ரெயில்வே அமைச்சகம்

குறிப்பிட்ட 109 இணையான பயணப்பாதைகளில் பயணிகள் ரயில் சேவையை மேற்கொள்ள தனியார் பங்கேற்பிற்கு ரயில்வே அமைச்சகம் தகுதிக்கான கோரிக்கைகளை வரவேற்றுள்ளது

இத்திட்டத்தின் மூலம் சுமார் ரூ.30,000 கோடி தனியார் துறை முதலீடு பெறப்படும். இந்திய ரயில்வே வலைப்பின்னலில் பயணிகள் ரயில் சேவையில் தனியார் முதலீட்டிற்கான முதல் முன்முயற்சி இதுவேயாகும்
குறைந்த பராமரிப்பு தேவைப்படுகின்ற, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய, குறைந்த பயண நேரம் பிடிக்கின்ற, வேலைவாய்ப்பினை அதிகரிக்கின்ற, கூடுதலான பாதுகாப்பை வழங்குகின்ற, உலகத் தரத்திலான பயண வசதியை வழங்குகின்ற வண்டிகளை அறிமுகப்படுத்துவதே இந்த முன்முயற்சியின் நோக்கமாகும்

Posted On: 01 JUL 2020 7:09PM by PIB Chennai

109 இணை பயணப்பாதைகளில் 151 நவீன ரயில் வண்டிகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் பயணிகள் ரயில் சேவையினை நடத்துவதில் தனியார் பங்கேற்பிற்கென தகுதிக்கான கோரிக்கையை ரயில்வே அமைச்சகம் கோரியுள்ளது.

இந்த 109 இணை பயணப்பாதைகளும் இந்திய ரயில்வே வலைப்பின்னலின் ஊடாக 12 மையங்களில் அடங்குவதாக இருக்கும். இதில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு வண்டியும் குறைந்தபட்சம் 16 ரயில் பெட்டிகளைக் கொண்டதாக இருக்கும்.

இத்திட்டத்தின் மூலம் பெறப்படும் தனியார் துறை முதலீடு என்பது ரூ. 30,000 கோடி என்ற அளவில் இருக்கும். இந்திய ரயில்வே வலைப்பின்னலில் பயணிகள் ரயில் சேவையில் தனியார் முதலீட்டிற்கான முதல் முன்முயற்சி இதுவே ஆகும். 

இதற்கான வண்டிகளில் பெரும்பாலானவை இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டவையாக இருக்கும். இந்த வண்டிகளுக்கான நிதி, கொள்முதல், செயல்படுத்தல், பராமரிப்பு ஆகியவற்றுக்கு தனியார் நிறுவனமே பொறுப்பேற்றுக் கொள்ளும்.

அதிகபட்சமாக மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய வகையில் இந்த வண்டிகள் வடிவமைக்கப்படும். இதன் விளைவாக பயண நேரம் கணிசமான அளவிற்குக் குறையும். அந்தக் குறிப்பிட்ட பயணப்பாதையில் இந்திய ரயில்வே செயல்படுத்தி வரும் அதிவேக வண்டியின் வேகத்தை ஒத்ததாக அல்லது அதைவிட வேகமானதாக இந்த வண்டிகளின் பயண நேரம் இருக்கும்.

குறைந்த பராமரிப்பு தேவைப்படுகின்ற, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய, குறைந்த பயண நேரம் பிடிக்கின்ற, வேலைவாய்ப்பினை அதிகரிக்கின்ற, பயணிகளுக்கு கூடுதலான பாதுகாப்பை வழங்குகின்ற, உலகத் தரத்திலான பயண வசதியை வழங்குகின்ற, அதே நேரத்தில் பயணிகள் போக்குவரத்துத் துறையில் தேவைக்கான வழங்கலில் நிலவும் பற்றாக்குறையை குறைக்கும் வகையிலும் வண்டிகளை அறிமுகப்படுத்துவதே இந்த முன்முயற்சியின் நோக்கமாகும்.

இதற்கான ஒப்பந்த கால அளவும் 35 ஆண்டுகளாக இருக்கும்.

இதற்காக தேர்ந்தெடுக்கப்படும்  தனியார் நிறுவனங்கள் நிர்ணயிக்கப்பட்ட இழுத்துச் செல்லும் கட்டணங்கள், நுகர்விற்கு ஏற்ப மின் கட்டணங்கள், வெளிப்படையான ஏல நடைமுறையின் மூலம் தீர்மானிக்கப்பட்ட ஒட்டுமொத்த வருவாயில் ஒரு பங்கு ஆகியவற்றை இந்திய ரயில்வேக்கு செலுத்த வேண்டும்.

இந்திய ரயில்வேயைச் சேர்ந்த ஒரு ஓட்டுநர் மற்றும் பாதுகாப்பாளர் ஆகியோரைக் கொண்டு இந்த வண்டிகள் செயல்பட வேண்டும்.

குறித்த நேரம், நம்பிக்கைத் தன்மை, வண்டிகளை முறையாகப் பராமரித்தல் போன்ற செயல்பாட்டிற்கான முக்கிய அளவீடுகளுக்கு பொருந்தும் வகையில் தனியார் நிறுவனங்கள்  இந்த வண்டிகளை செயல்படுத்த வேண்டும்.

இந்த வண்டிகளின் செயல்பாடு மற்றும் பராமரிப்பு ஆகியவை இந்திய ரயில்வேயினால் வரையறுக்கப்பட்ட தரவீடுகள், விவரக் குறிப்புகள், தேவைகள் ஆகியவற்றுக்கு கட்டுப்பட்டவை ஆகும்.

www.eprocure.gov.in

இது தொடர்பான மேல் விவரங்களுக்கும், தொகுப்பு அளவிலான விவரங்களுக்கும் மேலே தரப்பட்டுள்ள இணைய தளத்தில் தீவிர ஒப்பந்தக் கோரிக்கைகள் என்ற பகுதியை அணுகவும்.

 

*****(Release ID: 1635871) Visitor Counter : 249