நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின் (2வது கட்டம்) கீழ் உணவு தானியங்கள் பெறுதல் மற்றும் விநியோகம் குறித்து ஆய்வு

Posted On: 11 AUG 2020 7:57PM by PIB Chennai

பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின் (2வது கட்டம்) கீழ் உணவு தானியங்கள் (அரிசி / கோதுமை) மற்றும் கொண்டைக்கடலை ஆகியவற்றை மாநிலங்கள் பெற்றுக் கொண்டு விநியோகம் செய்திருப்பது தொடர்பாக உணவு, பொது வழங்கல் துறை செயலாளர், நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது வழங்கல் அமைச்சகத்தின் நுகர்வோர் விவகாரத் துறை செயலாளர் ஆகியோர் ஆய்வு நடத்தினர். தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் உணவு தானியங்கள் வழங்குதலில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் உணவு, பொது வழங்கல் துறை செயலாளர்களுடன் அவர்கள் காணொளி மூலம் ஆய்வு நடத்தினர்.

2020 ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கான உணவு தானியங்களைப் பெற்றுக் கொண்டது மற்றும் விநியோகம் செய்தது தொடர்பாக ஒவ்வொரு மாநில / யூனியன் பிரதேச செயலாளர்களுடனும் உணவு, பொது வழங்கல் துறை செயலாளர் கலந்தாடல் செய்தார். தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் பயனாளிகளுக்கு, இந்த நெருக்கடி காலத்தில் உரிய நேரத்தில், போதிய அளவுக்கு உணவு தானியங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். புலம்பெயர்ந்த மற்றும் வெளியூர்களில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களில், உணவுப் பாதுகாப்புத் திட்டம் மற்றும் மாநில பொது வழங்கல் திட்டத்தில் பயன் கிடைக்காதவர்களுக்கு தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் இலவசமாக உணவு தானியங்கள் வழங்குதலில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.இவற்றுக்கான விநியோக அவகாசம் 2020 ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம் மற்றும் பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தில் உணவு தானியங்கள் வழங்கும் சுழற்சியை சரி செய்தல் காரணமாகவும், சேமிப்புக் கிடங்கு தொடர்பான வேறு பிரச்சினைகள் காரணமாகவும் சில மாநிலங்களில் உணவு தானியங்கள் விநியோகம் செய்வதில் சிறிது தாமதம் ஏற்பட்டிருக்கிறது. பெரும்பாலான மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் இதில் திருப்திகரமான நிலை நிலவுகிறது. ஏறத்தாழ அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களும், பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின் (2வது கட்டம்) கீழ் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்துக்கான இலவச உணவு தானியங்களை 2020 ஆகஸ்ட் இறுதிக்குள் விநியோகம் செய்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

****



(Release ID: 1645187) Visitor Counter : 213