குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

புதிய இந்தியாவை கட்டமைப்பதில் குடிமைப்பணி அதிகாரிகள் தாமே முன்வந்து மாற்றம் ஏற்படுத்துபவர்களாக செயல்பட வேண்டும் என்று குடியரசுத் துணைத்தலைவர் கேட்டுக் கொண்டார்.

Posted On: 07 AUG 2020 1:39PM by PIB Chennai

குடியரசுத் துணைத்தலைவர் திரு எம்.வெங்கய்ய நாயுடு இன்று இளம் ஐஏஎஸ் அதிகாரிகள் தங்களது பணிக்காலத்தில் ஏழை-பணக்காரர், ஆண்கள்-பெண்கள் மற்றும் நகரம்-கிராமம் ஆகிய பாகுபாட்டைக் குறைக்கும் பாலமாகச் செயல்பட வேண்டுமென்றும் புதிய இந்தியாவைக் கட்டமைப்பதில் தாமே முன்வந்து மாற்றம் ஏற்படுத்துபவர்களாக செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

லால்பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமியில் (LBSNAA) நடைபெற்ற 2018ஆம் ஆண்டின் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கான இரண்டாண்டு பயிற்சித் திட்ட நிறைவு விழாவில் காணொளிக் காட்சி மூலம் உரையாற்றிய அவர் விளம்புநிலை மக்களின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்த வேண்டும் என்பதை அதிகாரிகள் தங்களின் முக்கிய குறிக்கோளாகக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இந்தியாவை ஒருங்கிணைத்த சர்தார் வல்லபாய் படேல் வறுமை மற்றும் பாகுபாடு ஆகியவற்றை எதிர்த்துப் போராடுகின்ற ஒரு புதிய தேசத்தை உருவாக்குவதற்கு ஆர்வமுடன் பணியாற்றக் கூடிய குடிமைப் பணி சேவையை ஏற்படுத்த வேண்டும் என்று கனவு கண்டதை இந்தத் தருணத்தில் நினைவு கூர்ந்த குடியரசுத் துணைத்தலைவர், ஐஏஎஸ் அதிகாரிகளிடம் நேர்மை, ஒழுக்கம். எளிமை, கடமை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடைமை ஆகியவற்றைக் கடைபிடிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

முன்னாள் பிரதம மந்திரி திரு.லால்பகதூர் சாஸ்திரி அவர்கள் சிறந்த தலைவராக இருந்ததை எடுத்துக்காட்டிய திரு நாயுடு நேர்மை மற்றும் பணிவு, கருணை மற்றும் திறமை, தேசியப் பெருமை, அசாத்தியமான தைரியம் ஆகியவை தான் சாஸ்திரியின் குறிப்பிடத்தக்க குணாதிசயங்களாக இருந்தன என்றும் குறிப்பிட்டார்.  பயிற்சி பெற்ற அதிகாரிகளைத் தொடர்ந்து கற்றுக்கொள்ளவும், சிந்திக்கவும் புத்தாக்கமாகச் செயல்படவும் வலியுறுத்திய திரு நாயுடு, ”இன்று நமக்குத் தேவைப்படுவதெல்லாம் சிறப்பான அரசாட்சிதான்” என்றும் தெரிவித்தார். அரசாட்சி என்பது நெளிவு சுளிவோடு இருந்தாலும் அது வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும் மக்களின் தேவைகள் மற்றும் ஆர்வங்களைப் பூர்த்தி செய்வதாகவும் இருக்கின்ற திறன் வாய்ந்த அமைப்பாக இருக்கவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மேலும் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்குத் தேவையான நிலைமைகளை உருவாக்கி வழங்குகின்ற ஒரு அமைப்பாகவும் அது இருக்க வேண்டும் என்றார். 

சட்டமன்றம், எத்தனைக் கொள்கைகள் மற்றும் சட்டங்களை உருவாக்கினாலும் கூட அந்த எண்ணிக்கையை விட, அத்தகைய கொள்கைகள் எந்த அளவிற்கு உண்மையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்பது தான் மிகவும் முக்கியமானதாகும் என்று குடியரசுத் துணைத்தலைவர் குறிப்பிட்டார். ஒரு அரசாங்கம் சேவைகளை எப்படி வழங்குகிறது என்பதைப் பொறுத்துத்தான் அந்த அரசாங்கம் நினைவில் கொள்ளப்படும்.  எனவே, குடிமைப்பணி அதிகாரிகள் நாட்டின் குடிமக்கள் தங்களுக்குரியவற்றை தாமதமின்றிப் பெறுவதை உறுதி செய்யவேண்டும்.

நீங்கள் எந்தப் பதவியில் இருந்தாலும் சிறப்பாகப் பணியாற்றி சாதனையை ஏற்படுத்த வேண்டும்.  அப்போது தான் மக்கள் பிறகு உங்களை நினைத்துப் பார்ப்பார்கள் என்று அவர் இளம் குடிமைப்பணி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

சர்தார் படேல் குழுவாகப் பணியாற்றுவதில் அதிக நம்பிக்கை வைத்திருந்தார் என்று தெரிவித்த திரு.நாயுடு சக பணியாளர்களையும் தன் கீழ் பணியாற்றுபவர்களையும் ஊக்கப்படுத்தி குழுவாக ஒருங்கிணைத்து மக்களுக்கு சேவையாற்றும் பணியை மேம்படுத்த வேண்டும் என்று குடிமைப்பணி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

”சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் உருமாற்றம்” என்ற பிரதம மந்திரி திரு. நரேந்திர மோடியின் முழக்கமானது அனைத்து அதிகாரிகளின் செயல்களுக்கும் ஊக்கம் தரும் பின்புலமாக இருக்கவேண்டும் என்று வலியுறுத்திய திரு.நாயுடு புத்தாக்கத்தின் மூலம் செயல்பட்டு உலகில் மிகச்சிறந்த அரசாள்கைத் தலைவர்களாக உருவாக வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இந்தியா குறிப்பிடத்தக்க உருமாற்றத்தின் இடையில் தற்போது இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய பெருந்தொற்றுத் தடையைத் தாண்டியும் வளர்ச்சி, சுயசார்பு மற்றும் எதிர்த்து தாங்கி நிற்கும் தன்மையை வளர்த்தல் ஆகியவற்றுக்கு எண்ணற்ற புதிய வாய்ப்புகள் உள்ளன என்றும் சுட்டிக்காட்டினார்.  ”இந்தப் புதிய இந்தியாவை உருவாக்கும் செயலை நீங்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்” என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

*****
 


(Release ID: 1644128) Visitor Counter : 271