பாதுகாப்பு அமைச்சகம்

இந்திய கடற்படை விசாகப்பட்டினத்தில் சிறப்பு முகாம் அமைத்தது

Posted On: 18 MAR 2020 10:40PM by PIB Chennai

நாட்டில் கொவிட் -19 தொற்று பரவுவதை தடுக்கும் முயற்சியாக இந்திய கடற்படை, விசாகப்பட்டினம் ஐஎன்எஸ் விஸ்வகர்மா கிழக்கு  கடற்படை தளத்தில் சிறப்பு முகாம் ஒன்றை அமைத்துள்ளது. கொவிட்-19 பாதித்த நாடுகளிலிருந்து அகற்றப்பட்ட இந்தியர்களுக்காக இந்த முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு முகாம் சுமார் 200 பேரைத் தங்க வைக்கும் வகையில், உரிய அனைத்து வசதிகள் மற்றும் ஏற்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த முகாமில் தங்கவைக்கப்படுபவர்கள், விஸ்வகர்மா கடற்படை தளத்தின் ஊழியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் குழுவால் தீவிரமாகக் கண்காணிக்கப்படுவார்கள். மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை வெளியிட்டுள்ள நடைமுறைகளின்படி, முகாமில் உள்ளளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள்.

பிற நாடுகளிலிருந்து அழைத்துவரப்பட்டவர்கள், இந்தச் சிறப்பு முகாமில் 14 நாட்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்கவைக்கப்படுவார்கள். தொற்று மேலும் பரவுவதைத் தடுக்கும் வகையில், மாநிலம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தைச் சேர்ந்த சுகாதார அதிகாரிகளுடன் கடற்படைத்தளம் தீவிர ஒத்துழைப்பை வழங்கி வருகிறது.

உலகம் முழுவதும் பரவிவரும் கொவிட்-19 தொற்று ஏற்படுத்தும் அச்சம் மற்றும் சவால்களை எதிர்கொள்ள இந்திய அரசு அனைத்து தேவையான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. மக்களின் தீவிர ஒத்துழைப்புடன் நம் நாட்டில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த முடிந்துள்ளது.

                                *****



(Release ID: 1607052) Visitor Counter : 107