சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

மின்சார வாகனங்களை பேட்டரிகள் இல்லாமல் விற்கவும் பதிவு செய்யவும் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் அனுமதி

Posted On: 12 AUG 2020 7:20PM by PIB Chennai

மின்சார வாகனங்களை பேட்டரிகள் பொருத்தாமலே விற்கவும் பதிவு செய்யவும் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதுதொடர்பாக  அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் போக்குவரத்துத் துறை செயலாளர்களுக்கும் இந்த அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது. பரிசோதனை முகமை அளித்த, வகைப்பாட்டு சான்றிதழ் அடிப்படையில், இந்த வாகனங்களை விற்கவும் பதிவு செய்யவும் அனுமதி அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பதிவு செய்யும்போது பேட்டரியின் தயாரிப்பு மற்றும் வகை குறித்தோ அல்லது வேறு எந்தத் தகவல்களையும் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருந்த போதிலும், மின்சார வாகனம் மற்றும் பேட்டரிக்கு (வழக்கமான அல்லது மாற்றிக் கொள்ளக் கூடியது)  அடிப்படை மாடல் வகை மற்றும், மத்திய மோட்டார் வாகனங்கள் விதிகள் 1989-ன் விதி 126-இல் வரையறுக்கப்பட்டுள்ளவாறு, பரிசோதனை முகமைகளின் சான்றளிப்பைப் பெற்றிருக்க வேண்டும்.

மத்திய மோட்டார் வாகனங்கள் விதிகள், 1989-இன் கீழ், பொருத்தமான படிவங்கள் குறித்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது படிவம் -21 (விற்பனை சான்றிதழ்), படிவம் - 22 (சாலையில் பயன்படுத்துவதற்கு ஏற்றது என உற்பத்தியாளரால் அளிக்கப்பட்ட சான்றிதழ்) மற்றும் படிவம் – 22 A (வாகனத்தின் கூடு அமைப்பை தனியாக உருவாக்கிய நிறுவனம் சார்பில், இந்த வாகனம் சாலையில் பயன்படுத்துவதற்கு ஏற்றது என அளித்த சான்றிதழ்) ஆகியவற்றில் கவனம் செலுத்துமாறு கூறப்பட்டுள்ளது.

மோட்டார் வாகனங்கள் விதி 47இன் (மோட்டார் வாகனங்கள் பதிவுக்கான விண்ணப்பம்) கீழ் இவை தேவைப்படுகின்றன. என்ஜின் எண் / மோட்டார் எண் (பேட்டரியால் இயங்கும் வாகனமாக இருந்தால்) ஆகியவற்றை தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

நாட்டில் மின்சார வாகனங்கள் பயன்பாட்டுக்கு வருவதை ஊக்குவிப்பதற்கான சூழலை உருவாக்குவதற்கு அரசாங்கம் தீவிர முயற்சிகள் எடுத்து வருகிறது. வாகனங்களால் மாசு ஏற்படுதலைக் குறைத்தல், கச்சா எண்ணெய் இறக்குமதி செலவைக் குறைக்க வேண்டும் என்ற நாட்டின் பரந்த நோக்கத்தை எட்டுவதற்கு அனைவரும் கூட்டாக முயற்சிக்க வேண்டிய தருணம் வந்துள்ளது. இது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு உதவுவதாக மட்டுமின்றி, இறக்குமதி செலவை குறைக்கவும் உதவும் என்பதுடன், மின்சார வாகன உற்பத்தி தொழில் துறையின் வளர்ச்சிக்கு வாய்ப்புகளை உருவாக்குவதாக இருக்கும்.

இரு சக்கர மற்றும் மூன்று சக்கர மின்சார வாகனங்களை ஊக்குவிக்க, வாகனத்தின் விலையில் பேட்டரியின் விலையை (மொத்த விலையில் 30-40% சதவீதம் வரும்) சேர்க்கக் கூடாது என்று அமைச்சகத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பேட்டரி இல்லாமல் வாகனத்தை விற்க அனுமதிக்க வேண்டும். இதன் மூலம் வாகனத்தின் விலைகள் குறையும். பேட்டரிகளை தனியாக விற்கலாம் என்றும் பரிந்துரைக்கப் பட்டுள்ளது.

*****(Release ID: 1645438) Visitor Counter : 281