ஜவுளித்துறை அமைச்சகம்

ஜவுளி மற்றும் கைத்தறி தொழில்களின் வளர்ச்சிக்கான பல்வேறு அறிவிப்புகளை நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் திருமதி ஸ்மிரிதி இரானி வெளியிட்டார்

Posted On: 17 SEP 2020 1:43PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் பல்வேறு உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு எழுத்து மூலம் பதில் அளித்த மத்திய ஜவுளி அமைச்சர் திருமதி ஸ்மிரிதி ஜுபின் இரானி, கீழ்க்கண்ட தகவல்களை அளித்தார்.  

 

ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்காவுக்கான திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. மேலும், பெரும் ஜவுளிப் பூங்காக்களை அமைப்பதற்கான திட்டம் ஆலோசனையில் உள்ளது. ஜவுளி உள்கட்டமைப்பை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

 

4.5 கோடி நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பையும், 6 கோடிப் பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பையும் அளித்து நாட்டின் மிகப்பெரிய வேலைவாய்ப்பு ஆதாரமாக விளங்கும் ஜவுளித் துறையில் வேலைவாய்ப்புகளை இன்னும் அதிகப்படுத்துவதற்கு அமைச்சகம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

 

ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்காவுக்கான திட்டத்தின் கீழ், ரூ 40 கோடி உச்சவரம்புடன் கூடிய 40 சதவீதம் மானியத்தை உள்கட்டமைப்புக்காகவும், வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்காகவும் ஜவுளிப் பூங்காக்களுக்கு அரசு அளித்து வருகிறது.

 

ஜவுளி அமைச்சகம் செயல்படுத்தி வரும் தேசிய கைத்தறி வளர்ச்சித் திட்டம் மற்றும் விரிவான கைத்தறி தொகுப்பு வளர்ச்சித் திட்டத்தில், வட்டார அளவிலான தொகுப்புகளின் கீழ், பொது வசதி மையங்கள் அமைக்கலாம். இதன் மூலம், நெசவாளர்களின் உள்ளூர் தேவைகளுக்கான தொழில்நுட்ப வசதிகளை பூர்த்தி செய்ய முடியும்.

 

அகில இந்திய கைவினைப் பொருட்கள் வாரியம் மற்றும் அகில இந்திய கைத்தறி வாரியம் ஆகியவற்றை கலைக்க அவற்றின் செயல்பாடுகளை தீர ஆராய்ந்த பின் முடிவெடுக்கப்பட்டது.

 

அதே சமயம், நெசவாளர்கள் சேவை மையம் மற்றும் மாநில கைத்தறி துறைகள் பல்வேறு விஷயங்களில் நெசவாளர்களுடன் இணைந்து நன்றாக செயல்பட்டு வருகின்றன.

 

கைத்தறித் துறையின் வளர்ச்சிக்காகவும், கைத்தறி நெசவாளர்களின் நலனுக்காகவும் பல்வேறு திட்டங்களை இந்திய அரசு செயல்படுத்தி வருகிறது. தேசிய கைத்தறி மேம்பாட்டுத் திட்டம், விரிவான கைத்தறி தொகுப்பு மேம்பாட்டுத் திட்டம், கைத்தறி நெசவாளர்களுக்கான விரிவான  நலத் திட்டம் மற்றும் நூல் விநியோகத் திட்டம் ஆகியவை இதில் அடங்கும்.

கைத்தறிப் பொருட்களின் மின் வணிகத்தை ஊக்கப்படுத்தும் வகையில், கொள்கை கட்டமைப்பு ஒன்று வடிவமைக்கப்பட்டு, இணைய தளத்தின் மூலம் இது வரை ரூ 110.46 கோடி மதிப்பிலான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

 

மூன்றாவது கைத்தறி கணக்கெடுப்பின் (2009-10) போது நெசவாளர் குடும்பங்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ 36,498 ஆக இருந்தது. 99 சதவீதத்துக்கும் அதிகமான நெசவாளர்களின் வருமானம் மாதத்துக்கு ரூ 5,000-க்கும் கீழே இருந்தது.

 

நான்காவது கைத்தறி கணக்கெடுப்பின் போது ரூ 5,000-க்கும் குறைவான மாத வருமானம் உள்ள நெசவாளர்களின் எண்ணிக்கை 67.1 சதவீதமாகவும், ரூ 5,000 முதல் ரூ 10,000 வரை  மாத வருமானம் உள்ள நெசவாளர்களின் எண்ணிக்கை 26.2 சதவீதமாகவும், ரூ 10,000 முதல் ரூ 15,000 வரை மாத வருமானம் உள்ள நெசவாளர்களின் எண்ணிக்கை 4.5 சதவீதமாகவும், ரூ 15,000 முதல் ரூ 20,000 வரை மாத வருமானம் உள்ள நெசவாளர்களின் எண்ணிக்கை 1 சதவீதமாகவும், ரூ 20,000-க்கும் அதிகமாக மாத வருமானம் உள்ள நெசவாளர்களின் எண்ணிக்கை 1.2 சதவீதமாகவும் இருப்பது தெரியவந்துள்ளது.

 

நெசவுத் துறையை ஊக்கப்படுத்த தேசிய கைத்தறி மேம்பாட்டுத் திட்டம், விரிவான கைத்தறி தொகுப்பு மேம்பாட்டுத் திட்டம், கைத்தறி நெசவாளர்களுக்கான விரிவான  நலத் திட்டம் மற்றும் நூல் விநியோகத் திட்டம் ஆகிய திட்டங்களை ஜவுளி அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1655530

                                                                                                    -------


(Release ID: 1655624) Visitor Counter : 237