அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

கொரோனா வைரசுக்கான ஆர் டி-லேம்ப் சார்ந்த சோதனையை அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம் - இந்திய ஒருங்கிணைந்த மருந்து நிறுவனம் (CSIR-IIIM) மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் உருவாக்கப் போகின்றன.

Posted On: 26 MAY 2020 5:44PM by PIB Chennai

நாட்டின் கொவிட்-19 கட்டுப்படுத்துதல் இயக்கத்தின் ஒரு பகுதியாக, நாட்டில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் பரவலைத் தடுப்பதற்குத் தேவைப்படும் தொழில்நுட்ப இடையீடுகளை உருவாக்கி, ஒருங்கிணைத்து, அதிகரித்து, செயல்படுத்துவதை நோக்கி தனது ஆராய்ச்சி, மேம்பாட்டை அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம் திட்டமிட்டுள்ளது. கொரோனா வைரஸால் உருவாக்கப்படுகிற, இடையீடுகள் தேவைப்படும் பல்வேறு சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, தனது தலைமை இயக்குநரான டாக்டர். ஷேகர் மண்டேவின் வழிகாட்டுதலுடன் ஐந்து பிரிவுகளை அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம் அமைத்துள்ளது. டிஜிட்டல் மற்றும் மூலக்கூறியல் கண்காணிப்பு, மருந்துகள், தடுப்பு மருந்துகள், துரித மற்றும் விலை குறைந்த பரிசோதனைகள், மருத்துவமனை உதவி உபகரணங்கள், தனிநபர் பாதுகாப்புக் கருவிகள், மற்றும் விநியோகச் சங்கிலி மற்றும் தளவாடங்கள் ஆகியவற்றில் பல்வேறு ஆராய்ச்சி நடவடிக்கைகளை இவை ஒருங்கிணைக்கும்.

 

கொவிட்-19 கட்டுப்படுத்துவதில் தனது முக்கிய ஆக்கக் கூறை பரிசோதித்ததில் இருந்து, ஜம்முவில் உள்ள அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் அங்க ஆய்வகமான அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம் - இந்திய ஒருங்கிணைந்த மருந்து நிறுவனம் (CSIR-IIIM), ரிவெர்ஸ் டிரான்ஸ்கிரிப்டேஸ்-லூப் மீடியேட்டட் ஐசோதெர்மல் ஆம்ப்ளிபிகேஷன் (ஆர் டி-லேம்ப்) சார்ந்த கொவிட்-19 பரிசோதனைக் கருவியை தயாரிக்கும் முயற்சியில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டுடன் இணைந்துள்ளது. இதற்கான புரிதல் ஒப்பந்தம் ஒன்றும் தொழிலக ஆய்வு மன்றம்-இந்திய ஒருங்கிணைந்த மருந்து நிறுவனம், ஜம்மு மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் இடையே கையெழுத்திடப்பட்டுள்ளது.

 

நோயாளிகளின் மூக்கு/தொண்டையில் இருந்து எடுக்கப்படும் மாதிரிகளில் இருந்து செய்யப்படும் நியூக்ளிக் அமிலம் சார்ந்த சோதனையே கொவிட்-19 ஆர் டி லேம்ப் சோதனையாகும். செயற்கை மாதிரிகள் மூலம் இந்த சோதனை முறை உருவாக்கப்பட்டு வெற்றிகரமாக செய்து காட்டப்பட்டது. இது ஒரு துரித (45-60 நிமிடங்கள்), குறைந்த விலையிலான, துல்லியமான சோதனை ஆகும். சிறிய எண்ணிக்கையிலான நோயாளிகளின் மாதிரிகளுடன் இது பரிசோதிக்கப்பட்டுள்ள நிலையில், அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளின் மாதிரிகளுடன் பரிசோதனை திட்டமிடப்பட்டுள்ளதுரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டுடன் இணைந்து இது செய்யப்படும்.

 

ஆர் டி லேம்ப் சார்ந்த கொவிட்-19 சோதனைக் கருவியின் பாகங்கள் எளிதாகக் கிடைப்பதும், இது முழுவதும் இந்தியாவிலேயே தயாரிக்கலாம் என்பதும் இந்த பரிசோதனையின் சாதகமாகும். நிகழ் நேர பிசிஆர் மூலம் தற்போதைய கொவிட்-19 பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. பெரும்பாலான இதன் பாகங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. அதிக செலவாகும், சிறப்பான பயற்சி அளிக்கப்பட்டப் பணியாளர்கள் தேவைப்படும், விலை அதிகமானக் கருவிகளைக் கொண்ட, உயர்தர ஆய்வகம் தேவைப்படும் தற்போதைய பரிசோதனைகளை தொலைதூர இடங்களில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலோ, விமான நிலையம் அல்லது ரயில் நிலையங்களிலோ செய்ய முடியாது.

 

ஆனால், ஆர் டி லேம்ப் சார்ந்த சோதனையோ, ஒரே ஒரு குழாயுடன், குறைந்தபட்ச நிபுணத்துவத்துடன், நடமாடும் மையங்கள்/அறைகள் போன்ற அடிப்படைக் கட்டமைப்புகள் மூலம், விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து நிலையம் மற்றும் இதர பொது இடங்களில் செய்யலாம். வண்ணம் சார்ந்த எளிய எதிர்வினையான இதன் இறுதிக் கண்டறிதல், புற ஊதா வெளிச்சத்தில் எளிதில் தெரியும். சாதாரண வெளிச்சத்திலும் தெரியக்கூடிய வகையில் தற்போது இது இன்னும் மேம்படுத்தப்படுகிறது.

 

அதிக அளவிலான நோயாளிகள் மீது இந்தக் கருவியின் துல்லியத்தன்மையைப் பரிசோதித்தப் பின்னர், ஒப்புதலுக்காக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தை இந்த அமைப்பினர் அணுகுவார்கள். சமுகத்தின் மீதான அக்கறையின் காரணமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், அதிக அளவிலான மக்களுக்குப் பரிசோதனைகளை நடத்தி, கொவிட்-19 கண்டறிவதில் இதன் எளிய, துரித மற்றும் பரந்து விரிந்த உபயோகத்தை உறுதி செய்யத் திட்டமிட்டுள்ளது.

 

ஆர் டி லேம்ப் சார்ந்த சோதனையின் அதிகாரப்பூர்வ அறிமுகப்படுத்துதல் மூலம், கொவிட்-19 பரிசோதனை இன்னும் துரிதமாக, விலை குறைவாக, எளிதாக மற்றும் எளிதில் அணுகக்கூடிய வகையில் அமைவதோடு, பாதிக்கப்பட்ட நபர்களை விரைவாகத் தனிமைப்படுத்துதலிலும், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதிலும் பெரிதும் உதவும்.

 

டாக்டர். ராம் விஷ்வகர்மா, இயக்குநர் மற்றும் டாக்டர். சுமித் காந்தி, முதன்மை விஞ்ஞானி, தொழிலக ஆய்வு மன்றம்-இந்திய ஒருங்கிணைந்த மருந்து நிறுவனம், மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டில் இருந்து டாக்டர். சாந்தனு தாஸ்குப்தா, மூத்த துணைத் தலைவர், ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் டாக்டர். மனீஷ் ஷுக்லா, பொது மேலாளர், ஆராய்ச்சி, மேம்பாடு ஆகியோர் இந்தத் திட்டத்தைக் கண்காணித்து வருகின்றனர்.



(Release ID: 1627034) Visitor Counter : 239