இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

கோவிட்-19 தொற்றுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் உதவ ஒரு கோடி தன்னார்வலர்களைத் திரட்ட மத்திய, மாநில அரசுகள் இணைந்து பாடுபடும் : திரு. கிரண் ரிஜிஜூ

Posted On: 15 JUL 2020 6:41PM by PIB Chennai

கோவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தை தீவிரப்படுத்தவும், சமூதாயத்தின் கீழ் நிலையில் உள்ள மக்களிடையே தற்சார்பு இந்தியா இயக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இளைஞர் நல அமைச்சகத்தின் முக்கியத் திட்டங்களின் ஒரு பகுதியாக, நேரு யுவ கேந்திரா சங்கதன், நாட்டு நலப்பணித் திட்டம், இந்திய   சாரண இயக்கம் ஆகியவற்றைச் சேர்ந்த ஏராளமான தன்னார்வலர்களைத் திரட்ட வேண்டும் என அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறைக்குப் பொறுப்பான அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு. கிரண் ரிஜிஜூ கேட்டுக் கொண்டுள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு தொடர்பான பிரச்சினைகளுக்கான ஒருங்கிணைந்த வழிமுறையை உருவாக்குவதற்கான அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் பங்கேற்ற இரண்டு நாள் காணொளிக் காட்சி மாநாட்டை மத்திய அமைச்சர் நடத்தினார்.

 

நாடு முழுவதும் தன்னார்வலர்களின் தொகுப்பை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய திரு. ரிஜிஜூ, “கோவிட்-19  தொற்றுப் பரவல் காலத்தில், முன்களப் பணியாளர்களாக நேரு யுவ கேந்திரா சங்கதன், நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியவற்றைச் சேர்ந்த தன்னார்வலர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, முகக்கவசங்களைத் தயாரித்து வழங்குவதுடன், மக்களுக்கு உதவியும் வருகின்றனர். இந்த மாநாட்டில் கலந்து கொண்ட அனைத்து மாநிலப் பிரதிநிதிகளும் அவர்களது தீவிரப் பங்களிப்பை புகழ்ந்துள்ளனர். வரும் மாதங்களில், இந்தத் தன்னார்வலர்களின் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்துவது என மத்திய அரசும், அனைத்து மாநில அரசுகளும் கூட்டாக முடிவு செய்துள்ளன. இளைஞர் நலத்திட்டங்களின் கீழ், ஒரு கோடிக்கும் மேற்பட்ட தன்னார்வலர்களைத் திரட்ட நாங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளோம். கோவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தை தொடர்வதுடன், பிரதமரின் தொலைநோக்கிலான தற்சார்பு இந்தியா இயக்கத்தின் பலன்களை மக்கள் பெறுவதற்கு தன்னார்வலர்கள் உதவுவார்கள். பரம ஏழைகளுக்கு உதவுவதற்கான இலவச ரேசன் அரிசி. மருத்துவ உதவி மற்றும் பல உதவிகள் பெறுவதற்கான வசதிகள் தற்சார்பு இந்தியா இயக்கத்தில் உள்ளன. ஏழைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள அந்த வசதிகள் பற்றி நமது தன்னார்வலர்கள் விழிப்புணர்வை உருவாக்குவார்கள். இந்த நெருக்கடியான சூழலில், கண்ணியத்துடன் ஏராளமான குடும்பங்கள் வாழ்வதற்கு, தகவல் அணுகும் முறை உதவும்’’, என்று கூறினார்.

முதல் தளர்வு  அறிவிக்கப்பட்டவுடன், களப்பணியில், 24.17 லட்சம் நேரு யுவ கேந்திரா மற்றும் 18.01 லட்சம் நாட்டு நலப்பணி திட்ட ஆர்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். நாடு முழுவதும் இந்தப்பணியை விரிவுபடுத்த மேலும் 19.27 லட்சம் ஆர்வலர்கள் அதிகரிக்கப்பட்டனர். கோவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்கும் பல்வேறு நடவடிக்கைகளில் உதவுவதற்கான பயிற்சியை 60 லட்சத்துக்கும் அதிகமான தன்னார்வலர்கள் பெற்றுள்ளனர்.

                                                                                                         *****


(Release ID: 1638995) Visitor Counter : 206