நிதி அமைச்சகம்
பங்குப் பத்திர முறைகளில் நாடு முழுக்க முத்திரைத் தாள் தீர்வையை வசூலிக்கும் சீரமைத்த நடைமுறைக்காக , இந்திய முத்திரைத்தாள் சட்டம் 1899-இல் திருத்தங்கள் மற்றும் விதிகளை 2020 ஜூலை 1 ஆம் தேதியில் இருந்து அமல்படுத்துதல்.
Posted On:
30 JUN 2020 6:42PM by PIB Chennai
நிதிச் சட்டம் 2019-இன் மூலம் இந்திய முத்திரைத் தாள் சட்டம், 1899-இல் கொண்டு வரப்பட்டத் திருத்தங்கள் மற்றும் அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிமுறைகள், 2020 மார்ச் 30 ஆம் தேதியிட்ட அறிவிக்கையின்படி, நாளையில் இருந்து, அதாவது 2020 ஜூலை 1 ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வருகின்றன.
தொழில் செய்யும் சூழலை எளிதாக ஆக்குவதற்காகவும், அனைத்து மாநிலங்களிலும் பங்குப்பத்திரங்கள் மீதான முத்திரைத்தாள் தீர்வை ஒரே மாதிரியாக இருக்கும்படி செய்வதற்காகவும், அதன் மூலம் இந்தியா முழுக்க ஒரே மாதிரியான பங்குப் பத்திர மார்க்கெட்டை உருவாக்குவதற்காக, மாநிலங்களுடன் உரிய ஆலோசனைகள் மற்றும் கலந்தாடல்களை செய்த பிறகு, மத்திய அரசு, இந்திய முத்திரைத் தாள் சட்டம் 1899இல் உரிய திருத்தங்களைச் செய்து, அதன் கீழ் விதிமுறைகளை உருவாக்கியது. ஒரு பங்குப் பத்திர ஆவணத்தின் மீது ஒரு இடத்தில், ஒரு ஏஜென்சியால் (பங்குப் பரிவர்த்தனை மையம் அல்லது அதனால் அங்கீகரிக்கப்பட்ட கிளியரிங் காப்ப்பரேசன் அல்லது கருவூலத் துறை) முத்திரைத்தாள் தீர்வையை மாநிலங்கள் வசூலிப்பதற்கான சட்டப்பூர்வ மற்றும் நிறுவனம் சார்ந்த நடைமுறை உருவாக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் முத்திரைத் தாள் தீர்வையைப் பகிர்ந்து கொள்வதற்கான நடைமுறையும் உருவாக்கப்பட்டுள்ளது. பத்திரம் வாங்குபவர் வாழும் மாநிலத்தின் அடிப்படையில் அது இருக்கும் வகையில் நடைமுறை அமைந்துள்ளது.
இப்போதுள்ள நடைமுறையின்படி, ஒரே பத்திரத்துக்கு பங்குப் பரிவர்த்தனைகளில் பல இடங்களில் தீர்வைகள் வசூலிக்கப்படுவதால், அதிகார வரம்பு எல்லை சர்ச்சைகளும், பல முறை தீர்வை செலுத்தும் நிலையும் உருவாகி, பங்குப் பத்திர மார்க்கெட்டில் பரிவர்த்தனை செலவுகள் அதிகரிக்கின்றன. இதனால் மூலதனம் உருவாதல் பாதிக்கப்படுகிறது.
நிதிச் சட்டம் 2019ல் இதற்கான அம்சங்கள்
இந்திய முத்திரைத் தாள் சட்டம், 1899-இல் இதற்கான அம்சங்கள் நிதிச் சட்டம் 2019இல் திருத்தப்பட்டன. மேலும், அதன் தொடர்ச்சியாக அதே சமயத்தில், 2019 டிசம்பர் 10 ஆம் தேதி, இந்திய முத்திரைத் தாள் (பங்குப் பரிவர்த்தனை மையங்கள், கிளியரிங் கார்ப்பரேசன்கள் மற்றும் கருவூலங்கள் மூலம் முத்திரைத் தாள் தீர்வை வசூல் செய்தல்) விதிகள் 2019 திருத்தப்பட்டன. இவை 2020 ஜனவரி 9 ஆம் தேதி அமலுக்கு வருவதாக இருந்தது. 2020 ஜனவரி 8 ஆம் தேதியிட்ட அறிவிக்கையின்படி, இந்தத் தேதி 2020 ஏப்ரல் 1 என மாற்றப்பட்டது. மேலும், இதில் தொடர்புடையவர்களிடம் இருந்து வந்த கோரிக்கைகள் காரணமாகவும், கோவிட்-19 பாதிப்பால் நாடு முழுக்க முடக்கநிலை அமலுக்கு வந்ததாலும், மற்ற துறைகளில் அளிக்கப்பட்ட சட்டபூர்வ மற்றும் ஒழுங்குமுறை ஒத்திசைவுகளில் அளிக்கப்பட்ட சலுகைகள் காரணமாகவும், இந்திய முத்திரைத் தாள் சட்டம், 1899இல் நிதிச் சட்டம் 2019இன் படி கொண்டு வரப்பட்டத் திருத்தங்களை அமல் செய்வதற்கான தேதி, 2020 மார்ச் 30 தேதியிட்ட அறிவிக்கையின்படி 2020 ஜூலை 1 என மாற்றப்பட்டது.
எதிர்பார்க்கப்படும் தாக்கம்
சீர் செய்யப்பட்ட நடைமுறையின் மூலம் மையமாக்கப்பட்ட தீர்வை வசூல் நடைமுறையால், வசூல் செய்வதற்கான செலவு குறைந்தபட்ச அளவில் இருப்பது உறுதி செய்யப்படுவதுடன், வருவாய்ப் பெருக்கம் அதிகரிக்க உதவுவதாகவும் இருக்கும். மேலும், நாடு முழுக்க பங்குச் சந்தைகள் மற்றும் பங்கு வர்த்தகப் பழங்கங்கள் மேம்பட்டு, மாநிலங்களில் அளவில் சமச்சீரான வளர்ச்சி கிடைக்கவும் உதவியாக இருக்கும்.
சிறப்பு அம்சங்கள்
முத்திரைத் தீர்வை விகிதங்களைச் சீராக்குவதற்காக, செய்யப்பட்ட திருத்தங்கள் மூலம் பின்வரும் அமைப்பு முறை சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது: -
- விற்பனை, பரிமாற்றம் மற்றும் பங்குப்பத்திரம் வெளியிடுதலுக்கான முத்திரைத் தாள் தீர்வை மாநில அரசு சார்பில், வசூல் ஏஜென்ட்களால் வசூலிக்கப்படும். அந்த ஏஜென்சிகள் அந்த முத்திரைத் தீர்வையை சம்பந்தப்பட்ட மாநிலத்தின் கணக்கில் செலுத்திவிடும்.
- பல முறை வரிக்கு உட்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கு, அடுத்த நிலையில் பரிவர்த்தனை செய்யும் போது, முத்திரைத் தீர்வை வசூலிக்கும் அத்தாட்சி பெற்ற கருவூலம் / பங்குப் பரிவர்த்தனை மையம் மூலம் மாநிலங்கள் முத்திரை தீர்வை எதையும் வசூலிக்கக் கூடாது.
- இப்போதைய நடைமுறையின்படி, வாங்குபவர் மற்றும் விற்பவர் என இரு தரப்பினருமே முத்திரைத் தீர்வை செலுத்த வேண்டியுள்ளது. புதிய நடைமுறையின்படி ஒரு தரப்பில் மட்டுமே (வாங்குபவர் அல்லது விற்பவர், ஆனால் இருவரும் அல்ல, வாங்குபவர் மற்றும் விற்பவர் என இரு தரப்பினரும் சம பங்கு செலுத்தும் சில குறிப்பிட்ட ஆவணப் பரிமாற்றம் தவிர்த்த விஷயங்களில்).
- பங்குப் பரிவர்த்தனை மையங்கள் அல்லது அத்தாட்சி பெற்ற கிளியரிங் கார்ப்பரேசன்கள் மற்றும் கருவூலங்கள் இதற்கான வசூல் ஏஜென்ட்களாக இருக்கும்.
- பரிவர்த்தனை சார்ந்த அனைத்து இரண்டாம் நிலை பத்திரப் பரிவர்த்தனைகளுக்கும், பங்குப் பரிவர்த்தனை மையங்கள் முத்திரைத் தீர்வையை வசூலிக்கலாம்; மார்க்கெட் அல்லாத முறையிலான பரிவர்த்தனைகளுக்கு (வர்த்தக தரப்பாரால் தெரிவிக்கப்படும் அனுசரணைகளின்படி செய்யப்படுபவை) மற்றும் டிமேட் படிவத்தில் நடைபெறும் ஆரம்ப நிலை பங்குப் பத்திரங்கள் வெளியிடுதல் ஆகியவற்றுக்கு கருவூலங்கள் முத்திரை தீர்வையை வசூலிக்கும்.
- ஆர்.பி.ஐ.யின் அதிகார வரம்புக்கு உள்பட்டு கிளியரிங் கார்ப்பரேசன் ஆஃப் இ்தியா லிமிடெட் (CCIL) மற்றும் வெளியீடுகளுக்கான பதிவாளர்கள் மற்றும் / அல்லது பங்கு பரிமாற்ற ஏஜென்ட்களை (RTI/STA-கள்) வசூல் ஏஜென்ட்களாக செயல்பட மத்திய அரசு அறிவிக்கை செய்துள்ளது. OTC வகையிலான பரிவர்த்தனைகள் சி.சி.ஐ.எல்.-க்கு தெரிவிக்கப்படுதல் மற்றும் பரஸ்பர நிதிகளில் டிமேட் அல்லாத, RTI/STA-களால் கையாளப்படும் பரிவர்த்தனைகளை முத்திரைத் தீர்வை செலுத்தும் வரம்பிற்குள் கொண்டு வந்து, தரகுக் கட்டணத்தை தவிர்க்க வேண்டும் என்பது இதனுடைய நோக்கமாக உள்ளது.
- ஒவ்வொரு மாதம் முடிந்த அடுத்த 3 வாரங்களில் வசூல் ஏஜென்ட்கள், வசூலித்த முத்திரைத் தீர்வையை, அதை வாங்கியவர் வாழும் மாநிலத்தின் அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். வாங்கியவர் இந்தியாவுக்கு வெளியில் வாழ்பவராக இருந்தால், அவருடைய வர்த்தக உறுப்பினர் அல்லது புரோக்கரின் பதிவு செய்த அலுவலகம் உள்ள மாநில அரசுக்கு அனுப்ப வேண்டும். வாங்கியவருக்கு வர்த்தக உறுப்பினர் யாரும் இல்லாவிட்டால், பங்கேற்பாளரின் பதிவு அலுவலகம் உள்ள மாநிலத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
- சம்பந்தப்பட்ட மாநில அரசு இந்திய ரிசர்வ் வங்கியில் அல்லது ஏதேனும் ஒரு வணிக வங்கியில் வைத்துள்ள கணக்கில், இந்த முத்திரைத் தீர்வையை வசூல் ஏஜென்ட் செலுத்த வேண்டும். இந்திய ரிசர்வ் வங்கி அல்லது சம்பந்தப்பட்ட வங்கி இந்தத் தகவல்களை வசூல் ஏஜென்ட்களுக்கு தெரிவித்திருக்கும்.
- மாநில அரசு சார்பாக முத்திரைத் தீர்வை வசூலித்தத் தொகையை அந்த மாநிலத்துக்கு அனுப்புவதற்கு முன்பு, சேவைக் கட்டணங்களுக்காக 0.2 சதவீதத்தை வசூல் ஏஜென்ட்கள் கழித்துக் கொள்ளலாம்.
- பல பிரிவுகளுக்கு, தீர்வை குறைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, மூலதன உருவாக்கல் மற்றும் கார்ப்பரேட் பத்திர மார்க்கெட் ஊக்குவிப்புக்காக பங்கு/ கடனீட்டுப் பத்திரங்கள் வெளியிடுதல் மற்றும் கடனீட்டுப் பத்திரங்கள் பரிமாற்றம் (மறு வெளியிடுதல் உள்பட) செய்வதற்கான தீர்வை குறைவாக உள்ளது.
- ரொக்கப் பிரிவு வர்த்தகத்தில் (டெலிவரி மற்றும் டெலிவரி அல்லாத பரிவர்த்தனைகள்) மற்றும் ஆப்சன்களுக்கு, புதிய திட்டத்தின் கீழ் ஒரு தரப்பாருக்கு மட்டுமே கட்டணங்கள் விதிக்கப்பட வேண்டும் என்பதால், ஒட்டுமொத்த அளவில் வரி குறைந்துள்ளது என்று கூறலாம்.
- சில அடிப்படை புள்ளிகள் வித்தியாசத்துடன் நடைபெறும் பத்திரங்கள் இரண்டாம் நிலை மார்க்கெட் பரிமாற்றத்தில், வட்டி விகிதம்/ கரன்சி கடனீட்டுப் பத்திரங்கள் அல்லது கார்ப்பரேட் பத்திரங்கள் போன்றவற்றுக்கு இப்போது உள்ளதை விட மிக குறைவான தீர்வையே விதிக்கப்பட்டுள்ளது. புதிதாக அறிமுகம் செய்துள்ள `கார்ப்பரேட் பத்திரங்கள் மீதான ரெப்போ' பொருத்த வரையில், மிகவும் குறைவான தீர்வை குறிப்பிடப்பட்டுள்ளது. இதே நிலையில் உள்ள அரசு பங்குப் பத்திரங்களுக்கான ரெப்போவுக்கு தீர்வை இல்லை என்பதால் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் சட்டம், 2005-இன் பிரிவு 18இன் கீழ் உருவாக்கப்பட்ட சர்வதேச நிதிச் சேவைகள் மையம் எதன் மூலமாகவும் உருவாக்கப்பட்ட கருவூலங்கள் மற்றும் பங்குப் பரிவர்த்தனை மையங்களில் நடைபெறும் பத்திரங்களின் பரிவர்த்தனைகளுக்கு முத்திரைத் தீர்வை எதுவும் விதிக்கப்படாது.
- பங்குப் பத்திரம் வெளியிடுதல் அல்லது மறு வெளியிடுதல் அல்லது விற்பனை அல்லது பரிமாற்றம் ஆகியவை பங்குப் பரிவர்த்தனை மையங்கள் மற்றும் கருவூலங்களுக்கு வெளியே நடைபெறும் போது, தரகுக் கட்டணம் தவிர்க்கப் படுகிறது.
- பங்குப் பத்திரங்களில் டெலிவரி அடிப்படையிலான பரிவர்த்தனைகளாக பரஸ்பர நிதிகள் இருப்பதால், பல்வேறு மாநில சட்டங்களின் கீழ் தீர்வை செலுத்த வேண்டியுள்ளது. எனவே அனைத்து பரஸ்பர நிதிகளின் பரிவர்த்தனைகளும் முத்திரை தீர்வைக்கு உள்பட்டவையாக உள்ளன. புதிய நடைமுறையின்படி, அனைத்து மாநிலங்களிலும் கட்டணங்கள் ஒரே மாதிரியாக இருக்கும்படி செய்யப்பட்டு, தீர்வை வசூலிக்கும் நடைமுறையை சீராக்குவது என்ற மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது.
அமலாக்கத்துக்கான தயார்நிலை
பொருளாதாரத்தில் பங்குச் சந்தைகள் முக்கிய பங்கு வகிப்பதால், நோய்த் தொற்று சூழ்நிலையில் கடுமையான முடக்கநிலைக் காலக்கட்டத்திலும், பங்குச் சந்தை தொடர்ந்து செயல்படுவதை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டன.
முத்திரைத் தாள் சட்டத்தில் திருத்தங்கள் மற்றும் கட்டண விகிதங்கள் 2019 பிப்ரவரியில் (நிதிச் சட்டம் 2019 அறிவிக்கை செய்யப்பட்டதில்) இருந்து பொது மக்கள் பார்வையில் உள்ளன. இதற்காக தயார் செய்ய மார்க்கெட்டுக்கு போதிய கால அவகாசம் இருந்தது. பங்குப் பரிவர்த்தனை மையங்கள், கிளியரிங் கார்ப்பரேசன்கள், கருவூலங்கள், சி.சி.ஐ.எல். மற்றும் RTI/STA-களில் செயல்பாட்டு முறைமைகள் அனைத்தும், இந்த மாற்றங்களை 2020 ஜூலை 1 ஆம் தேதியில் இருந்து அமல் செய்வதற்கு முழு தயார் நிலையில் உள்ளன.
இந்தத் திட்டம் 2020 ஜூலை 1 ஆம் தேதியில் இருந்து எளிதாக அமல் செய்யப்படுவதை உறுதி செய்வதற்கு, குறிப்பிட்ட விஷயங்களில் விளக்க சுற்றறிக்கைகள் / செயல்பாட்டு வழிகாட்டுதல்களை அளிக்க இந்திய முத்திரைத் தாள் சட்டம் 1899இன் கீழ் ஒழுங்காற்றும் நிறுவனங்களுக்கு (RBI & SEBI) மத்திய அரசு அதிகாரம் வழங்கியுள்ளது.
(Release ID: 1635456)
Visitor Counter : 448