பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் இந்தியாவின் உஜ்வாலா அனுபவம் வங்கதேசத்தில் சமூக மாற்றத்திற்கு கிரியா ஊக்கியாக இருக்கும் என்கிறார்
Posted On:
01 JUL 2020 10:48AM by PIB Chennai
துபாயில் அமைந்துள்ள இந்தியன் ஆயில் கழகத்தின் துணைநிறுவனமான ஐஓசி மத்திய கிழக்கு, எஃப்.இசட்.இ என்ற நிறுவனத்துக்கும் பெக்சிம்கோ குழுமத்தின் ஆர்.ஆர். ஹோல்டிங்ஸ் லிமிடெட்டுக்கும் இடையிலான கூட்டுத்தொழில் ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் நிகழ்ச்சியில் செவ்வாய்கிழமை அன்று மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் எஃகுத் துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி வங்கதேசத்தின் மாண்புமிகு பிரதம மந்திரியின் ஆலோசகர் மதிப்புமிகு சல்மான் ஃபஸ்லூர் ரகுமான் மற்றும் வங்கதேசத்தின் மின்சக்தி, எரிசக்தி மற்றும் கனிம மூலவளத் துறைகளின் இணையமைச்சர் மதிப்புமிகு நஸ்ருல் ஹமித் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்தக் கூட்டு ஒப்பந்தத்தின் மூலமாக பெக்சிம்கோவுடன் இணைந்து ஐஓசிஎல் வங்கதேசம் மற்றும் இதர நாடுகளில் ஊரக அளவில் வர்த்தகத்தை விரிவுபடுத்தத் திட்டமிடும்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய திரு.பிரதான், வரலாறு, கலாச்சாரம் மற்றும் பரஸ்பர தியாகம் ஆகியவற்றால் பிணைக்கப்பட்ட இந்தியா மற்றும் வங்கதேசத்திற்கு இடையில் நீண்டநாட்களாக தொடரும் உறவை எடுத்துக்காட்டினார். இந்திய வங்கதேச உறவில் எரிசக்தி துறையின் பங்களிப்பு குறித்து பேசிய அவர், ”கடந்த சில ஆண்டுகளில் நமது இரு நாடுகளுக்கும் இடையிலான எரிசக்தி தொடர்பான கூட்டுறவு குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். ”நமது அண்டைநாடுகளுக்குத்தான் முன்னுரிமை” என்பதன் ஒரு அங்கமாக வங்கதேசத்துடன் ”மின்னாற்றல் பாலம்” கட்டமைக்கும் மாண்புமிகு பிரதமர் திரு.நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின் ஒரு அங்கமாக இந்த ஒப்பந்தம் உள்ளது. அண்மையில் வங்கதேசப் பிரதமர் அக்டோபர் 2019ல் புதுதில்லிக்கு வருகை தந்த போது இரு நாடுகளின் பங்கேற்பும், கூட்டுறவுக்கான புதிய வாய்ப்புகளும் வலுப்படுத்தப்பட்டன”.
கூட்டுத்தொழில் ஒப்பந்தம் குறித்து பேசிய அமைச்சர், வங்கதேசத்துடன் இருதரப்பு எரிசக்தி கூட்டுறவை விரிவுபடுத்துவதற்கான மற்றொரு நடவடிக்கையாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது என்று குறிப்பிட்டார். இந்தியாவில் மாசு ஏற்படுத்தாத சமையல் எரிவாயுவாக எல்பிஜி பயன்பாட்டை ஊரகப்பகுதிகளில் அதிகரிப்பதற்கான பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தை நடைமுறைப்படுத்தியதில் முன்னோடி நிறுவனமாக இந்தியன் ஆயில் நிறுவனம் இருப்பதால் அதனுடைய அனுபவம் வங்கதேசத்தில் எல்பிஜி பயன்பாட்டை அதிகரிக்கப் பயன்படும் என்று தான் நம்புவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். வங்கதேசத்துடனான இந்தக் கூட்டுத்தொழில் ஒப்பந்தம் வங்கதேசத்தில் மாசு ஏற்படுத்தாத சமையல் எரிவாயு பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம் சமூகப் பொருளாதார மாற்றத்திற்கு ஒரு கிரியாஊக்கியாக அமையும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
வங்கதேசத்தின் மாண்புமிகு பிரதமரின் ஆலோசகர் மதிப்புமிகு சல்மான் ஃபஸ்லூர் ரகுமான், ”இந்தக் கூட்டுத்தொழில் ஒப்பந்தமானது வங்கதேசத்தின் அளப்பரிய முதலீட்டு வாய்ப்புகளுக்கு ஒரு சான்றாதாரமாக விளங்குகிறது. கோவிட்-19 பெருந்தொற்று பரவலின் காரணமாக ஒட்டுமொத்த உலகமும் கடுமையான பொருளாதார பாதிப்பால் சிக்கித் தவிக்கும் போது இந்த முதலீடு நிலைமைக்குத் தகுந்தார் போல் செயல்படுவதையும், இந்தியா மற்றும் வங்கதேசத்திற்கு இடையிலான நீண்டநாள் நட்பை உறுதிப்படுத்துவதாகவும் உள்ளது” என்று கூறினார்.
(Release ID: 1635629)
Visitor Counter : 223