மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

புதுமையில் சாதனை அடிப்படையில் அடல் தரவரிசை அமைப்புகளின் பட்டியலை (ஏ ஆர் ஐ ஐ ஏ 2020), குடியரசுத் துணைத் தலைவர் மத்திய கல்வித் துறை அமைச்சர், இணை அமைச்சர் ஆகியோர் முன்னிலையில் மெய்நிகர் நிகழ்ச்சியில் வெளியிட்டார்

Posted On: 18 AUG 2020 3:45PM by PIB Chennai

புதுமையில் சாதனை என்பதற்கான அடல் தரவரிசை அமைப்புகளின் முடிவுகளை (ஏ ஆர் ஐ ஐ ஏ 2020) குடியரசுத் துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு இன்று மெய்நிகர் நிகழ்ச்சியில் அறிவித்தார். மத்திய கல்வித்துறை அமைச்சர் திரு. ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க்; மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் திரு.சஞ்சய் ஷாம் ராவ் தோத்ரே ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த மெய்நிகர் அறிவிப்பு விழா நிகழ்ச்சியில், உயர் கல்வித்துறைச் செயலர் திரு.அமித் காரே; ஏ ஐ சி டி இ தலைவர் பேராசிரியர் அனில் சஹஸ்ரபுத்தே; ஏ ஆர் ஐ ஐ ஏ மதிப்பீட்டுக் குழு தலைவர் டாக்டர் பி வி ஆர் மோஹன் ரெட்டி; மத்திய கல்வி அமைச்சகத்தின் புதுமைப்பிரிவின் தலைமைப் புதுமை அலுவலர் டாக்டர் அபய் ஜெரி ஆகியோரும் நிகழ்ச்சியில் உடனிருந்தனர்.

 

வேளாண்மைத் துறைக்கு மேலும் அதிக கவனம் செலுத்துமாறும், உழவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையிலான புதுமைகளை கொண்டு வருமாறும், ஆராய்ச்சியாளர்களையும், அறிவியலாளர்களையும் குடியரசுத் துணைத்தலைவர் திரு.எம்.வெங்கையா நாயுடு கேட்டுக்கொண்டார்.வர்களுக்கு தேவையான விஷயங்கள் குறித்து, உரிய காலத்தே தகவல்கள் அளிப்பது; குளிர்பதன சேமிப்பு வசதிகளை உருவாக்குவது; புதிய தொழில் நுட்பங்களை வழங்குவது ஆகியவை குறித்து  ஆராய்ச்சியாளர்கள், புதுமை புகுத்த நினைப்பவர்கள் ஆகியோர் கவனத்தில் வைக்க வேண்டும் என்றும் திரு.வெங்கையா நாயுடு கேட்டுக் கொண்டார்.

 

உழவர்கள் தங்களது விளைபொருள்களுக்குத் தகுந்த விலை பெறுவதை உறுதிசெய்ய வேண்டும் என்றும், இடைத்தரகர்களால் உழவர்கள் சுரண்டப்படுவதைத் தடுக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார். ஏ ஐ சி டி இ,  ஐ சி ஏ ஆர், என் ஐ ஆர் டி ஆகிய அமைப்புகளும் வேளாண் பல்கலைக்கழகங்களும் இணைந்து பணியாற்றி உழவர்களுக்கு உதவும் வகையிலான புதுமைகளையும், தொழில்நுட்பங்களையும் கொண்டு வரவேண்டும் என்று கூறினார்.

 

இந்தியாவில் புதுமைகளும், புதிதாகத் தொழில் துவங்கும் சூழலும் வெகுவாக அதிகரிக்க உதவும் வகையில், இந்தியாவின் உயர்கல்வி அமைப்பு செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய குடியரசுத் துணைத்தலைவர், புதுமை என்பது கல்வியின் இதயத் துடிப்பாக உருவாக வேண்டும்; மிகச் சிறப்பான உயரத்தை அடைய வேண்டும் என்ற தேடலே, பொதுவிதியாக மாறவேண்டும் என்று கூறினார். கற்பனைச் சிறகடித்துப் பறக்கவும், நனவாகவும் புதுமை பூத்துக்குலுங்கவும் தேவையான இந்த நிபந்தனைகளை கல்வி அமைப்புகள் பின்பற்றி, தங்களை மறுஉருவாக்கம் செய்து கொள்ளவேண்டும் என்று திரு.வெங்கையா நாயுடு கூறினார். கேள்வி கேட்கும், அறிந்துகொள்ளும் இயல்பான வேட்கையைத் தொடர்ந்து ஊக்குவித்து, பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில், புதுமைகளைக் கண்டறியும் வகையில், நமது கல்விச் சூழல் அமைப்பு இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

 

புதுமையை வளர்க்கும் விதத்திலான ஏராளமான பரிந்துரைகளை புதிய தேசியக் கல்விக் கொள்கை முன்வைத்துள்ளது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். கல்வி கற்பிக்கும் தரம்; கல்வி கற்கும் தரம்; ஆராய்ச்சியின் தரம் ஆகியவற்றை வெகுவாக மேம்படுத்தும் வகையிலான புதிய தொலைநோக்குத் திட்டத்தை இந்தக் கொள்கை வரையறுத்துள்ளது என்று அவர் கூறினார்.

 

முழுமையான கல்வி, சீரிய சிந்தனை, பகுப்பாய்வுத் திறன், அறிவு உலகின் புதிய முகப்புகளைக் கண்டறிவதில் மகிழ்ச்சிடைதல் ஆகியவற்றுக்கு புதிய கொள்கை மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது என்று குடியரசுத் துணைத் தலைவர் கூறினார். தனித்தனியான கூறுகள் என்பதை உடைத்து, பல்வேறு துறைகளையும் இணைத்து பல்துறை கல்வி மூலமாக அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று புதிய கொள்கை கூறுகிறது. துண்டு துண்டாகச் சிதறிக் கிடக்கும் தகவல்களையும், ஆதாரங்களையும் இணைக்கச் செய்வது புதுமைக்கு மிகவும் இன்றியமையாததாகும் என்று அவர் கூறினார்.


 



(Release ID: 1646736) Visitor Counter : 194