பிரதமர் அலுவலகம்
கூட்டறிக்கை: இந்தியா-அமெரிக்கா இடையேயான விரிவான உலகளாவிய பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான தொலைநோக்கு பார்வை மற்றும் கொள்கைகள்
Posted On:
25 FEB 2020 6:30PM by PIB Chennai
பிரதமர் திரு.நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, பிப்ரவரி 24-25-ல் அமெரிக்க அதிபர் திரு. டொனால்டு டிரம்ப், இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார்.
விரிவான உலகளாவிய பாதுகாப்பு ஒத்துழைப்பு
இறையாண்மை பெற்ற மற்றும் துடிப்பான ஜனநாயக நாடுகளின் தலைவர்கள் என்ற முறையில், சுதந்திரம், அனைத்து குடிமக்களுக்கும் சமஉரிமை, மனிதஉரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியில் உறுதிப்பாட்டுடன் இருப்பது ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியா-அமெரிக்கா இடையேயான விரிவான உலகளாவிய பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த பிரதமர் நரேந்திர மோடியும், அதிபர் டிரம்ப்-பும் உறுதிபூண்டுள்ளனர். இந்த ஒப்பந்தம், பரஸ்பர நம்பிக்கை, நலன்களை பகிர்ந்துகொள்வது, நல்லெண்ணம் மற்றும் தங்களது நாட்டு குடிமக்களை சிறப்பான முறையில் ஈடுபடுத்துவது ஆகியவற்றைக் கொண்டதாக இருக்கும்.
ராணுவம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை தீவிரப்படுத்த பிரதமர் நரேந்திர மோடியும், அதிபர் டிரம்ப்-பும் உறுதிபூண்டுள்ளனர். குறிப்பாக, கடல்சார் மற்றும் வான்வெளி விவகாரங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் தகவல் பரிமாற்றம்; கூட்டு ஒத்துழைப்பு; ராணுவ அதிகாரிகள் பரிமாற்றம்; முப்படைகள் மற்றும் சிறப்புப் படைகளுக்கு இடையே விரிவான கூட்டுப் பயிற்சி மற்றும் அதிநவீன பயிற்சி மேற்கொள்ளுதல்; அதிநவீன ராணுவ தளவாடங்கள், உபகரணங்கள் மற்றும் கட்டமைப்புகளை இணைந்து உருவாக்குவது மற்றும் இணைந்து மேம்படுத்துவதில் நெருங்கிய ஒத்துழைப்பு; பாதுகாப்புத் துறை தொழில் நிறுவனங்களுக்கு இடையே ஒத்துழைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஒத்துழைப்பு வலுப்படுத்தப்படும்.
வலுவான மற்றும் திறன்வாய்ந்ததாக இந்திய ராணுவம் திகழும்போது, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, நிலைத்தன்மை மற்றும் சட்டத்தின் அடிப்படையில் நிலைத்தன்மை ஏற்படும் என்பதை அவர்கள் குறிப்பிட்டனர். அமெரிக்காவின் அதிநவீன ராணுவ தொழில்நுட்பங்களை இந்தியாவுக்கு வழங்க ஆதரவு அளிப்பதை உறுதிப்படுத்திய அதிபர் டிரம்ப், எம்ஹெச்-60ஆர் கடற்படை மற்றும் ஏஹெச்-64ஈ அபாச்சே ஹெலிகாப்டர்களை வாங்குவது என்று அண்மையில் இந்தியா மேற்கொண்ட முடிவுக்கு வரவேற்பு தெரிவித்தார். இது, இரு நாடுகளுக்கும் இடையேயான அதிநவீன பாதுகாப்பு நலன்களை பகிர்ந்துகொள்வது, வேலைவாய்ப்பில் முன்னேற்றம், தொழில் துறை ஒத்துழைப்பு ஆகியவற்றை மேம்படுத்தும். புதிய பாதுகாப்பு தளவாடங்களை வாங்கும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டுவரும் நிலையில், மாபெரும் பாதுகாப்பு ஒத்துழைப்பு நாடு என்ற அந்தஸ்தில் இந்தியாவை தொடரச் செய்வது என்ற உறுதியை அதிபர் டிரம்ப் அளித்துள்ளார். இதன்மூலம், உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை வாங்குவது மற்றும் பரிமாற்றம் செய்வதில் உயர் முக்கியத்துவம் அளிக்கப்படும். அடிப்படை பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் உள்ளிட்ட உடன்பாடுகளை மேற்கொள்வதற்காக பாதுகாப்பு ஒத்துழைப்பு பேச்சுவார்த்தைகளை விரைந்து இறுதிசெய்ய தலைவர்கள் ஆவலுடன் உள்ளனர்.
ஒத்துழைப்பின் மூலம், தங்களது உள்நாடுகளின் பாதுகாப்பை வலுப்படுத்த பிரதமர் நரேந்திர மோடியும், அதிபர் டிரம்ப்-பும் உறுதி தெரிவித்தனர். மேலும், ஆட்கடத்தல், தீவிரவாதம் மற்றும் வன்முறை பயங்கரவாதம், போதைப் பொருள் கடத்தல், இணையதள குற்றங்கள் போன்ற சர்வதேச அளவிலான குற்றங்களை இணைந்து எதிர்கொள்வது என்று இரு தலைவர்களும் உறுதி தெரிவித்தனர். உள்நாட்டு பாதுகாப்பு குறித்த பேச்சுவார்த்தைக்கு புத்துயிரூட்டுவது என்ற இந்திய உள்துறை அமைச்சகம் மற்றும் அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறையின் முடிவுக்கு இரு தலைவர்களும் வரவேற்பு தெரிவித்தனர். சட்டவிரோத மருந்துப் பொருட்களால் தங்களது நாட்டு குடிமக்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தலைத் தடுக்க ஒருங்கிணைந்து செயல்படுவது என்ற உறுதியை வெளிப்படுத்தும் வகையில், தங்களது நாடுகளின் சட்ட அமலாக்க அமைப்புகளுக்கு இடையே புதிய போதைப் பொருள் தடுப்பு பணிக் குழுவை அமைப்பது என்ற தங்களது விருப்பத்தை அவர்கள் அறிவித்தனர்.
இந்தியா-அமெரிக்கா நல்லுறவில் வர்த்தகம் மற்றும் முதலீட்டு பரிமாணத்தில் அதிகரிக்கும் முக்கியத்துவத்தை பிரதமர் நரேந்திர மோடியும், அதிபர் டொனால்டு டிரம்ப்-பும் ஒப்புக் கொண்டனர். மேலும், அமெரிக்கா மற்றும் இந்திய பொருளாதாரங்கள் பயனடையும் வகையில், நீண்டகால வர்த்தக நிலைத்தன்மை தேவைப்படுவதையும் அவர்கள் ஏற்றுக் கொண்டனர். தற்போது நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தையை விரைந்து இறுதிசெய்ய அவர்கள் ஒப்புக் கொண்டனர். இது விரிவான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் முதல் கட்டமாக இருக்கும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். இந்த ஒப்பந்தமானது, இரு நாடுகளிலும் இருதரப்பு வணிக உறவுகளின் முழு திறனையும், வளம், முதலீடு, வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றில் முன்னேற்றம் ஏற்படுவதையும் வெளிப்படுத்தும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
வர்த்தகம் மற்றும் ஹைட்ரோகார்பன் முதலீட்டில், இந்தியா-அமெரிக்கா இடையேயான இணைப்பு அதிகரித்து வருவதை பிரதமர் நரேந்திர மோடியும், அதிபர் டிரம்ப்-பும் வரவேற்றனர். பாதுகாப்பு எரிசக்தி ஒத்துழைப்பு மூலம், இந்தியாவும், அமெரிக்காவும் தங்களது எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துதல், எரிசக்தி துறை முழுமைக்கும் எரிசக்தி மற்றும் புத்தாக்க தொடர்புகளை விரிவாக்கம் செய்தல், பாதுகாப்பு பிணைப்பை மேம்படுத்துதல், தொழில் துறை மற்றும் பிற தரப்பினருக்கு இடையேயான தொடர்புகளை அதிகரிக்க வகைசெய்தல் ஆகிய நடவடிக்கைகளை வலியுறுத்துகின்றன. சுத்திகரித்தல்/உலோகவியல் நிலக்கரிக்கான இறக்குமதி தளத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற இந்தியாவின் இலக்கை எட்டச் செய்யும் திறன் அமெரிக்காவிடம் இருப்பதை பிரதமர் மோடியும், அதிபர் டிரம்பும் குறிப்பிட்டனர். இதையொட்டி, இந்திய சந்தையில் திரவமயமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு வாய்ப்புகளை பெறுவதை அதிகரிக்கச் செய்யும் நோக்கில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட வர்த்தக ஏற்பாடுகளுக்கு வரவேற்பு தெரிவித்தனர். இந்தியாவில் 6 அணு உலைகள் கட்டுமானத்துக்கான தொழில்நுட்ப-வர்த்தக திட்டத்தை விரைந்து இறுதிசெய்வதற்கு இந்திய அணுமின் கழகத்துக்கும், வெஸ்டிங்ஹவுஸ் மின்னணு நிறுவனத்துக்கும் பிரதமர் நரேந்திர மோடியும், அதிபர் டிரம்ப்-பும் ஆதரவை தெரிவித்துள்ளனர்.
அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்தில் நீண்டகாலமாக நிலவிவரும் செயல்முறை சார்ந்த ஒத்துழைப்புக்கு பிரதமர் மோடியும், அதிபர் டிரம்ப்-பும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். உலகின் முதலாவது இரட்டை அதிர்வலை தொகுப்பு தொலைஉணர் செயற்கைக்கோளை வடிவமைத்து, 2022-ம் ஆண்டில் விண்ணில் செலுத்துவதற்காக இந்திய விண்வெளி ஆய்வு மையம் - நாசா இடையேயான கூட்டு முயற்சிக்கு இரு தலைவர்களும் வரவேற்பு தெரிவித்தனர். மேலும், புவி கண்காணிப்பு, செவ்வாய் மற்றும் கிரகங்களைக் கண்டறிதல், சூரிய குடும்பம், விண்வெளிக்கு மனிதனை அனுப்புதல், வர்த்தக ரீதியான விண்வெளி ஒத்துழைப்பு ஆகியவற்றில் தீவிர ஒத்துழைப்புக்கான பேச்சுவார்த்தைக்கு பாராட்டு தெரிவித்தனர்.
புத்தாக்கத்தில் ஈடுபடும் இளையோருக்கான பயிற்சித் திட்டங்கள் உள்ளிட்டவற்றின் மூலம், உயர்கல்வி ஒத்துழைப்பு மற்றும் கல்வி பரிமாற்ற வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும் என்ற தங்களது விருப்பத்தை பிரதமர் மோடியும், அதிபர் டிரம்ப்-பும் வெளிப்படுத்தினர். அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அண்மையில் அதிகரித்திருப்பதற்கு வரவேற்பு தெரிவித்தனர்.
கோவிட்-19 போன்ற நோய்த் தாக்குதல்களைத் தடுப்பது, கண்டறிவது, சிகிச்சை அளிப்பது ஆகிய சர்வதேச முயற்சிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், நோய்த் தடுப்பு, முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் நோய்களை கட்டுப்படுத்த விரைந்து செயல்படுவது ஆகிய முயற்சிகளை தொடர்வது என பிரதமர் மோடியும், அதிபர் டிரம்ப்-பும் உறுதியளித்தனர். இந்தியர்கள் மற்றும் அமெரிக்க நுகர்வோர்களுக்கு உயர்தரமான, பாதுகாப்பான, வலுவான மற்றும் ஏற்றுக் கொள்ளக் கூடிய விலையில் மருந்துகள் கிடைக்கச் செய்வதை ஊக்குவிக்கும் இருதரப்பு புரிந்துணர்வு உடன்பாட்டுக்கு அவர்கள் வரவேற்பு தெரிவித்தனர். புத்தாக்க முயற்சிகள் மூலம் மனநல மருத்துவ சவால்களை எதிர்கொள்வதற்காக இருநாடுகளுக்கும் உதவும் வகையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தையை நிறைவுசெய்வதற்கு அவர்கள் வரவேற்பு தெரிவித்தனர்.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு பிணைப்பு
வெளிப்படையான, திறந்த மனதிலான, உள்ளடக்கிய, அமைதியான மற்றும் வளமான இந்தோ-பசிபிக் பிராந்தியம் இருக்க வேண்டும் என்பதே இந்தியா, அமெரிக்கா இடையேயான நெருங்கிய நட்புறவின் மையப்புள்ளியாக உள்ளது. இந்த ஒத்துழைப்பு ஆசியானை மையப்புள்ளியாக அங்கீகரிப்பது; சர்வதேச சட்டம் மற்றும் சிறந்த ஆளுமையை பின்பற்றுவது; பாதுகாப்பான மற்றும் சுதந்திரமான கடல்வழி பயணம், கடலுக்கு மேலே விமானத்தை இயக்குவது மற்றும் கடல் பகுதியை மற்ற சட்டப்பூர்வ வழிகளில் பயன்படுத்துவது ஆகியவற்றுக்கு ஆதரவளிக்கிறது; சட்டப்பூர்வ வர்த்தகத்துக்கு தடை ஏற்படுத்தாமல் இருத்தல்; கடல்சார் பிரச்சினைகளுக்கு சர்வதேச சட்டத்தின்படி அமைதியான வழியில் தீர்வுகாண வலியுறுத்துவது ஆகியவற்றைக் கொண்டது.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பை வழங்குவதிலும், மேம்பாட்டு மற்றும் மனிதநேய உதவிகளை வழங்குவதிலும் இந்தியாவின் பங்களிப்பை அமெரிக்கா வரவேற்கிறது. இந்தப் பிராந்தியத்தில் நீடித்த, வெளிப்படையான, தரமான கட்டமைப்பை ஏற்படுத்துவதில் இந்தியாவும், அமெரிக்காவும் தொடர்ந்து உறுதிபூண்டுள்ளன. இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்காக 60 கோடி அமெரிக்க டாலர் நிதி வசதியை ஏற்படுத்துவது என்ற அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு நிதி கழகத்தின் அறிவிப்புக்கும், இந்த ஆண்டில் இந்தியாவில் நிலையாக இருப்பது என்ற முடிவுக்கும் பிரதமர் மோடியும், அதிபர் டிரம்ப்பும் வரவேற்பு தெரிவித்தனர்.
இந்தோ-பசிபிக் மற்றும் சர்வதேச அளவில் வலுவான மேம்பாட்டு தீர்வுகளை காணும் இருதரப்பு உறுதியை பிரதமர் மோடியும்,, அதிபர் டிரம்ப்-பும் குறிப்பிட்டனர். மூன்றாவது நாடுகளில் ஒத்துழைப்புக்காக யூஎஸ்ஏஐடி-க்கும் (USAID), இந்தியாவின் மேம்பாட்டு ஒத்துழைப்பு நிர்வாகத்துக்கும் இடையே புதிய ஒத்துழைப்பு ஏற்படுவதை இரு தலைவர்களும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.
தென்சீன கடல் பகுதியில் பயனுள்ள நடத்தை விதிகளை ஏற்படுத்தும் முயற்சிகளை இந்தியாவும், அமெரிக்காவும் கவனத்தில் கொண்டுள்ளன. சர்வதேச சட்டத்தின்படி, அனைத்து நாடுகளின் நலன் மற்றும் பாரம்பரிய உரிமைகளில் பாரபட்சம் இருக்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளன.
இருதரப்பு ஆலோசனைகளை இந்தியா-அமெரிக்கா-ஜப்பான் முத்தரப்பு மாநாடுகள்; இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களின் 2+2 பேச்சுவார்த்தைகள்; இந்தியா-அமெரிக்கா-ஆஸ்திரேலியா-ஜப்பான் ஆகிய 4 நாடுகள் ஆலோசனை போன்றவற்றின் மூலம் வலுப்படுத்த பிரதமர் மோடியும், அதிபர் டிரம்ப்பும் முடிவுசெய்தனர். அமெரிக்கா, இந்தியா மற்றும் பிற ஒத்துழைப்பு நாடுகளுக்கு இடையே கடல்சார் விவகாரங்களில் விழிப்புணர்வை பகிர்வதை வலுப்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடியும், அதிபர் டிரம்ப்-பும் ஆவலோடு எதிர்நோக்கியுள்ளனர்.
உலகத் தலைமைக்கு ஒத்துழைப்பு
ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற சர்வதேச அமைப்புகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும், வலுப்படுத்தவும், மற்றும் அதன் நேர்மையை உறுதிப்படுத்தவும் இணைந்து பணியாற்றுவது என்ற உறுதியை பிரதமர் மோடியும், அதிபர் டிரம்ப்-பும் வெளிப்படுத்தினர். மாற்றியமைக்கப்படும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் இடம் கிடைக்க அமெரிக்காவின் ஆதரவை அதிபர் டிரம்ப் மீண்டும் உறுதிப்படுத்தினார். அணு விநியோக குழுவில் எந்தவொரு தாமதமும் இல்லாமல் இந்தியா இணைவதற்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கும் என்பதை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
வளரும் நாடுகள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் அரசு பெறும் கடன் அதிகரிப்பதை கட்டுப்படுத்துவதற்காக, கடன் வாங்குவோருக்கும், கடன் கொடுப்போருக்கும் பொறுப்புள்ள, வெளிப்படையான மற்றும் நீடித்த நிதி பரிமாற்ற செயல்பாடுகள் அவசியம் என்பதை இந்தியாவும், அமெரிக்காவும் அங்கீகரித்துள்ளன. சர்வதேச கட்டமைப்பு மேம்பாட்டுக்காக உயர்தரமான நம்பிக்கையான தரநிலையை ஊக்குவிப்பதற்காக அரசுகள், தனியார் துறை மற்றும் சமூக அமைப்புகளை ஒருங்கிணைக்கும் பலதரப்பு முயற்சியான புளூடாட் நெட்வொர்க் முறையை பின்பற்ற பிரதமர் மோடியும், அதிபர் டிரம்ப்-பும் விருப்பம் தெரிவித்தனர்.
அமெரிக்காவின் மகளிர் சர்வதேச மேம்பாடு மற்றும் வளம் (W-GDP) மற்றும் இந்திய அரசின் பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கல்வியளிப்போம் திட்டங்களின் வழியில் பொருளாதாரத்தில் பெண்களை முழுமையாகவும், சுதந்திரமாகவும் ஈடுபடுத்துவதை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் மற்றும் நிதியளிப்பது, பயிற்சி அளிப்பது, ஆலோசனை நடவடிக்கைகள் மூலம் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் தொழில்முனைவோர் திறனை மேம்படுத்துவது, பொருளாதார மேம்பாடு, முன்னேறிய கல்வி அளிப்பது ஆகியவற்றின் முக்கியத்துவத்தை பிரதமர் மோடியும், அதிபர் டிரம்ப்-பும் குறிப்பிட்டனர்.
ஒருங்கிணைந்த, இறையாண்மை பெற்ற, ஜனநாயக, உள்ளடக்கிய, நிலையான மற்றும் வளமான ஆப்கானிஸ்தான் அமைய வேண்டும் என்ற தங்களது விருப்பத்தை இந்தியாவும், அமெரிக்காவும் பகிர்ந்துகொண்டன. ஆப்கான் தலைமையிலான மற்றும் ஆப்கனே செயல்படுத்தும் அமைதி மற்றும் நல்லிணக்க நடவடிக்கைக்கு இருதரப்பும் ஆதரவு தெரிவித்தன. இதன்மூலம், நீடித்த அமைதியை ஏற்படுத்துதல்; வன்முறையை முடிவுக்கு கொண்டுவருதல்; தீவிரவாதிகளின் புகலிடங்களை ஒழித்தல்; கடந்த 18 ஆண்டுகால பலன்களை பாதுகாத்தல் ஆகியவை நடைபெற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தன. ஆப்கானிஸ்தானில் இணைப்பு வசதியை அளிக்கவும், நிலைத்தன்மைக்கு உதவவும் மேம்பாட்டு மற்றும் பாதுகாப்பு உதவிகளை தொடர்ந்து வழங்கிவரும் இந்தியாவின் பங்களிப்புக்கு அதிபர் டிரம்ப் வரவேற்பு தெரிவித்தார்.
எந்த வழியிலும் தீவிரவாதிகளை பயன்படுத்துவதற்கும், அனைத்து வடிவிலான எல்லைதாண்டிய பயங்கரவாதத்துக்கும் கடும் கண்டனத்தை பிரதமர் மோடியும், அதிபர் டிரம்ப்பும் பதிவுசெய்தனர். தீவிரவாதத் தாக்குதல்களை நடத்துவதற்கு தனது கட்டுப்பாட்டில் உள்ள எந்த நிலப்பகுதியையும் பயன்படுத்துவதில்லை என்பதை பாகிஸ்தான் உறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும், நவம்பர் 26 மும்பை தாக்குதல், பதான்கோட் உள்ளிட்ட தாக்குதல்களுக்கு காரணமானவர்களை நீதியின் முன் விரைந்து நிறுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். அல்-கொய்தா, ஐஎஸ்ஐஎஸ், ஜெய்ஸ்-ஏ-முகம்மது, லஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாகிதீன், ஹக்கானி நெட்வொர்க், டிடிபி, தாவூத் குழு மற்றும் அவற்றுடன் தொடர்புடைய அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து தீவிரவாத அமைப்புகளுக்கும் எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் அழைப்பு விடுத்தனர்.
வர்த்தகம் மற்றும் தொடர்புக்கு வசதியை ஏற்படுத்தும் வெளிப்படையான, நம்பத்தகுந்த மற்றும் பாதுகாப்பான இணையதளம் அமைய வேண்டும் என்று இந்தியாவும், அமெரிக்காவும் உறுதிபூண்டுள்ளன. பாதுகாப்பான மற்றும் நம்பத்தகுந்ததும், தகவல் மற்றும் தரவுகள் செல்வதற்கு வழிவகை செய்யவும், புத்தாக்க டிஜிட்டல் அமைப்பு தேவை என்பதை இந்தியாவும், அமெரிக்காவும் அங்கீகரித்தன. பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த கட்டமைப்பை வெளிப்படையான, பாதுகாப்பான முறையில் மற்றும் இடர்பாடுகள் இல்லாமல் விநியோகிப்பதற்காக தங்களது தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று இரு தலைவர்களும் விருப்பம் தெரிவித்தனர். இதேபோல, வளரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் உள்ள இடர்பாடுகளை சுதந்திரமான முறையில் மதிப்பீடு செய்யவும் இந்த ஒத்துழைப்பு தேவை என்பதை இரு தலைவர்களும் வலியுறுத்தினர்.
***
Top of Form
(Release ID: 1605337)
Visitor Counter : 284