குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

ஆர்.கே.புரத்தில் மாநிலங்களவை செயலக ஊழியர்களுக்காக 40 குடியிருப்பு அலகுகள் கட்டப்படும்

ரூ.46 கோடி திட்டத்துக்கு மாநிலங்களவைத் தலைவர் திரு.வெங்கையா நாயுடு அடிக்கல் நாட்டினார்

Posted On: 10 AUG 2020 2:17PM by PIB Chennai

மாநிலங்களவை செயலக ஊழியர்களுக்கு நிலவும் கடும் வீட்டு வசதி பற்றாக்குறையை பூர்த்தி செய்யும் வகையில், தேசிய தலைநகர் ஆர்.கே.புரத்தில் முதன்மை செக்டார் 12-ல் 40 குடியிருப்பு அலகுகள் கட்டப்படவுள்ளன.

ரூ.46 கோடி மதிப்பிலான இந்த வீட்டு வசதி வளாகத்துக்கு , மாநிலங்களவைத் தலைவர் திரு. எம்.வெங்கையா நாயுடு, இன்று குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் இருந்தவாறு, காணொலி மூலம் அடிக்கல் நாட்டி, பெயர்ப் பலகையைத் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரம், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் திரு. ஹர்தீப் சிங் பூரி கலந்து கொண்டார்.

அடிக்கல் நாட்டிய பின்னர் , நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு. நாயுடு, செயலக ஊழியர்கள் வீட்டு வசதி பற்றாக்குறையால் அவதிப்பட்ட நிலையிலும், செயலகத்துக்கு 2003-ம் ஆண்டே நிலம் ஒதுக்கப்பட்டும், இந்தத் திட்டம் அநாவசியமாக தாமதம் ஆனதற்கு கவலை தெரிவித்தார். இந்த வீட்டு வசதித் திட்டத்தை 17 ஆண்டுகள் தாமதப்படுத்தியதால், செயலகத்துக்கு தவிர்க்க முடியாத பெரும் செலவு ஏற்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார். விலை மதிப்புள்ள இந்த நிலம் சமூக , பொருளாதார , சட்ட, நிர்வாக காரணங்களால் கிடப்பில் போடப்பட்டதாக திரு. நாயுடு குறிப்பிட்டார்.

இந்த நிலத்தைப் பயன்படுத்துவது தொடர்பான தடங்கல்களைப் போக்க, கடந்த இரண்டு ஆண்டுகளாக, மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விகாரத்துறை அமைச்சர் திரு.பூரி, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை செயலர் திரு. துர்கா சங்கர் மிஸ்ரா, தில்லி அரசின் மூத்த அதிகாரிகள், டிடிஏ, டியுஎஸ்ஐபி, நில மேம்பாட்டு அதிகாரி மற்றும் இதர துறையினருடன் பல்வேறு சுற்று கூட்டங்களை தாம் நடத்தியதாக மாநிலங்களவைத் தலைவர் சுட்டிக்காட்டினார். மேலும் இது தொடர்பாக, தில்லி துணைநிலை ஆளுநர் திரு. அனில் பைஜால், முதலமைச்சர் திரு அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருடனும், திரு. நாயுடு பேசினார்.

மாநிலங்களவை செயலகத்துக்கு 8,700 சதுர மீட்டர் விலை மதிப்புமிக்க நிலம், எஸ்டேட் இயக்குநரகத்தால் 2003-ம் ஆண்டு ஒதுக்கப்பட்டதாகத் தெரிவித்த திரு.நாயுடு, குறித்த காலத்தில் இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்காக  தொகையும் அளிக்கப்பட்டதாகக் கூறினார். இந்தத் திட்டத்தை உரிய நேரத்தில் செயல்படுத்தியிருந்தால், செயலகத்துக்கு செலவு மிச்சமாகியிருப்பதுடன், கணிசமான அளவுக்கு வீட்டு வாடகைப் படியும்  கிடைத்திருக்கும் என்று அவர் கூறினார். ராஜ்யசபா டிவி அலுவலகத்தை என்டிஎம்சி வளாகத்துக்கு மாற்றியதால் ரூ 30 கோடி என்னும் பெரிய தொகை ஆண்டு வாடகையாக செலுத்தப்பட்டது என்றும், ஆர்கே புரம்  வளாகத்தில் இது இருந்திருந்தால், செயலகத்துக்கு கணிசமான அளவுக்கு பயன் கிட்டியிருக்கும் என்றும் அவர் கூறினார்.

************



(Release ID: 1644773) Visitor Counter : 197