வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

தொழில் நிறுவன உரிமையாளர்கள் தகவல் பதிவுக்கு காகிதமில்லாத நடைமுறைகள் அமல்

Posted On: 04 JUN 2020 7:56PM by PIB Chennai

தொழில் நிறுவனங்கள் (உருவாக்கம் மற்றும் ஒழுங்குமுறை) சட்டம் 1951-இன் கீழ், தொழில் நிறுவன உரிமையாளர்கள் தகவல் பதிவு/தொழில் நிறுவனங்கள் உரிமம் பெறுவதற்கான விண்ணப்பங்கள், தொழில் நிறுவன உரிமையாளர் பதிவு வலைதளமான  https://services.dipp.gov.in மூலம் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. இந்த வலைதளம் மூலம், தொழில் நிறுவன உரிமையாளர்கள் தகவல்பதிவு – பகுதி - அ (வர்த்தகத்தை ஏற்படுத்துதல்) மற்றும் தொழில் நிறுவன உரிமையாளர்கள் தகவல்பதிவு – பகுதி - ஆ (வர்த்தக ரீதியிலான உற்பத்தியைத் தொடங்குவது) ஆகியவற்றுக்கான விண்ணப்பங்களை குறிப்பிட்ட தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் அளிக்கலாம். தொழில் நிறுவன உரிமையாளர்களின் தகவல்களை ஏற்றுக் கொண்டதற்கான சான்றிதழை காகிதத்தில் விநியோகிக்கப்படும். ஸ்கேன் செய்யப்பட்ட பிரதி, வலைதளத்தில் பதிவேற்றப்படும். தொழில் நிறுவன உரிமையாளர்களின் பதிவு செய்யப்பட்ட தகவல்களில் ஏதாவது திருத்தம் செய்ய வேண்டியிருந்தால், அதற்கான விண்ணப்பங்களை காகிதத்திலேயே அளிக்க வேண்டும். அதனை ஏற்றுக் கொண்டதற்கான சான்றிதழ்கள், காகிதமாக வழங்கப்படும். அதன் ஸ்கேன் செய்யப்பட்ட பிரதி, வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். அதன் பிறகு, ஏற்றுக் கொண்டதற்கான சான்றிதழ்கள், விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பப்படும்.

வெளிப்படைத்தன்மை மற்றும் தொழில் செய்வதை எளிதாக்கும் வகையில், தொழில் நிறுவன உரிமையாளர்கள் தகவல்பதிவு வலைதளத்தை தொழில் ஊக்குவிப்பு மற்றும் உள்நாட்டு வர்த்தகத்துறை மேம்படுத்தியுள்ளது. வலுப்படுத்தப்பட்ட வலைதளத்தில் தொழில் நிறுவன உரிமையாளர்கள் தகவல் பதிவு – பகுதி அ, பகுதி - ஆ மற்றும் திருத்தங்களைச் செய்வதற்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் அளிக்கலாம். அனைத்து விண்ணப்பங்களும் காகிதமில்லாத முறையில் பரிசீலனை செய்யப்பட்டு, QR code-உடன் கூடிய ஏற்றுக்கொண்டதற்கான சான்றிதழ் மின்னணு முறையில் வெளியிடப்படும். இது அனுப்பப்பட்டது குறித்து விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலம் ஒரே நேரத்தில் அறிவிக்கப்படும். அதே நேரத்தில், குறிப்பிட்ட மாநில அரசுக்கும் மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.

இனிமேல், தொழில் நிறுவன உரிமையாளர்கள் தகவல் பதிவு – பகுதி - அ, பகுதி - ஆ மற்றும் திருத்தங்களைச் செய்வதற்கான விண்ணப்பங்களை நேரில் வழங்க வேண்டியதில்லை. காகிதத்தில் சான்றிதழ் எதுவும் விநியோகிக்கப்பட மாட்டாது. ஒதுக்கப்பட்ட கியூஆர் குறியீடு மூலம் மின்னணு சான்றிதழ்களை  ஆன்லைனில் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.



(Release ID: 1629574) Visitor Counter : 188