சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட்-19 பற்றிய புதிய தகவல்: நோய் பாதிப்பு மற்றும் கட்டுப்படுத்துதல்

Posted On: 05 MAR 2020 11:49AM by PIB Chennai

நாட்டில் இதுவரை 29 பேருக்கு கொவிட்-19 பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில், மூன்று பேர் (கேரளாவைச் சேர்ந்தவர்கள்) மூன்று பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன், நாடாளுமன்ற இரு அவைகளிலும் இன்று தாக்கல் செய்த அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார்.

     04 மார்ச், 2020 (நேற்று) முதல் வெளிநாடுகளிலிருந்து வருவோருக்கு உடற்பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டு, நேற்று மாலை முதற்கொண்டே பெரும்பாலான விமான நிலையங்களில் நடைமுறைக்கு வந்துள்ளது. இது இன்று மேலும் உறுதிப்படுத்தப்பட்டு, மாநில அரசுகளால் கூடுதல் பணியாளர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

     பயணிகள் மூலமாக கொவிட்-19 பரவுவது தவிர, சமுதாய ரீதியாக சில இடங்களில் பரவி இருப்பதும் தெரியவந்துள்ளது, எனவே, மாவட்ட ஆட்சித் தலைவர்களையும் இதற்கான பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டிருப்பதோடு, மாநில அரசுகளும், மாவட்ட, வட்டார மற்றும் கிராம அளவிலான அதிவிரைவுக் குழுக்களை ஏற்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.  

     கொவிட்-19-ஐ கட்டுப்படுத்தும் பணியில் தனியாரும் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இது சம்பந்தப்பட்டவர்களுடன் மத்திய சுகாதார அமைச்சர் இன்று மாலை ஆலோசனை நடத்தவுள்ளார்.

     கொவிட்-19 அறிகுறி தென்பட்டவர்களில் இதுவரை 3,542 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு, அதில் 29 பேருக்கு நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 92 பேரின் ரத்த மாதிரிகளைப் பரிசோதிக்கும் பணி நடைபெற்று வருவதுடன், 23 பேரின் ரத்த மாதிரிகள் மீண்டும் பரிசோதிக்கப்பட்டு, நோய் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.   


*****(Release ID: 1605367) Visitor Counter : 66