சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
உச்ச நீதிமன்றத்தின் 27.3.2020 நாளிட்ட உத்தரவின்படி பிஎஸ்-4 வாகனங்களை குறிப்பிட்ட அளவுக்குப் பதிவு செய்ய அனுமதிக்கப்படும்.
உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்த உதவுமாறு என்ஐசிக்கு அறிவுறுத்தல்
Posted On:
01 APR 2020 2:53PM by PIB Chennai
தில்லி, தேசிய தலைநகர் பிராந்தியம் தவிர நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பிஎஸ்-4 வாகனங்களை குறிப்பிட்ட அளவுக்கு மட்டும் பதிவு செய்ய வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் 27.3.2020 தேதியிட்ட உத்தரவை அமல்படுத்த, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு தேசிய தகவலியல் மையம் (NIC) உதவ வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. விற்பனையாளரிடம் தில்லி, தேசிய தலைநகர் பிராந்தியம் (என்சிஆர்) தவிர நிலுவையில் உள்ள பிஎஸ்-4 வாகன இருப்பில் ( உச்சநீதிமன்றத்திடம் தெரிவிக்கப்பட்ட தகவலின்படி) 10 சதவீதத்துக்கு மிகாமல், நிபந்தனையுடன் கூடிய விற்பனை மற்றும் பதிவுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. நாட்டில் கொவிட்-19 முடக்கம் ரத்து செய்யப்பட்ட பின்னர் 10 நாட்களுக்குள் இந்த விற்பனை மற்றும் பதிவை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தில்லி தேசிய தலைநகர் பிராந்தியத்தில் இந்த வாகனங்களை விற்கவும், பதிவு செய்யவும் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
1.4.2020க்குப் பின்னர் பிஎஸ்-4 வாகனங்களை விற்கவோ, பதிவு செய்யவோ கூடாது என்று 24.10.2018 அன்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்தியாவில் ,பிஎஸ்-6 வாகனங்களை மட்டும் இன்று முதல் பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தது.
அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் இதனைத் தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என்று அமைச்சகம் அறிவுறுத்தியிருந்தது.
மோட்டார் வாகனங்களிலிருந்து வரும் புகையால், காற்று மாசு ஏற்படாமல் தடுக்கும் வகையில், அதனை ஒழுங்குமுறைப்படுத்த பாரத் ஸ்டேஜ் (பிஎஸ்) என்னும் தர விதிமுறையை அரசு ஏற்படுத்தியது. 2017 ஏப்ரல் மாதம் முதல் பிஎஸ்-4 விதிமுறை நாடு முழுவதும் அமலாக்கப்பட்டது.
உலகின் தூய்மையான புகை உமிழ்வுத் தரத்தை ஏப்ரல் 1-ம் தேதி முதல் செயல்படுத்த இந்தியா தீர்மானித்தது. உலகத்தில் பொருளாதாரத்தில் மேம்பட்டுள்ள நாடுகளில் கூட இல்லாத அளவுக்கு, மூன்றே ஆண்டுகளில், ஈரோ-4 உமிழ்வுத் தரத்தில் இருந்து ஈரோ-6-க்கு முன்னேறும் சாதனையை இந்தியா நிகழ்த்தியுள்ளது.
(Release ID: 1609972)
Visitor Counter : 186