மத்திய அமைச்சரவை

பெரிய அளவிலான மின்னணு உற்பத்தித் தொழிற்சாலைகளுக்கு உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 21 MAR 2020 4:26PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பெரிய அளவிலான மின்னணு உற்பத்தித் தொழிற்சாலைகளுக்கு உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை (பி.எல்..) வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும், செல்போன் உற்பத்தி மற்றும்  அசெம்பிளி, டெஸ்ட்டிங், மார்க்கிங் மற்றும் பேக்கிங் (.டி.எம்.பி.) உள்ளிட்ட குறிப்பிட்ட மின்னணு பொருள்கள் துறைகளில் முதலீடுகளை ஈர்க்கவும் இத்திட்டம் வகை செய்கிறது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருள்களில் (அடிப்படை அளவு நிர்ணயித்த ஆண்டின் ஒப்பீட்டில்) அதிக விற்பனை காட்டும்போது 4 முதல் 6 சதவீதம் வகையில் ஊக்கத் தொகை வழங்கப்படும். குறிப்பிட்ட துறைகளில் இந்த விற்பனையை எட்டும், தகுதியுள்ள நிறுவனங்களுக்கு, வரையறுக்கப்பட்ட அடிப்படை ஆண்டில் இருந்து, ஐந்து ஆண்டு காலத்துக்கு இது வழங்கப்படும்.

செல்போன் தயாரிப்பு மற்றும் குறிப்பிட்ட மின்னணு சாதனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள 5 - 6 உலக அளவிலான பெரிய நிறுவனங்களும், சில உள்நாட்டு நிறுவனங்களும் இதன் மூலம் பயன்பெறும். இதன் மூலம் இந்தியாவிற்கு மின்னணு உற்பத்தி நிறுவனங்கள் அதிக அளவில் வரும்.

நிதியளவிலான தாக்கங்கள்

உத்தேசிக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்திற்கான மொத்த செலவு ரூ.40,995 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஊக்கத்தொகைக்கான செலவு சுமார் ரூ.40,951 கோடியாக இருக்கும். நிர்வாகச் செலவுகளுக்கு ரூ.44 கோடி செலவிடப்படும்.

பயன்கள்

இந்தத் திட்டத்தின் மூலம் 5 ஆண்டு காலத்தில் நேரடியாக 2,00,000 வேலைகள் உருவாக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. இருந்தபோதிலும், இதன் மூலம் நாட்டில் மின்னணு உற்பத்தி பெருமளவு அதிகரிக்கும் என்றும், அபரிமிதமான அளவுக்கு வேலைவாய்ப்புகள் பெருகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நேரடி வேலைவாய்ப்புகளைவிட 3 மடங்கு அளவுக்கு, மறைமுக வேலைவாய்ப்புகள் பெருகும் என்று அந்தத் தொழில் துறையைச் சார்ந்த வல்லுநர்கள் கூறுகின்றனர். எனவே, இத்திட்டத்தின் மூலம் மொத்தம் 8,00,000 வேலைவாய்ப்புகள் உருவாக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

---

 



(Release ID: 1607883) Visitor Counter : 197