பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

சர்க்கரை நோயாளிகள் கோவிட் பாதிப்பு காலத்தில் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்: டாக்டர் ஜிதேந்திர சிங்

Posted On: 17 JUL 2020 7:30PM by PIB Chennai

சர்க்கரை நோயாளிகள் கோவிட் பாதிப்பு காலத்தில் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று வடகிழக்குப் பிராந்திய வளர்ச்சித் துறை இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு), பிரதமர் அலுவலகம்  பணியாளர் நலன், பொது மக்கள் குறைதீர்வு, ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணை அமைச்சரான டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று கூறினார். ஹலோ நீரிழிவு கல்வியாளர்களே 2020 என்ற தலைப்பிலான டிஜிட்டல் கருத்தரங்கில் பேசிய அவர், கோவிட் பாதிப்பு இருந்தாலும் இந்த நிகழ்ச்சி நடைபெறுவதாகக் குறிப்பிட்டார். செயல்பாட்டாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் கோவிட் பாதிப்பு சூழ்நிலையில் தங்களால் இயன்ற அளவுக்கு சிறந்த பங்களிப்பு செய்து வருகிறார்கள் என்று அவர் கூறினார். எதிர்மறைச் சூழல்களுக்கு ஏற்ற புதிய நடைமுறைகளை உருவாக்கும் உத்வேகத்தை கோவிட் பாதிப்பு நமக்கு அளித்திருக்கிறது என்றார் அவர்.

நீரிழிவு நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பாற்றல் குறையும் வாய்ப்பு இருப்பதால், கொரோனா போன்ற தொற்றுகளுக்கு எளிதில் ஆளாகும் ஆபத்து அதிகமாக உள்ளது என்றும், அதன் தொடர்ச்சியாக சிக்கல்களுக்கு ஆளாகும் ஆபத்து உள்ளது என்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். நீரிழிவு நோயாளிக்கு சிறுநீரகம் தொடர்பான கோளாறுகள் சேர்ந்திருந்தால் நிலைமை இன்னும் தீவிரமாகிவிடும் என்று அவர் குறிப்பிட்டார். இதுபோன்ற சூழ்நிலைகளில், நோய்த் தொற்று ஏற்படாமல் தவிர்ப்பதற்கு, ரத்தத்தில் சர்க்கரை அளவை கடுமையான கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டியது முக்கியம் என்று அவர் வலியுறுத்தினார். அதேசமயத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி அவர்களுக்கு சொல்லித் தர வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/image001VMCB.jpg

 

``மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது கோவிட் நோய் பாதிப்பு தொடர்பான மரணங்களின் விகிதாச்சாரம் இந்தியாவில் குறைவாக உள்ளது என்றாலும், நீரிழிவு போன்ற இதர பாதிப்புகளும் இருந்த கொரோனா நோயாளிகள் தான் அதிக அளவில் உயிரிழந்துள்ளனர்'' என்று அவர் தெரிவித்தார்.

கோவிட் நோய்த் தொற்று காலம் முடிந்துவிட்டாலும், தனி நபர் இடைவெளியைக் கடைபிடித்தல், திரவத் திவலைகள் மூலம் நோய் பரவுவதைத் தவிர்த்தல் போன்றவை, வேறு பல நோய்கள் பரவலைத் தடுப்பதற்கான செயல்பாடுகளாக தொடர்ந்து நீடிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

முக்கியமான இந்தத் தலைப்பு குறித்து விவாதிப்பதற்கு சிறந்த கல்வியாளர்களை ஒருங்கிணைத்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த சென்னையைச் சேர்ந்த டாக்டர் வி. சேஷய்யா, புதுவையைச் சேர்ந்த டாக்டர் ஏ.கே. தாஸ், மும்பையைச் சேர்ந்த டாக்டர் ஷஷாங்க் ஜோஷி, ஆமதாபாத்தைச் சேர்ந்த டாக்டர் பன்ஷி சாபூ, நாக்பூரைச் சேர்ந்த டாக்டர் சுனில்குப்தா, டாக்டர் கவிதா குப்தா ஆகியோருக்கும், நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த குழுவினர் அனைவருக்கும் அமைச்சர் பாராடுதல்களைத் தெரிவித்துக் கொண்டார்.


(Release ID: 1639485) Visitor Counter : 235