மத்திய அமைச்சரவை

விண்வெளித்துறையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீர்திருத்தங்கள்.


விண்வெளி செயல்பாடுகளில் தனியார் துறை பங்களிப்புக்கு ஒப்புதல்.

Posted On: 24 JUN 2020 4:20PM by PIB Chennai

விண்வெளிச் செயல்பாடுகள் அனைத்திலும், தனியார் துறை பங்கேற்பதை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் விண்வெளித்துறையில் நீண்டகாலப் பயனளிக்கும் சீர்திருத்தங்களுக்கு, பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவை மாற்றிமைத்து சுயசார்பு கொண்ட நாடாகவும், தொழில்நுட்ப ரீதியாக முன்னேற்றம் அடைந்த நாடாகவும் உருவாக்க வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்குத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

விண்வெளித் துறையில் மிகவும் முன்னேற்றமடைந்த திறன்கொண்ட சில நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இந்த சீர்திருத்தங்களைடுத்து விண்வெளித் துறைக்கு புதிய ஆற்றலும் எழுச்சியும் கிடைக்கும். விண்வெளித்துறையில் அடுத்தடுத்த கட்டங்களுக்கு பாய்ந்து செல்வதற்கு, நாட்டிற்கு இவை உதவும்.

 

இவை விண்வெளித்துறையில் விரைவான வளர்ச்சியை ஏற்படுத்தும். அதுமட்டுமல்லாமல் உலக அளவில் விண்வெளிப் பொருளாதாரத்தில், இந்திய தொழில்துறை, மிக முக்கியமான பங்கினை வகிக்க உதவும். தொழில்நுட்பத்துறையில் அதிக அளவிலான வேலைவாய்ப்புகள் பெருகும். உலக அளவில் தொழில்நுட்ப சக்தியின் இருப்பிடமாக இந்தியா உருவாகும்.

 

முக்கிய நன்மைகள்

தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கும், தொழில்துறையின் அடிப்படையை விரிவுபடுத்துவதற்கும் விண்வெளித்துறை கிரியா ஊக்கியாக செயல்படும். விண்வெளி உடைமைகள், தரவுகள், வசதிகள் ஆகியவற்றை அணுகுவது மேம்படுத்தப்படும் என்பது உட்பட விண்வெளி உடைமைகள், செயல்பாடுகள் ஆகியவற்றின் சமூக-பொருளாதார பயன்பாட்டை மேம்படுத்த, இந்தச் சீர்திருத்தங்கள் உதவும்.

.

புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள இந்திய தேசிய விண்வெளி மேம்பாடு மற்றும் அங்கீகார மையம் (IN-SPACe)  மூலமாக இந்திய விண்வெளிக் கட்டமைப்புகளைப் பயன்படுத்த தனியார் அமைப்புகளுக்கும் சம அளவில் வாய்ப்புகள் வழங்கப்படும்.

ஊக்கமளிக்கும் கொள்கைகள் மூலமாகவும், நட்பான கட்டுப்பாட்டு சூழல்கள் மூலமாகவும் விண்வெளிச் செயல்பாடுகளில் ஈடுபடும் தனியார் தொழில் துறைகளை கரம் பிடித்து, வளர்ச்சியுறச்  செய்து, வழிகாட்டும்.

 

புதிய விண்வெளி இந்தியா நிறுவனம் (NSIL) என்ற பொதுத்துறை நிறுவனம் விண்வெளிச் செயல்பாடுகளை மறுசீரமைக்கும். பொருள்கள் வழங்கப்படுவதற்கு ஏற்ப பொருள்களைப் பெறுவது என்ற நிலையிலிருந்து, தேவைக்கு ஏற்ப பொருள்களைப் பெறுவது என்ற முறை கடைப்பிடிக்கப்படும். இதனால் விண்வெளி உடைமைகள் அதிகபட்சமாகப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய முடியும்.

 

இந்தச் சீர்திருத்தங்கள் காரணமாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு இஸ்ரோ இனி ஆராய்ச்சி வளர்ச்சிப் பணிகள், புதிய தொழில்நுட்பங்கள், புதியனவற்றைக் கண்டறியும் இயக்கங்கள், மனிதர்களைக் கொண்ட விண்வெளிப் பயணத் திட்டம் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்த முடியும். கோள்களைக் கண்டறியும் இயக்கங்கள் சிலவற்றில் தனியார் துறையும் பங்கேற்கும் வகையில் வாய்ப்புகள் அறிவிப்பு செயல்முறைகள் செயல்படுத்தப்படும்.


(Release ID: 1633939) Visitor Counter : 282