பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

ரெய்காட், மகாராஷ்டிரா மற்றும் சத்தீஸ்கர் ஜகதல்பூரில் பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பு இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் முவ்வுணவு (Trifood) திட்டத்தை காணொலி வாயிலாக திரு அர்ஜூன் முண்டா தொடங்கி வைத்தார்

Posted On: 20 AUG 2020 6:05PM by PIB Chennai

மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திரு, அர்ஜுன் முண்டா இன்று  பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் மேம்பாட்டு கூட்டமைப்பு இந்தியா நிறுவனத்தின் “முவ்வுணவு (Trifood) திட்டத்தின்” மூன்றாம் நிலை செயலாக்க மையங்களை, ராய்காட், மகாராஷ்டிரா மற்றும் சத்தீஸ்கரில் உள்ள ஜகதல்பூர் ஆகிய இடங்களில் இன்று திறந்து வைத்தார். இணை அமைச்சர் திருமதி. ரேணுகா சிங், மகாராஷ்டிராவின் பழங்குடியினர் விவகாரத் துறை அமைச்சர் திரு. கே.சி. பத்வி, பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் மேம்பாட்டு கூட்டமைப்பு இந்தியா லிமிடெட் (ட்ரைஃபெட்) தலைவர் திரு. ரமேஷ் சந்த் மீனா மற்றும் அதன் நிர்வாக இயக்குநர் திரு. பிரவீர் கிருஷ்ணா அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகளும், இரு மாநிலங்களைச் சேர்ந்த பிரமுகர்களும் காணொலிக் காட்சி வாயிலாக இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

மத்தியஉணவு பதப்படுத்துதல் அமைச்சகத்துடன் இணைந்து பழங்குடியினர் நல அமைச்சகத்தின், ட்ரைஃபெட் நிறுவனத்தால் செயல்படுத்தப்படுவதால், பழங்குடியினர் வன சேகரிப்பாளர்களால் சேகரிக்கப்பட்ட சிறு வன உற்பத்தியை சிறப்பாகப் பயன்படுத்துவதன் மூலமும், மதிப்பு சேர்ப்பதன் மூலமும் பழங்குடியினரின் வருமானத்தை மேம்படுத்துவதை ”முவ்வுணவுத் திட்டம்” (“TRIFOOD”) நோக்கமாகக் கொண்டுள்ளது. இதை அடைய, ஒரு தொடக்கமாக, இரண்டு சிறு வன உற்பத்தி செயலாக்க அலகுகள் அமைக்கப்படும்.

மகாராஷ்டிராவின் ராய்காட்டில் உள்ள அலகு இலுப்பை, நெல்லி, சீதாப்பழம், மற்றும் நாவல் பழம் ஆகியவற்றிற்கு மதிப்பு சேர்க்கப் பயன்படும், மேலும் இலுப்பை பானம், நெல்லி சாறு, சாக்லேட், நாவல் பழச் சாறு மற்றும் சீதாப்பழ கூழ் ஆகியவற்றை உற்பத்தி செய்யும். சத்தீஸ்கரின் ஜகதல்பூரில் உள்ள பல பொருட்கள் செயலாக்க மையம் இலுப்பை, நெல்லி, தேன், முந்திரி, புளி, இஞ்சி, பூண்டு மற்றும் பிற பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றை பதப்படுத்தப் பயன்படுத்தப்படும். இவற்றின் மூலம் இலுப்பை பானம், நெல்லிச் சாறு, சாக்லேட், தூய தேன், இஞ்சி-பூண்டு விழுது, பழம் மற்றும் காய்கறி கூழ் ஆகியவை தயாரிக்கப்படும்.

இந்தத் திட்டத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்த திரு. அர்ஜுன் முண்டா, பழங்குடியின உணவு சேகரிப்பாளர்களின் துவண்டு கிடக்கும் பொருளாதார நிலையை புதுப்பிக்க அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டினார். முழுமையான வளர்ச்சி குறித்த தனது கருத்துக்களைத் தெரிவித்த அவர், பழங்குடி வாழ்வின் பல்லுயிர் ஓம்பலில் உள்ள அம்சங்களையும், அவை எவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டும் மற்றும் மேம்படுத்தப்பட வேண்டும் என்பதையும் குறிப்பிட்டு பேசினார். இந்தத் திட்டம் பழங்குடி தொழில்முனைவோரை மேம்படுத்த உதவும் என்றும் அவர் கூறினார். இந்தத் திட்டத்தில் குறிப்பாக, ட்ரைஃபெட் அமைப்பின் முயற்சிகளை அவர் பாராட்டினார், இது பல்லுயிர் ஓம்பலின் பன்முகத்தன்மை பராமரிக்கப்படுவதை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல், பழங்குடியினரின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் அதே வேளையில் பின்தங்கிய இடங்களில் இருந்து முன்னோக்கிச் செல்லும் இணைப்புகளை உருவாக்குகிறது. ட்ரைஃபெட் அமைப்பின் பழங்குடியினரின் மேம்பாட்டிற்கான மைய முகமையகம், இந்த முன்னெப்போதும் இல்லாத நெருக்கடிகளை சந்திக்கும் இந்த காலங்களில் அவர்களின் துயரத்தைத் தணிக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த லட்சிய முயற்சியில் களத்தில் பணிபுரியும் அதிகாரிகளை ஊக்குவிப்பதன் மூலம் இதன் எதிரொலி நாடு முழுவதும் பிரதிபலிக்கும் என்று தெரிவித்தார். பழங்குடியினர் வளர்ச்சியில் மாவட்ட ஆட்சியர்கள மற்றும் பிரதேச வன அலுவலர்கள் (DFOS) மிக முக்கிய பங்கு வகிக்க முடியும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.



(Release ID: 1647597) Visitor Counter : 215