குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

முன்னாள் பிரதமர் நரசிம்மராவுக்கு பிறந்த தினத்தையொட்டி குடியரசு துணைத் தலைவர் மரியாதை.

Posted On: 28 JUN 2020 10:02AM by PIB Chennai

முன்னாள் பிரதமர் திரு.நரசிம்மராவுக்கு, அவரது பிறந்த தினத்தை ஒட்டி குடியரசு துணைத்தலைவர் திரு.எம்.வெங்கைய நாயுடு மரியாதை செலுத்தியுள்ளார். இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சியைச் சந்திக்கும் நிலைக்கு சென்ற முக்கியமான தருணத்தில் பொருளாதார சீர்திருத்தங்களை தொடங்குவதில் முக்கிய பங்காற்றியவர் நரசிம்மராவ் என்று அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

முகநூலில் பதிவிட்டுள்ள திரு. வெங்கைய நாயுடு, பொருளாதாரத்தை தாராளமயமாக்க நரசிம்மராவ் தொடங்கிய நடவடிக்கைகளைக் குறிப்பிட்டுள்ளார். “உரிமம் பெறுவதற்கு விதிக்கப்பட்ட கடும் கட்டுப்பாடுகளை அகற்றுவது, அதிகாரிகளின் கெடுபிடிகளைக் குறைப்பது, இந்தியத் தொழில் நிறுவனங்களை அதிக போட்டி நிறைந்ததாக மாற்றுவது ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அவர் விரும்பினார்,” என்று நினைவு கூர்ந்துள்ளார்.

வர்த்தகத்தை தாராளமயமாக்குவது மற்றும் சர்வதேசப் பொருளாதாரத்துடன், குறிப்பாக கிழக்கு ஆசிய பொருளாதாரத்துடன் மறு இணைப்பு செய்வதற்கு முன்னாள் பிரதமர் அடித்தளம் அமைத்தார் என்று குடியரசு துணைத் தலைவர் கூறியுள்ளார். அவர் குறிப்பிடும் போது, “உள்நாட்டை மையமாகக் கொண்ட முந்தைய ஆட்சி முறையிலிருந்து சர்வதேச ஒருங்கிணைப்புடன் கூடிய மேம்பாட்டுக்கான மாபெரும் மாற்றமாக இது அமைந்தது,” என்று தெரிவித்துள்ளார்.

அவர் ஒரு சீர்திருத்தவாதி, உலகின் மற்ற பகுதியில் என்ன நடக்கிறது என்பதை இந்தியா அறிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினார். நெருக்கடியை வாய்ப்பாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அவர் விரும்பினார், என்று திரு.வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

 

இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி அடுத்தடுத்த ஆண்டுகளில் அதிகரிப்பதற்கும், அண்மைக் காலமாக வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா உருவாவதற்கும் மிகப்பெரும் காரணகர்த்தாவாக  நரசிம்மராவ் விளங்கினார் என்று குடியரசு துணைத் தலைவர் கூறியுள்ளார்.

 

சீர்திருத்தங்களைத் தொடர வேண்டியது அவசியம் என்று அனைத்து தரப்பினர் மத்தியிலும் படிப்படியாக ஒருமித்த கருத்து ஏற்பட்டதாக குறிப்பிட்ட அவர், சீர்திருத்தங்களை முன்னாள் பிரதமர் திரு. அடல் பிகாரி வாஜ்பாயி வேகப்படுத்தினார் என்றும், தற்போதைய பிரதமர் திரு.நரேந்திர மோடி, சீர்திருத்தங்களை மிகவும் வேகமாக அமல்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

 

நாட்டின் அணுசக்திப் பாதுகாப்புக்கு வலுவான அடித்தளத்தையும் கூட திரு. நரசிம்மராவ் அமைத்ததாக குடியரசு துணைத்தலைவர் கூறியுள்ளார். இது தொடர்பாக குறிப்பிட்டுள்ள அவர், “இஸ்ரேலுடன் தூதரக உறவை ஏற்படுத்தியது, இந்தியா-அமெரிக்காவை ஒன்றாகக் கொண்டு வந்து, பல ஆண்டுகளாக நீடித்த மோதல் போக்கை மாற்றியது போன்ற வெளியுறவுக் கொள்கையில் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டார்” என்று தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மற்றும் காஷ்மீரில் பிரிவினைவாத இயக்கங்களைக் கட்டுப்படுத்துவதிலும் முன்னாள் பிரதமர் மிகப்பெரும் வெற்றிகண்டார் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிரதமராக நரசிம்மராவ் இருந்த காலத்தில், கிழக்கு நோக்கிய கொள்கையைத் தொடங்கியது, உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், முக்கியத்துவம் வாய்ந்த 73 மற்றும் 74-வது அரசியல்சாசன சட்டத் திருத்தங்களை மேற்கொண்டது ஆகியவை குறிப்பிடத்தக்க முக்கிய அம்சங்கள் என்றும் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

****



(Release ID: 1634958) Visitor Counter : 134