விவசாயத்துறை அமைச்சகம்
ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், பஞ்சாப், குஜராத், உத்திரப்பிரதேசம், மகாராஷ்டிரா, சத்திஸ்கர், ஹரியானா மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் 14 ஜூலை, 2020 வரை 3,15,636 ஹெக்டேர் நிலப்பரப்பில் வெட்டுக்கிளிக் கட்டுப்பாடு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டன
Posted On:
15 JUL 2020 4:52PM by PIB Chennai
11 ஏப்ரல், 2020 முதல் 14 ஜூலை, 2020 வரை, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், குஜராத், உத்திரப்பிரதேசம் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் 1,68,315 ஹெக்டேர் நிலப்பரப்பில் வெட்டுக்கிளி வட்டார அலுவலகங்களால் கட்டுப்பாடு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டன. ஜூலை 14, 2020 வரை, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், பஞ்சாப், குஜராத், உத்திரப்பிரதேசம், மகாராஷ்டிரா, சத்திஸ்கர், ஹரியானா மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் 1,47,321 ஹெக்டேர் நிலப்பரப்பில் மாநில அரசுகளால் கட்டுப்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
மருந்து தெளிப்பான் கருவிகள் பொருத்தப்பட்ட வாகனங்களுடன் 70 கட்டுப்பாட்டுக் குழுக்களும், 200-க்கும் அதிகமான மத்திய அரசுப் பணியாளர்களும், 50 தொழில்நுட்ப அலுவலர்களும் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் 22 ஓட்டுநர்களும் வெட்டுக்கிளிக் கட்டுப்பாடு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும், 15 புதிய உல்வாமாஸ்ட் தெளிப்பான்கள் இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்துள்ளன.
அதோடு, ராஜஸ்தானில் உள்ள பார்மர், ஜெய்சால்மர், பிகானெர், நாகவுர் மற்றும் பலோடி ஆகிய இடங்களில் உயரமான மரங்கள் மற்றும் அணுகமுடியாத இடங்களில் இருக்கும் வெட்டுக்கிளிகளின் செயல்மிகு கட்டுப்படுத்துதலுக்காக 15 ஆளில்லாத விமானங்களுடன் 5 குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. பட்டியலிடப்பட்ட பாலைவனப் பகுதியில் தேவைக்கேற்ப பயன்படுத்துவதற்காக ஒரு பெல் ஹெலிகாப்டரும் அனுப்பப்பட்டுள்ளது. எம் ஐ-17 ரக ஹெலிகாப்டரைப் பயன்படுத்தி இந்திய விமானப்படையும் வெட்டுக்கிளிக்கு எதிரான நடவடிக்கையில் சோதனைகளைச் செய்து கொண்டிருக்கிறது.
குஜராத், உத்திரப்பிரேதசம், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, சத்திஸ்கார், பீகார் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் குறிப்பிடத்தகுந்த அளவில் பயிர்ச் சேதம் ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை. எனினும், ராஜஸ்தானில் சில மாவட்டங்களில் சில சிறிய அளவிலான பயிர்ச் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
***
(Release ID: 1638973)