ஜல்சக்தி அமைச்சகம்

ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தைச் செயல்படுத்துமாறு அசாம் முதல்வருடன் காணொளி மாநாடு மூலமாக மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சர் விவாதித்தார்

Posted On: 07 JUL 2020 6:11PM by PIB Chennai

மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத், ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தை அசாம் மாநிலத்தில் நடைமுறைப்படுத்துவது குறித்து அசாம் முதல்வர் திரு சர்பானந்த சோனாவால் உடன் இன்று காணொளி மாநாடு மூலம் விவாதித்தார். நாட்டில் கிராமப்புறப் பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக, அவர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர, மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. குடிநீர் வழங்குவது என்பது ஒரு சேவை வழங்கும் முறையாகும். தரமான, தேவையான அளவிலான தண்ணீர், உரிய நேரத்தில், தொடர்ந்து முறையாக வழங்கப்பட வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காக அரசின் முதன்மை திட்டங்களுள் ஒன்றாக ஜல் ஜீவன் மிஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிராமத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவர்களது வீடுகளிலேயே குடிநீர்க் குழாய் மூலம் குடிநீர் வழங்க தொடர்பு ஏற்படுத்தித் தர வேண்டும் என்பது இந்தத் திட்டத்தின் நோக்கம்.  

2024ஆம் ஆண்டுக்குள் அசாம் மாநிலத்தில் உள்ள கிராமங்களில் உள்ள ஒவ்வொரு இல்லத்திலும், குடிநீர்க் குழாய் இணைப்பு ஏற்படுத்தி கொடுப்பதற்கான இலக்கை 100 சதவிகிதம் அடைய வேண்டும் என்று அசாம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் ஆர்சனிக் மற்றும் ஃப்ளோரைடு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள குடியிருப்புப் பகுதிகள் 38 81 பகுதிகளிலும், பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படுவதற்கு மிகுந்த கவனம் செலுத்துமாறு அசாம் முதல்வர் கேட்டுக் கொள்ளப்பட்டார். JE/ AES பாதிக்கப்பட்டுள்ள 10 மாவட்டங்களில் 14 ஆயிரத்து 725 கிராமங்களில் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்துமாறு அவர் கேட்டுக் கொள்ளப்பட்டார்

அசாம் மாநிலத்தில் மொத்தமுள்ள 63.35 லட்சம் கிராமப்புற இல்லங்களில் இதுவரை, 1.72 லட்சம் இல்லங்களுக்கு மட்டுமே குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 2020- 21ஆம் ஆண்டில் 13.15 லட்சம் இல்லங்களுக்கு குடிநீர்க் குழாய் இணைப்புகள் வழங்க அசாம் திட்டமிட்டுள்ளது.

2021ஆம் ஆண்டில் மாநிலத்துக்கு 1407 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் பங்கையும் சேர்த்தால் தற்போது மாநிலத்தில் 2072 கோடி ரூபாய் இருக்கும். மாநிலத்தின் செயல்திறன், நிதித்திறன் ஆகியவற்றின் அடிப்படையில், மாநிலத்திற்கு கூடுதல் ஒதுக்கீடு வழங்கப்படும். 15 வது நிதி ஆணைய உதவியாக அசாம் மாநிலத்திற்கு 1604 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 50 சதவிகிதம் குடிநீர் வழங்குதல், தூய்மை ஆகிய பணிகளுக்கு பயன்படுத்தப்பட வேண்டும். இந்த நிதி, கிராமங்களுக்குக் குடிநீர் வழங்குதல், பயன்படுத்தக்கூடிய கழிவுநீரை சுத்திகரித்து மறுபயன்பாட்டிற்குப் பயன்படுத்தும் திட்டங்கள், நீண்டகாலச் செயல்பாடு, பராமரிப்பு ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்பட வேண்டும் என்று மத்திய அமைச்சர் மாநில முதல்வரைக் கேட்டுக் கொண்டார்.

 

*****



(Release ID: 1637088) Visitor Counter : 148