விவசாயத்துறை அமைச்சகம்

ஜார்கண்டில் உள்ள இந்திய வேளாண் ஆய்வுக் கழக நிர்வாக, கல்விக் கட்டிடத்திற்கு டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்த ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Posted On: 06 JUL 2020 4:58PM by PIB Chennai

நாட்டிலுள்ள விவசாயிகளின் வருமானத்தை 2022ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்குவதற்கு அரசு உறுதி பூண்டுள்ளது என்றும், அது தொடர்பான பல்வேறு திட்டங்களையும் அரசு செயல்படுத்தி வருகிறது என்றும், முக்கிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்றும், மத்திய வேளாண் மற்றும் விவசாயிகளின் நலன், கிராமப்புற வளர்ச்சி, பஞ்சாயத்துராஜ் துறைகளுக்கான அமைச்சர் திரு.நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார். ஜார்கண்டில் ஹசாரிபாகில் பருஹிக்ருகே கௌரி கர்மாவில் உள்ள இந்திய வேளாண் ஆய்வுக் கழகத்தின் புதிய விருந்தினர் இல்லத்தையும், அதன் புதிய நிர்வாக, கல்விக் கட்டடங்களையும் காணொளி மாநாட்டின் மூலம், அமைச்சர் திறந்து வைத்துப் பேசினார். மறைந்த டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்த தினமான இன்று இந்த கட்டிடத்திற்கு டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் பெயரைச் சூட்டினார். ஒரு தேசம் ஒரு சட்டம் என்பதற்காகக் குரலெழுப்பி நாட்டின் ஒற்றுமைக்காகவும் ஒருங்கிணைப்புக்காகவும் பாடுபட்டு, காஷ்மீரில் தனது வாழ்க்கையைத் தியாகம் செய்தவர் டாக்டர். சியாமா பிரசாத் முகர்ஜி என்று திரு தோமர் கூறினார்.

2020- 21ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட 16 அம்ச செயல்திட்டமும், புதிய சட்ட விதிமுறைகளும் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குதற்கான இலக்கை அடைய உதவும் என்று அமைச்சர் கூறினார். வேளாண் செயல்பாடுகளுக்காகவும், நீர்ப்பாசனம், கிராமப்புற வளர்ச்சி ஆகியவற்றுக்காகவும், அரசு 2.83 லட்சம் கோடி ரூபாயை - இதுவரை இல்லாத அளவிற்கு உயரிய தொகையை - ஒதுக்கியுள்ளது என்று அமைச்சர் கூறினார். சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் வேளாண் துறைக்கு கட்டமைப்பு நிதியத்திற்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் உட்பட பல புதிய திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

மத்திய வேளாண் துறை இணை அமைச்சர்கள் திரு புருஷோத்தம் ரூபாலா, திரு கைலாஷ் சவுத்ரி, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் தலைமை இயக்குர் டாக்டர் திரிலோசன் மகாபாத்ரா, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் இயக்குர் டாக்டர் ஏ கே சிங், இதர அதிகாரிகள், விஞ்ஞானிகள், விவசாயிகள் இந்த காணொளி மாநாட்டில் பங்கேற்றனர்.

 

***



(Release ID: 1636840) Visitor Counter : 212