விவசாயத்துறை அமைச்சகம்

பாலைவன வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்துவது குறித்து பூச்சிக்கொல்லித் தயாரிப்புத் தொழில் துறை பிரதிநிதிகளுடன் விவசாய அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் கலந்துரையாடல்

Posted On: 13 MAY 2020 6:08PM by PIB Chennai

விவசாய வயல்களில் பாலைவன வெட்டுக் கிளிகள் வராமல் தடுப்பதற்கான உத்திகள் வகுப்பது குறித்து பூச்சிக்கொல்லித் தயாரிப்புத் தொழில் துறை பிரதிநிதிகளுடன், மத்திய விவசாய மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர் இன்று காணொளி மாநாட்டின் மூலம் கலந்துரையாடினார். பிரதமர் திரு. நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளது போல, விவசாயத்துறை முன்னுரிமைத் துறையாகும் என்று அவர் கூறினார். விதைப்பு மற்றும் அறுவடை தொடர்பான செயல்பாடுகள் தடையின்றி, தொடர்ந்து நடப்பதை உறுதி செய்வதற்கு அரசு எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்றும் அவர் கூறினார். பாலைவன வெட்டுக்கிளிகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து, மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் பாலைவன வெட்டுக்கிளிகள் பரவாமல் தடுக்க முடிந்துள்ளதாகவும் அவர் கூறினார். இதற்கென இங்கிலாந்திலிருந்து புதிய இயந்திரங்களுக்கு தருவிப்பு ஆணை கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அவை விரைவில் வந்தடையும் என்றும் அவர் கூறினார்.

 

கோவிட்-19 காரணமாக பொது முடக்கம் நிலவுகின்ற போதிலும், வெட்டுக்கிளிகள் கட்டுப்பாட்டு அலுவலகங்கள் 11 ஏப்ரல் 2020 முதல் 50 தெளிப்பான் கருவிகள்/வாகனங்கள் ஆகியவற்றுடன் மாவட்ட நிர்வாகங்கள், மாநில விவசாயத்துறை அதிகாரிகளின் ஒருங்கிணைப்புடன் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. பல்வேறு இடங்களிலும் வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்துவதற்காக, டிராக்டர்கள் மீது வைக்கப்பட்டுள்ள தெளிப்பான்கள், தீயணைப்பு வாகனங்கள் ஆகியவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வெட்டுக்கிளிகள் கட்டுப்பாட்டு அமைப்புகளின் கட்டுப்பாட்டுத் திறனை அதிகரிக்கும் வகையில், கூடுதல் கருவிகளும் வாங்கப்பட்டு வருகின்றன. 11. 5. 2020 வரை ஜெய்சால்மர், ஸ்ரீ கங்கா நகர், ஜோத்பூர், ராஜஸ்தானில் உள்ள பார்மர் மற்றும் கார் மாவட்டங்கள், பஞ்சாபில் உள்ள ஃபஸில்கா மாவட்டம் ஆகிய இடங்களில் 14,299 ஹெக்டேர் நிலப்பரப்பில் Hoppers and Pink Swarms வெட்டுக்கிளிக் கூட்டங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது முதிர்ச்சியடையாத பிங்க் வெட்டுக்கிளி கூட்டங்கள் பார்மர், ஃபலோடி (ஜோத்பூர்), ராஜஸ்தானில் உள்ள கார், ஸ்ரீ கங்காநகர் அஜ்மேர் மாவட்டங்கள் ஆகிய இடங்களில் தீவிரமாக உள்ளன. கட்டுப்பாட்டு பணிகள் அதிகாலையிலேயே தொடங்குகின்றன.

 (Release ID: 1623824) Visitor Counter : 172