உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்

பவன் ஹன்சின் முதல் உதான்-ஆர்.சி.எஸ் சேவை உத்தராகண்டில் தொடங்கப்பட்டது

Posted On: 29 JUL 2020 6:13PM by PIB Chennai

மாண்புமிகு பிரதமர், சிம்லாவிலிருந்து, டெல்லிக்கு 2017 ஏப்ரல் மாதத்தில் முதலாவது உதான் விமானப் போக்குவரத்து சேவையைத் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து இதுவரை 45 விமான நிலையங்கள் மற்றும் மூன்று ஹெலிகாப்டர் இறங்கு தளங்களையும் இணைக்கும் வகையில் 274 உதான் வழித்தடங்கள் செயலாக்கதிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதனைத் தெரிவித்த விமான போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் (தனி பொறுப்பு) திரு.ஹர்தீப் சிங் பூரி, பவன் ஹன்சின் உதான் - ஆர்.சி.எஸ் (பிராந்திய தொடர்பு சேவை) திட்டத்தின் கீழ் முதலாவது ஹெலிகாப்டர் சேவையை உத்தராகண்ட் மாநிலத்தில் இன்று கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார். ஹெலிகாப்டர் சேவை தொடங்கப்பட்டிருப்பதும், இந்த புதிய வழித்தடங்கள் திறக்கப்பட்டிருப்பதும் மாநில மக்களை நெருக்கமாக கொண்டு வந்து இப்பிராந்தியத்தில் சுற்றுலாவுக்கு ஆதரவு அளிக்கும் என்று திரு.பூரி தெரிவித்தார்.

 

இந்த சேவை டேராடூன், நியூ தெஹ்ரி, ஸ்ரீநகர் மற்றும் கவுச்சர் இடையே இணைப்பை ஏற்படுத்தும். விமானப் போக்குவரத்து அமைச்சக செயலாளர் திரு.பிரதீப் சிங் கரோலா, இணை செயலாளர் திருமதி உஷா பதீ, பவன் ஹன்ஸ் நிறுவனத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் திரு.சஞ்சீவ் ரஸ்தான் ஆகியோர் புது தில்லியில் நடைபெற்ற மெய்நிகர் துவக்க விழாவில் கலந்து கொண்டனர். இந்த வழித்தடத்தை ஒரே நேரத்தில் உத்தராகண்ட் முதலமைச்சர் திரு. திரிவேந்திர சிங் ராவத், தமது மாநிலத்திலிருந்து திறந்து வைத்தார்.

 

புதிய ஹெலிகாப்டர் சேவைகள் தொடங்கப்பட்டிருப்பது, உத்தராகண்ட் மாநிலத்தில் மலைப்பாங்கான பகுதிகளுக்கு இடையிலான வான்வழி இணைப்பை மேம்படுத்துவதோடு, பயண நேரத்தை சராசரியாக 20-25 நிமிடங்களாகக் குறைக்கும். இந்த சேவை சார் தாம் யாத்திரையை மேற்கொள்ளும் யாத்ரீகர்களுக்கு உதவும். இந்த வழித்தடத்தில் பவன் ஹான்ஸ் நிறுவனம் வாரத்திற்கு மூன்று முறை ஹெலிகாப்டர் சேவைகளை இயக்கும். சாமானிய மக்களும் விமான சேவைக் கட்டணத்தில்  பயன்பெறத்தக்க வகையில் ஆபரேட்டர்கள் மற்றும் பயணிகள் ஆகியோருக்கு நடைமுறைக்கு உகந்த இடைவெளி நிதி (விஜிஎஃப்) வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த வழித்தடங்களுக்கான கட்டணம் ஒரு இருக்கைக்கு ரூ. 2900 ஆகும். உதான் 2 ஏல செயல்முறையின் கீழ் பவன் ஹன்ஸ் நிறுவனத்திற்கு டேராடூன் - நியூ தெஹ்ரி ஸ்ரீநகர் – கவுச்சர் வழித்தடத்தை விமானப் போக்குவரத்து அமைச்சகம் வழங்கி உள்ளது.

 

****


 



(Release ID: 1642303) Visitor Counter : 149