கப்பல் போக்குவரத்து அமைச்சகம்

மாலுமிகளுக்கான ஆன்லைன் வெளியேறும் தேர்வு முறையை திரு.மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார்.

Posted On: 07 AUG 2020 5:07PM by PIB Chennai

மத்திய கப்பல் துறை இணையமைச்சர் திரு.மன்சுக் மாண்டவியா, இன்று மெய்நிகர் நிகழ்ச்சி ஒன்றில் , கடற்பயணத் தொழிலில் ஈடுபடும் மாலுமிகளுக்கான ஆன்லைன் வெளியேறும் தேர்வு (நிறைவுத் தேர்வு ) முறையைத் தொடங்கி வைத்தார். கப்பல் துறை தலைமை இயக்குநரின் கீழ் செயல்படும் பல்வேறு கடல்சார் பயிற்சி நிறுவனங்களில் , கப்பல் வேலைப் பணியாளர்கள் மற்றும் மாலுமிகள் பயிற்சி பெற்று வருகின்றனர். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கோவிட்-19 தொற்று பரவி வரும் இந்த நிலையில், அவர்கள் வீடுகளில் இருந்தவாறே , தற்போது தேர்வுக்கு ஆஜராகலாம்.

http://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/image0012U69.jpg

நிகழ்ச்சியில் தொடக்கவுரை ஆற்றிய திரு. மாண்டவியா, திறன் மிக்க, தரமான கப்பல் துறையினருக்கு இந்தியா பெயர் பெற்றது என்று கூறினார். 2017-ஆம் ஆண்டு 1.54 லட்சமாக இருந்த இவர்களின் எண்ணிக்கை , 2019-இல் 2.34 லட்சமாக அதிகரித்துள்ளது. இந்தியா மற்றும் உலக அளவில் கடல்சார் தொழில் துறையில் அதிகரித்து வரும் தேவைக்கு ஏற்ப இந்த எண்ணிக்கையை 5 லட்சமாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. “கடல்சார் பிரிவு இந்திய இளைஞர்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்பை உருவாக்க முடியும் என்பது பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்காகும். பிரதமரின் தொலைநோக்கை நிறைவேற்றும் வகையில், இந்த வேலை வாய்ப்புகளை உருவாக்க கப்பல் துறை தனது அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது’’ என அமைச்சர் கூறினார்.

மாறி வரும் சூழலுக்கு ஏற்ப, பயிற்சி நிறுவனங்கள் தங்கள் மதிப்பீட்டை மாற்றிக் கொண்டிருப்பது குறித்து , தமது மகிழ்ச்சியை அமைச்சர் தெரிவித்தார். இந்தத் தொற்றுக் காலத்தில், மாலுமிகள் தேர்வை  வீட்டிலிருந்தவாறு  எழுதும் வகையில் , உலகிலேயே ஆன்லைன் தேர்வு நடத்தும் ஒரே நாடு இந்தியா தான் என்று அவர் கூறினார். ஆன்லைன் தேர்வு காரணமாக, தேர்வின் துல்லியம், தேர்வர்களை மதிப்பிடுவதில் சீரான நிலை உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் தேர்வு மூலம், மாலுமிகள்  வெளியேறும் தேர்வுக்கு தகுதி பெறும் வாய்ப்பை, தங்கள் வீடுகளிலிருந்தே பெறுவார்கள்.



(Release ID: 1644166) Visitor Counter : 205