சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
இந்தியாவில் கொவிட் தடுப்பு மருந்து உருவாக்கத்தின் தற்போதைய நிலை மற்றும் கொரோனா நோயாளிகளுக்கான புதிய சுகாதார திட்டம் உள்ளிட்ட முக்கிய அறிவுப்புகள்
Posted On:
15 SEP 2020 3:04PM by PIB Chennai
நாடாளுமன்றத்தில் மாநிலங்களவையில் பல்வேறு கேள்விகளுக்கு எழுத்து மூலம் பதிலளித்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் திரு அஷ்வினி குமார் சௌபே, முக்கிய தகவல்கள் மற்றும் அறிவிப்புகளை வெளியிட்டார். அவற்றின் விவரம் வருமாறு:
கொவிட்-19-ஐ எதிர்கொள்ள நிலைமை சார்ந்த அணுகுமுறையை இந்தியா பின்பற்றும் என்று அவர் கூறினார். அவை: பயணம் சார்ந்த பாதிப்புகள், உள்ளூர் பரவல், பெரிய அளவிலான பரவல், கொவிட்-19 நோயின் சமூகப் பரவல் உள்ளிட்டவற்றை சார்ந்ததாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
பொது சுகாதாரமும், மருத்துவமனைகளும் மாநிலப் பட்டியலில் வருவதால், கொவிட்-19 நோயாளிகளின் சிகிச்சைக்கான அடிப்படை பொறுப்பு மாநில அரசுகளிடம் இருப்பதாகவும், எனவே, கொவிட் மேலாண்மைக்காக மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள் தங்களது சொந்த வளங்களைப் பயன்படுத்தினாலும், தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் தேவையான தொழில்நுட்ப மற்றும் நிதி உதவி மத்திய அரசால் வழங்கப்படுவதாகவும், நிலைமையை மத்திய அரசு தொடர்ந்து கண்காணிப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
2020 செப்டம்பர் 3 வரை, ரூ 4,230.78 கோடியை மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளதாகவும் திரு சௌபே கூறினார்.
நாட்டின் கொவிட் நிலைமையை பிரதமர், உயர்மட்ட அமைச்சர்கள் குழு, அமைச்சரவை செயலாளர், செயலாளர்களின் குழு மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பதாகக் கூறிய அவர், தனியார் மருத்துவமனைகள் அதிகக் கட்டணம் வசூலிக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்காக தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார். இது தொடர்பாக மாநிலங்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்தியாவில் கொவிட் தடுப்பு மருந்து உருவாக்கத்தைப் பற்றி பேசிய அமைச்சர், இதற்காக உயர்மட்ட தேசிய நிபுணர்கள் குழுவை அரசு அமைத்துள்ளதாகவும், 30-க்கும் அதிகமான தடுப்பு மருந்து மாதிரிகள் பரிசோதனையின் பல்வேறு கட்டங்களில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
சீனாவில் கொரோனா தொற்று தொடங்கிய சிறிது காலத்திலேயே, அதாவது, 2020 ஜனவரி 8 அன்றே, சுகாதார சேவைகளின் தலைமை இயக்குநர் தலைமையில் கூட்டு கண்காணிப்புக் குழுவின் கூட்டம் நடைபெற்றதாகவும், தயார்நிலை மற்றும் தடுப்பு உத்திகள் வகுக்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளைப் பற்றியும் அவர் எடுத்துரைத்தார்.
சுகாதார ஆராய்ச்சி துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி பெற்ற நிறுவனமான இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், அளித்துள்ள தகவலின் படி, மார்ச் 2020-இல் 152 பரிசோதனை மையங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதாகவும், ஏப்ரலில் 247 பரிசோதனை மையங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதாகவும், மே மாதத்தில் 275 பரிசோதனை மையங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதாகவும், ஜூனில் 367 பரிசோதனை மையங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதாகவும், ஜூலையில் 298 பரிசோதனை மையங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார்.
சுகாதாரப் பணியாளர்கள் கொவிட்-19 தொற்றால் இறப்பதை தடுப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பட்டியலிட்ட அவர், என்-96 முகக்கவசங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருப்பதாகவும், முழுமையான பயிற்சி திட்டம் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மக்களின் மனநலனில் கொவிட்-19 ஏற்படுத்தியுள்ள பாதிப்பைப் பற்றி தகவலளித்த அமைச்சர், மனநல ஆலோசனைக்காக 24/7 உதவி எண் அமைக்கப்பட்டிருப்பதாகவும், பல்வேறு தளங்களின் மூலம் விழிப்புணர்வு உண்டாக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
துரித மூலக்கூறு கண்டறிதல் வசதி தற்போது நாடு முழுவதும் உள்ள 1360 வட்டங்களில் கிடைப்பதாகவும், திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாடு திட்டத்தின் மூலம் காசநோய் கட்டுப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்திய மருத்துவக் குழு அளித்துள்ள தகவலின் படி, கடந்த மூன்று வருடங்களில் 47 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக திரு அஷ்வினி குமார் சௌபே கூறினார்.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்கு 100 இடங்களுடனும், கோயமுத்தூரில் உள்ள கற்பகம் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு 150 இடங்களுடனும், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு 100 இடங்களுடனும், மதுரையில் உள்ள வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு 150 இடங்களுடனும், சென்னையில் உள்ள இ எஸ் ஐ சி மருத்துவ கல்லூரிக்கு 100 இடங்களுடனும் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் உள்ள சேலம், மதுரை, தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிகளை மேம்படுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 நோயாளிகளுக்கான புதிய சுகாதாரத் திட்டம் என்னும் தலைப்பில் பதிலளித்த அவர், சுகாதாரப் பணியாளர்களுக்காக ரூ 50 லட்சம் காப்பீட்டு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், பொது மக்களுக்கு கொவிட் சிகிச்சையைத் தவிர, ஒரு குடும்பத்துக்கு வருடத்துக்கு ரூ 5 லட்சம் காப்பீட்டு திட்டமும் செயல்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார். கொவிட் சிறப்பு சிகிச்சை தொகுப்புகளும் அறிவிக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் தெரிவித்தார்.
விரிவான தகவல்களுக்கு கீழ்க் காணும் ஆங்கில செய்திக் குறிப்புக்களைப் பார்க்கவும் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1654459
(Release ID: 1654616)
Visitor Counter : 217