பாதுகாப்பு அமைச்சகம்
எல்லைகளில் கட்டமைப்புப் பணிகளின் முன்னேற்றம் குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத்சிங் பரிசீலனை
Posted On:
07 JUL 2020 7:49PM by PIB Chennai
நாட்டின் எல்லைப் பகுதிகளில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் பல்வேறு கட்டமைப்புத் திட்டங்கள் குறித்து மத்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், இன்று உயர்நிலைக் கூட்டம் ஒன்றுக்கு தலைமை வகித்து பரிசீலனை செய்தார். இந்தக் கூட்டத்தில் பாதுகாப்புத்துறை செயலர் டாக்டர். அஜய்குமார் மற்றும் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
எல்லைப்பகுதிகளில் முன்னிலைத் தொடர்புகளின் நிலை குறித்தும் பரிசீலிக்கப்பட்டது. தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை விரைந்து செயல்படுத்தவும், எல்லைப் பகுதிகளில் முக்கியமான சாலைகளையும், பாலங்களையும், சுரங்கங்களையும் அமைப்பதை விரைவுபடுத்துவதன் அவசியம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. 2018-19 நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், 2019-20 நிதியாண்டில் எல்லைப் பகுதி சாலைகளில் 30 சதவிகிதம் அதிகமான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கோவிட் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்த போதிலும், பல்வேறு திட்டங்களின் முன்னேற்றம் பாதிக்கப்படாத வகையில் எல்லைச் சாலை அமைப்பு, தொடர்ந்து அயராது பணியாற்றி வந்துள்ளது. எதிர்பாராத அளவிற்கு, பனிப்பொழிவு இருந்தபோதிலும் 60 ஆண்டு காலமாக இல்லாத அளவிற்கு எப்போதும் திறக்கப்படும் நாளுக்கு சுமார் ஒரு மாத காலம் முன்பாகவே அனைத்து முக்கிய கணவாய்களும், சாலைகளும் இந்த ஆண்டு திறந்து விடப்பட்டன. எல்லைச் சாலை அமைப்பு, பனி அகற்றும் வேலைகளை 149 சாலைகளில் (3965 கிலோமீட்டர்) ஜம்மு காஷ்மீர், லடாக், இமாச்சலப்பிரதேசம், உத்தரகண்ட், சிக்கிம், அருணாச்சலப்பிரதேசம் ஆகிய இடங்களில் மேற்கொண்டது. இதனால் துருப்புகள் விரைவாக முன்னணிப் பகுதிகளுக்குச் செல்வதை உறுதிப்படுத்த முடிந்தது. எல்லைச் சாலை அமைப்பை அதன் சாதனைகளுக்காக பாதுகாப்புத்துறை அமைச்சர் பாராட்டினார். மேலும் அதிகப் பாராட்டுகளைப் பெறும் அளவிற்கு அவர்கள் சாதனை படைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். எல்லைச் சாலை அமைப்பு, நவீன கருவிகள், இயந்திரங்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது. வெற்றிகரமான முயற்சிகளுக்குப் பின்னர் புதிய கட்டுமான முறைகளைப் பயன்படுத்தி சிமெண்ட் தளம், நெகிழிப் பயன்படுத்துதல், ஜியோ துணி வகை பயன்படுத்துதல் போன்ற முறைகளையும், சரிவுகள் நிலை பெறுவதற்கான பல்வேறு உத்திகளையும் கையாண்டு வருகிறது. கார்டன் ரிசர்ச் ஷிப் பில்டர்ஸ் & இஞ்சினியர்ஸ் (Garden Reach Shipbuilders & Engineers Limited - GRSE) நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மாடுலர் பாலங்களும் பிரதமர் திரு. நரேந்திர மோடியின் “இந்தியாவில் தயாரிப்போம்” முயற்சியின் கீழ் , வெற்றிகரமாக பரிசோதனை முறையில் தயாரிக்கப்பட்டுள்ளன. முன்னணி பகுதிகளில் பாலங்கள் அமைப்பதில் இது ஒரு புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும்.
தேசத்தின் பாதுகாப்பிற்காக அவர்கள் ஆற்றிவரும் பங்கு குறித்து எல்லைச் சாலைஅமைப்புக்கு திரு.ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தார்.
***
(Release ID: 1637160)
Visitor Counter : 236