குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வுகள் பற்றி விரிவான, உண்மையான நோக்கம் கொண்ட தகவல்களை வழங்க வேண்டியது அவசியம் - குடியரசு துணைத் தலைவர்

Posted On: 12 AUG 2020 12:27PM by PIB Chennai

வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வுகள் பற்றி விரிவான, உண்மையான நோக்கம் கொண்ட தகவல்களை வழங்க வேண்டியது அவசியம் என குடியரசு துணைத் தலைவர் திரு.எம்.வெங்கையா நாயுடு இன்று வலியுறுத்தியுள்ளார்.

நேதாஜி சுபாஷ் போஸ் – ஐஎன்ஏ டிரஸ்ட்டின் உதவி உறுப்பினரான ,டாக்டர் கல்யாண் குமார் டே என்பவர் எழுதிய ‘’ நேதாஜி- இந்தியாவின் சுதந்திரம் மற்றும் பிரிட்டிஷ் ஆவணக்காப்பகங்கள்’’ நூலை குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் , வெளியிட்டு அவர் உரையாற்றினார்.

இந்த நூல் , இந்திய விடுதலைப் போராட்டத்துக்கு நேதாஜி அளித்த பெரும் பங்களிப்பை விளக்கும் சில சுவையான ஆவணங்களைக் கொண்டுள்ளது என்று கூறிய குடியரசு துணைத் தலைவர், இந்தியாவின் வரலாற்றை நமது இளம் தலைமுறையினர் தெரிந்து கொள்வது அவசியம் என்று வலியுறுத்தினார்.

நாடு முழுவதும் விடுதலைப் போராட்ட வீரர்களின் வீரம், தியாகம் ஆகியவை குறித்த வரலாறுகளை பாடப்புத்தகங்களில் வெளியிட வேண்டும் என்றும் திரு. நாயுடு வலியுறுத்தினார்.

விடுதலைப் போராட்டத்தில் பல அம்சங்கள் மற்றும் நிழல்கள் படிந்துள்ளன என்று கூறிய குடியரசு துணைத் தலைவர், அவை அனைத்தும் இளம் தலைமுறையினருக்கு கற்பிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ‘’ இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மக்கள் நமது சுதந்திரத்துக்காக தியாகங்களைப் புரிந்துள்ளனர். அவர்களது வரலாறுகள் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட வேண்டும்’’ என்று அவர் வலியுறுத்தினார்.

 

விடுதலைப் போராட்டத்தில் திரு. சுபாஷ் சந்திர போஸ் ஆற்றிய பெரும் பங்கை குறிப்பிட்ட குடியரசு துணைத் தலைவர், விடுதலைப் போராட்டத்தின் போது, அவர் காட்டிய துணிச்சலும்,  ஆற்றல்மிக்க, தலைமையும் , மக்களை , குறிப்பாக இளைஞர்களை தொடர்ந்து ஈர்த்து வருகிறது என்று கூறினார்.

 

ஐஎன்ஏ-வை ஒரு படையாக உருவாக்கியது பற்றி குறிப்பிட்ட திரு. நாயுடு, இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்கள், ஐஎன்ஏ மீது  மக்களுக்கு ஏற்பட்ட ஆர்வம் , பிரிட்டிசாரைக் கதிகலங்க வைத்ததாகக் கூறுகின்றன என்றார். நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் இது முக்கிய பங்களிப்பாகும் என அவர் தெரிவித்தார்.

 

சர்வதேச இளைஞர்கள் தினமான இன்று, நேதாஜியின் வாழ்க்கையிலிருந்து இளைஞர்கள் ஊக்கம் பெற வேண்டும் எனவும், புதிய இந்தியாவைக் கட்டமைப்பதில் உழைக்க வேண்டும் என்றும் குடியரசு துணைத் தலைவர் அழைப்பு விடுத்தார்.

 

நாடு விடுதலை அடைந்து 70 ஆண்டுகளாகியும், தொடர்ந்து பல்வேறு விஷயங்களில் சவால்களை எதிர்நோக்கி வந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், வறுமை, எழுத்தறிவின்மை, ஊழல், சாதி, பாலின வேறுபாடு ஆகியவை  இல்லாத, அனைவருக்கும் சம வாய்ப்புகள் அடங்கிய, புதிய இந்தியாவைக் கட்டமைப்பதில் முன்களத்தில் இளைஞர்கள் நிற்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்தியாவின் நாகரிக மாண்புகள், வரலாறு, கலாச்சாரம் ஆகியவை பற்றி நேதாஜி பெருமிதம் கொண்டிருந்தார் என்றும், பெரும் தேசங்கள் தங்கள் தலைவிதியை தாங்களே வடிவமைத்துக் கொள்ளும் என்று அவர் தீவிரமாக நம்பினார் என்றும் திரு நாயுடு கூறினார். ‘’ மக்களிடையே இந்த எழுச்சியைத் தூண்டிவிட வேண்டும் என அவர் விரும்பினார்’’ என்று குடியரசு துணைத்தலைவர்  தெரிவித்தார்.

 

-----


(Release ID: 1645298)