குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

சிறந்த கலைஞர்களுக்கு தற்போதுள்ள இட ஒதுக்கீட்டு முறையைத் தொடர வேண்டும் என்று தில்லிப் பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு குடியரசுத் துணைத்தலைவர் அறிவுறுத்தியுள்ளார்

Posted On: 10 JUL 2020 6:39PM by PIB Chennai

சிறந்த கலைஞர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் தற்போதைய முறையை தொடரும்படியும், பாடங்கள் அல்லாத இதர துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பது தொடர்பான முடிவை பரிசீலனை செய்யுமாறும், தில்லிப் பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு குடியரசு துணைத்தலைவர் திரு. எம்.வெங்கையா நாயுடு அறிவுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரபலமான கலைஞர்களிடம் இருந்தும், குடியரசுத் துணைத்தலைவருக்கு ஏராளமான வேண்டுகோள்கள் இது தொடர்பாக வந்ததையடுத்து, குடியரசுத் துணைத் தலைவர் இவ்வாறு ஆலோசனை தெரிவித்துள்ளார். திரு.வெங்கையாநாயுடு, தில்லிப் பல்கலைக்கழகத்தின் வேந்தரும் ஆவார். இன்று காலை குடியரசுத் துணைத்தலைவரை சந்தித்த தில்லிப் பல்கலைக்கழகத்தின் இணை துணைவேந்தர் மற்றும் கல்லூரிகளின் டீன் அவரை சந்தித்தபோது குடியரசுத் துணைத் தலைவர் இதுகுறித்து கூறினார். கல்லூரிகளில் முதலாம் ஆண்டு சேர்க்கைக்கு, படிப்பு சாராத பிற துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு சேர்க்கை அளிப்பது உட்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து அவர்கள் குடியரசுத் துணைத் தலைவரிடம் எடுத்துக் கூறினார்கள். முன்னதாக இந்தப் பிரச்சினை குறித்து மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறைச் செயலர் குடியரசுத் துணைத் தலைவரிடம் விளக்கியிருந்தார்.

 

இந்த சந்திப்பின் போது குடியரசு துணைத் தலைவரிடம் புத்தகத்தை திறந்து வைத்துக் கொண்டு தேர்வு எழுதும் முறை; தில்லிப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பதிவாளர், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி, நூலகர்கள் கல்லூரி முதல்வர்கள், அதிகாரிகள் ஆகியோருக்கான பணி நியமனங்கள் குறித்தும், குடியரசுத் துணைத்தலைவரிடம் எடுத்துரைக்கப்பட்டது.

 

பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள இடங்களை உடனடியாக நிரப்புவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும், தேர்வுக்கான அட்டவணையை இறுதிப்படுத்துமாறும் குடியரசுத் துணைத் தலைவர் ஆலோசனை தெரிவித்தார்.

 

 

****



(Release ID: 1637867) Visitor Counter : 157