வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

உங்கள் தொழிலாளர்களைக் கைவிடாதீர்கள், தொழில் நிறுவனங்கள், தொழிற் சங்கங்களுக்கு திரு. பியூஷ் கோயல் அறிவுரை

சமூக விலகல் குறித்த தகவலைப் பரப்புமாறு வேண்டுகோள்

Posted On: 28 MAR 2020 5:52PM by PIB Chennai

இந்த நெருக்கடியான சூழ்நிலையில், தொழில் நிறுவனங்களும், தொழிற்சங்கங்களும் தங்களது ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களின் நலனைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று ரயில்வே, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல் கேட்டுக் கொண்டுள்ளார். நாடு முழுவதும் உள்ள உற்பத்தி, தொழில் நிறுவனங்கள், தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடன் அவர் காணொளி மூலம் உரையாடினார். தொழிலாளர்களும், ஊழியர்களும், அவர்களது சொத்துக்கள், வள ஆதாரங்கள் என்று கூறிய அமைச்சர், அவர்களைக் கூட்டமாக வெளியில் செல்ல அனுமதித்தால், அவர்களது இடப்பெயர்ச்சி கொவிட்-19 பரவ வாய்ப்பாக அமையக்கூடும் என்று எச்சரித்தார். காணொளியில் கலந்து கொண்ட ரசாயனம் மற்றும் உரம், கப்பல்துறை (தனிப்பொறுப்பு) இணையமைச்சர் திரு.மான்சுக் மாண்டவியா, தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களை சம்பளப்பட்டியலில் மட்டுமல்லாமல், அதே இடத்தில் இருக்கும்படியும் வைத்திருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவர்களது நடமாட்டம், நாடு தழுவிய பொது முடக்கத்தின் நோக்கத்தைக் கெடுப்பதுடன், கொவிட்டுக்கு பிந்தைய இயல்பு நிலை விரைவில் திரும்புவதையும் பாதித்து விடும் என்றார் அவர்.

தொழிற்சங்கங்கள் தங்களது சேவை உணர்வு மற்றும் தன்னலமின்மையை வெளிக்காட்டி, நாட்டையும், சமுதாயத்தையும் பாதுகாப்பதில் பங்கேற்க வேண்டும் என்று திரு. பியூஷ் கோயல் அறிவுறுத்தினார். சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரையும் அரவணைக்க அரசு உறுதி பூண்டுள்ளது என்றும், அதற்காக நிவாரணம் மற்றும் நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார். கொவிட்19 தொற்றைக் கட்டுப்படுத்த , பல்வேறு பிரிவினரின் ஒத்துழைப்புடன், அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகள், எடுத்த நடவடிக்கைகள் ஆகியவற்றை பகிர வேண்டும் என்று திரு. கோயல் அவர்களைக் கேட்டுக்கொண்டார். பல்வேறு மதங்கள் மற்றும் நம்பிக்கைகளைக் கொண்ட தலைவர்கள் உள்பட சமுதாயத்தில் செல்வாக்குள்ளவர்களை, கைகளைக் கழுவுதல், சமூக விலகலைப் பராமரித்தல், இதர சுகாதார முன்னெச்சரிக்கைகள் போன்ற அனைத்து தடுப்பு செயல்பாடுகள் குறித்து, பிரச்சாரம் செய்வதில் ஈடுபடுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.  



(Release ID: 1608939) Visitor Counter : 123