத்தே செலுத்தியது.

குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் அது குறித்த விவாதம் அனைத்து பஞ்சாயத்து கூட்டங்களிலும் இடம்பெற்றது. திருமதி குல்விந்தர், கிராமத் தலைவராக இருந்த போதிலும், கூட்டங்களில் பங்கேற்கும் பெண்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. எனினும் இன்று 80 சதவீத பெண்கள் கிராமசபை கூட்டங்களில் கலந்து கொண்டு, தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தண்ணீரின் முக்கியத்துவம் குறித்து பெண்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில், அனைத்து மகளிர் கிராம தண்ணீர் மற்றும் சுகாதார குழு ஏற்படுத்தப்பட்டது.

ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் துணையோடு ஒரு அமைதிப் புரட்சி தற்போது கிராமங்களில் நடைபெற்று வருகின்றது. வீடுகளில் வழங்கப்பட்டுள்ள தண்ணீர் இணைப்பின் மூலம் பெண்களின் வாழ்க்கை பெரிதும் மாற்றம் கண்டுள்ளது. மேலும் கிராமத்தில் வழங்கப்பட்டுள்ள தண்ணீர் இணைப்பு காரணமாக பள்ளிகளில் பயிலும் பதின்பருவ மாணவிகளை எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

கிராம பஞ்சாயத்தால் அமைக்கப்பட்டுள்ள ஐந்து நபர் குழு, கிராமத்திற்கு வழங்கப்படும் தண்ணீரின் சுத்தம் மற்றும் தன்மையைக் குறித்து தொடர்ந்து பரிசோதித்து வருகிறது.

ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் உதவியுடன் சமூக பங்களிப்போடு அனைத்து வீடுகளும் தண்ணீர் இணைப்பு கிடைக்கப்பெற்று, இன்று மேஹ்மா பாக்வானா கிராமம் முழுவதும் பிற கிராமங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது. இதன் மூலம் 1484 கிராம மக்கள் பயனடைகிறார்கள். 

திருமதி குல்விந்தர் கார், தமது அடுத்த லட்சியத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார். கிராமத்தில் சூரிய ஒளி விளக்குகளை   பொருத்துவது,சுய உதவிக்குழுக்களின் துணையோடு கிராமப் பெண்கள் தொழில் தொடங்கி குடும்ப நலனை உயர்த்த வேண்டும், முதலியவை அவரது முக்கிய லட்சியம்.

ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின்படி வரும் 2024 ஆம் ஆண்டுக்குள் மாநில அரசுகளின் துணையோடு அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் குடிநீர் வழங்க இலக்கு நிர்ணயப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருடத்தில் நாடு முழுவதும் சுமார் 2 கோடியே 30 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போது 5 கோடியே 50 லட்சம் வீடுகளுக்கு சுத்தமான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஜல் ஜீவன் மிஷன் திட்டத்ததை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்று அண்மையில் பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்கள் மற்றும் கிராம பஞ்சாயத்துகளுக்கு கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

****************



(Release ID: 1661600) Visitor Counter : 478