மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் “நிஷாங்க்” கோவிட் நெருக்கடி சூழலில் கல்வி அமைப்பை மீண்டும் எழுச்சி பெற வைக்க இந்தியா எடுத்துவரும் முயற்சிகளை, ஜி20 உறுப்பினர்களிடையே எடுத்துரைத்தார்.

Posted On: 27 JUN 2020 8:58PM by PIB Chennai

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க்இன்று ஜி20 நாடுகளுடைய கல்வி அமைச்சர்களின் அசாதரணமான மெய்நிகழ் சந்திப்பு நிகழ்வில் கலந்து கொண்டார். கல்வித் துறையின் மீது கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலின் தாக்கங்கள் குறித்து விவாதிப்பதற்காக இந்தச் சிறப்பு அமர்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. பல்வேறு நாடுகளும் இந்தப் பிரச்சினையை எப்படி எதிர்கொண்டன என்பது குறித்தும், இந்த நெருக்கடியான காலகட்டத்தில் கல்விச் செயல்பாடுகளை முன்னெடுப்பதற்கு உறுப்பு நாடுகள் எவ்வாறு ஒருங்கிணைந்து செயலாற்றுவது என்பது குறித்தும் விவாதிக்கவே இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது.

மத்திய அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த ஜி20 நாடுகளின் வரலாற்றுச் சிறப்பு மிக்க மற்றும் பொருத்தமான கூட்டத்தை நடத்த முன்முயற்சி எடுத்ததற்காக தலைவருக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.  பெருந்தொற்றுப் பரவல் கல்வித்துறையில் ஏற்படுத்தி உள்ள பரவலான தடங்கல்களை ஒருங்கிணைந்து எதிர்கொள்ளும் வகையில் இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்ததற்காகவும் அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.

கோவிட்-19 நெருக்கடி காலகட்டத்தின் போது டிஜிட்டல் வழி கற்றலை மேம்படுத்துவதற்காக மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் எடுத்து வரும் முயற்சிகள் குறித்த தகவல்களை திரு பொக்ரியால் கூட்டத்தினரிடையே பகிர்ந்து கொண்டார். கடந்த சில ஆண்டுகளில் மிகச் சிறப்பான டிஜிட்டல் கல்விக்கான உள்ளடக்கங்களை நாங்கள் உருவாக்கி உள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்இந்த உள்ளடக்கப் பாடங்கள் அனைத்தும் தீக்‌ஷா, ஸ்வயம், விர்ச்சுவல் லேப், இ- பாடசாலா மற்றும் தேசிய டிஜிட்டல் நூலகம் போன்ற பல்வேறு இணைய மேடைகளில் கிடைக்கின்றன.

டிஜிட்டல் முறையில் கல்வி கற்பதற்கு ஏற்ற வசதிகள் பல மாணவர்களுக்கு இல்லை என்பதை தாங்கள் உணர்ந்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.  டிஜிட்டல் பாகுபாட்டைக் குறைப்பதற்காக 34 டிடிஎச் சேனல்களைக் கொண்ட ஸ்வயம் பிரபா என்ற டிவியையும் சமுதாய வானொலி உள்ளிட்ட வானொலி அமைப்பையும் பயன்படுத்தி வருகிறோம். இவற்றின் உதவியோடு தொலைதூரப் பகுதிகளில் இருக்கின்ற மாணவர்களுக்குக் கூட நாங்கள் 24X7 நேரமும் கல்வியை வழங்கி வருகிறோம்.

அனைத்து இ-மூலவளங்களையும் ஒரே பொதுவான மேடையில் கொண்டு வர வேண்டும் என்பதற்காக நாங்கள் விரைவில் பிரதம மந்திரி இ-வித்யா திட்டத்தைத் தொடங்க இருக்கிறோம் என இந்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் தெரிவித்தார்.  இதில் கீழ்வருவன அடங்கும்:

ஒரே தேசம் ஒரே டிஜிட்டல் தளம்

ஒரே தேசம் ஒரே டிஜிட்டல் தளம் என்ற கருத்தாக்கத்தின் கீழ் கல்வி சார்ந்த இ-மூலவளங்கள் அனைத்தும் ஒரே தளத்தின் கீழ் கொண்டு வரப்படும்.  ஒருங்கிணைந்த ஒற்றைத் தேடுதல் மூலம் தேவையானதை இதில் எளிதில் பெறலாம்.

ஒரு வகுப்பு ஒரு சேனல்

1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்புக்கும் பிரத்யேகமான தனி டிவி சேனல் ஒதுக்கப்படும். இதன் மூலம் தரமான பாடங்கள் வழங்கப்படும்.

பிஎம் இ-வித்யா திட்டத்தின் மூலம் சுமார் 25 கோடி பள்ளிச் சிறுவர்கள் பலன் அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிகழ்ச்சிகள் பல்கலைக்கழகங்களில் ஆன்லைன்

நாட்டில் முதல் 100 தரநிலையில் உள்ள பல்கலைக்கழகங்கள் விரைவில் முழுமையான ஆன்லைன் வகுப்புகளைத் தொடங்க இருக்கின்றன.  மரபான, திறந்த நிலை மற்றும் தொலைநிலைக் கல்வி முறைகளில் அனுமதிக்கப்படக் கூடிய ஆன்லைன் பாடங்களின் அளவு 20 சதவீதம்  முதல் 40 சதவீதம் வரை அதிகரிக்கப்படும்.

ஸ்வயம் ஆன்லைன் திறந்தநிலைப் படிப்புகள்

ஸ்வயம் ஆன்லைன் திறந்தநிலைப் படிப்புகள் அனைத்தும், பல்கலைக்கழகப் பாடத் திட்டத்தோடு இணைக்கப்பட்டிருக்கும்.  உயர்கல்வி நிறுவனங்கள் இவற்றைத் தங்களது பாடத்திட்டத்தின் அங்கமாக உருவாக்கிக் கொள்ள ஊக்கப்படுத்தப்படும்.

மண்டல மொழிகள்

-கற்றல் பாடங்கள் எட்டு மண்டல மொழிகளில் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

டெய்ஸி (DAISY)

மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான சிறப்புப் பாடப்பொருள்கள் டிஜிட்டல் மூலம் அணுகக்கூடிய தகவல் அமைப்பிலும், சைகை மொழியிலும் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

மனோதர்பன்

மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் குடும்பத்தினர் ஆகியோருக்கு உளவியல் ரீதியான ஆதரவைத் தருவதற்கும் அவர்களது மன மற்றும் உடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவவும் கல்வி அமைச்சகம் முன்னெடுத்துள்ள முயற்சியாக மனோதர்பன் உள்ளது. ஆலோசனை வழங்குவதற்காக ஒரு தேசிய உதவி எண்ணும் இதில் நிறுவப்பட்டுள்ளது.


(Release ID: 1634967) Visitor Counter : 282