பாதுகாப்பு அமைச்சகம்
தில்லி சர்தார் வல்லபாய் பட்டேல் கோவிட் மருத்துவமனையில் பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் ஆகியோர் ஆய்வு.
Posted On:
05 JUL 2020 5:24PM by PIB Chennai
பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் ஆகியோர், 1000 படுக்கைகள், 250 தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் கொண்ட தில்லி சர்தார் வல்லபாய் பட்டேல் கோவிட் மருத்துவமனைக்கு இன்று சென்று ஆய்வு மேற்கொண்டனர். பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO), மத்திய உள்துறை அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம், ஆயுதப்படையினர், டாடா சன்ஸ் மற்றும் இதரத் தொழில் நிறுவனங்களுடன் சேர்ந்து, இந்தப் புதிய மருத்துவமனையை 12 நாள் என்ற சாதனைக் காலத்தில் ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு அமைச்சருடன் தில்லி முதலமைச்சர் திரு. அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய உள்துறை இணையமைச்சர் திரு. ஜி.கிஷன் ரெட்டி ஆகியோரும் சென்றிருந்தனர்.
மருத்துவமனைக்குச் சென்ற திரு. ராஜ்நாத் சிங், அங்குள்ள வசதிகள் பற்றி மனநிறைவை வெளியிட்டார். இந்தக் குறுகிய காலத்தில் இத்தகைய மருத்துவமனையை கட்டமைத்த சம்பந்தப்பட்ட அனைவருக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார். தேசியத் தலைநகரில் தற்போது, கோவிட்-19 பரவல் அதிகரித்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. நோயாளிகள் அதிகரித்து வருவதால், அவர்களுக்கு அதிக மருத்துவ கவனம் தேவைப்படுகிறது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, உள்துறை அமைச்சகம், சுகாதார அமைச்சகம், ராணுவம், தொழில்துறையினர், தெற்கு தில்லி மாநகராட்சி, தில்லி நிர்வாகம் ஆகியவை இணைந்து மேற்கொண்ட தனித்துவமான முயற்சியின் பலனாக, நெருக்கடியான ,இந்த நிலையை எதிர்கொள்வதற்காக இந்த மருத்துவமனை உருவாக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைக்குச் சென்றிருந்த அமைச்சர்கள் உள்ளிட்டவர்களுக்கு , தலைவர் டாக்டர் ஜி.சதீஷ் ரெட்டி அங்குள்ள வசதிகள் பற்றி விளக்கிக் கூறினார்.
****
(Release ID: 1636682)
Visitor Counter : 245