கலாசாரத்துறை அமைச்சகம்
“நமஸ்தே யோகா – ஆரோக்கியமான தேசத்தின் ஆரோக்கிய இளைஞர்கள்” கருத்தரங்கில் கலாசார இணையமைச்சர்.
Posted On:
19 JUN 2020 10:11PM by PIB Chennai
“ஆரோக்கியமான தேசத்தின் ஆரோக்கியமான இளைஞர்கள் என்ற பொருளில் பேசினால், அதற்குச் சிறந்தது யோகப் பயிற்சி தான்” என்று மத்திய கலாசாரம் – சுற்றுலா (தனி) துறை இணையமைச்சர் திரு பிரகலாத் சிங் பட்டேல் குறிப்பிட்டார்.
‘நமஸ்தே யோகா- ஆரோக்கியமான நாட்டின் ஆரோக்கியமான இளைஞர்கள்’ (NamasteYoga- Healthy youth for Healthy Nation) என்ற இணையவழிக் கருத்தரங்கு (webinar) தில்லியிலிருந்து இணையவழியில் நடத்தப்பட்டது. நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற இந்த இணையவழிக் கருத்தரங்கில் (webinar) அமைச்சர் பிரகலாத் சிங் உரையாற்றினார்.
இந்த இணையவழிக் கருத்தரங்கில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு ஜம்யங் ஸெரிங் நம்கயால் (லடாக்), திரு தேஜஸ்வி சூர்யா (தெற்கு பெங்களூரு) திரு நிதீஷ் ப்ரமனிக் (மேற்கு வங்கம்), கலாசார அமைச்சகத்தின் செயலர் திரு ஆனந்த் குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியதாவது:
நாம் ஆரோக்கியமாக இருந்தால்தான் மற்றவர்களுக்கு உதவ முடியும். சிறிய தொற்றுக் கிருமிகளை எதிர்கொள்ள நமது நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்திக் கொள்ளவேண்டும். அப்படி நோய் எதிர்ப்பை வளர்த்துக் கொள்வதற்கு யோகா பெரிதும் உதவும்.
இந்தியப் பண்பாட்டின் ஓர் அங்கமாக யோகா விளங்குகிறது. பல்வேறு ஆசனங்களைப் பழகுவதால் நமது தினசரி வாழ்வில் யோகா ஆரோக்கியமான வாழ்வியலுக்கான வழியாக தெரிந்தோ தெரியாமலோ அது அமைந்துள்ளது.
யோகா நமக்கு நேர்மறை சக்தியை அளிக்கிறது. உடலை ஆரோக்கியமாக்குகிறது. மனதை அமைதிப்படுத்துகிறது. இளைஞர்கள் ஆரோக்கியமாக இருந்தால், தேசமே ஆரோக்கியமாக விளங்கும் என்று திடமாக நம்புகிறேன்.
சர்வதேச யோகா தினத்தன்று, ஒரு கோடி பேர் சூரிய நமஸ்காரம் செய்வதில் இணைவார்கள் என்று நம்புகிறேன். அனைவரும் அதில் ஈடுபட வேண்டும். ஒரு கோடி பேர் சூரிய நமஸ்காரம் செய்வதன் மூலம் அது மக்கள் இயக்கமாக மாறட்டும். அது சக குடிமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தட்டும். இவ்வாறு மத்திய கலாசாரம் – சுற்றுலா (தனி) துறை இணையமைச்சர் திரு பிரகலாத் சிங் பட்டேல் பேசினார்.
(Release ID: 1633109)
Visitor Counter : 145