சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

சீனாவிலும், பிற நாடுகளிலும் பரவியுள்ள கொரோனா வைரஸ் நோய் மற்றும் இந்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பாக மக்களவையில் 2020 பிப்ரவரி 10 அன்று சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் தாமாக முன்வந்து வெளியிட்ட அறிக்கை

Posted On: 10 FEB 2020 1:12PM by PIB Chennai

1. சீனாவிலும், பிற நாடுகளிலும் பரவியுள்ள கொரோனா வைரஸ் நோய் மற்றும் இந்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றி மாண்புமிகு உறுப்பினர்களுக்கு எடுத்துரைக்க நான் விரும்புகிறேன்.

2. வைரஸ் குழுவில் மிகவும் பெரிதான கொரோனா வைரஸ் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் நோயை உண்டாக்குகிறது. 2003-ல் கடுமையான மூச்சுத்திணறல் நோயும், 2014-ல் மத்திய கிழக்கில் ஏற்பட்ட மூச்சுத்திணறல் நோயும் போல, அபூர்வமாக விலங்குகளில் கொரோனா வைரஸ் உருவாகி மக்களிடம் தொற்றி பின்னர் மக்களிடையே பரவுகிறது.

3. சீனாவில் 2019-ல் டிசம்பர் 31 அன்று புதிய கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக செய்தி வெளியானது. 2019 டிசம்பர் தொடக்கத்தில் சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வூஹான் நகரின் கடல் உணவு சந்தையில் முதன்முறையாக காணப்பட்ட இந்த வைரஸ் மிகக் குறுகிய காலத்திலேயே சீனாவின் அனைத்து மாகாணங்களுக்கும் பரவியது.

4. பிப்ரவரி 9-ந் தேதி நிலவரப்படி சீனாவில் மொத்தம் 37,198 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதோடு 811 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. (ஹாங்காங், மக்காவோ, தைவான் உட்பட) 27 நாடுகளில் மொத்தம் 345 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் நோய்த் தொற்று இறப்புகளும் அதிகரித்து வருவதை செய்திகள் காட்டுகின்றன.

5. இதனை “சர்வதேச அளவிலான பொது சுகாதார அவசர நிலை” என 2020 ஜனவரி 30 அன்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.

6. தங்கியிருக்கும் காலம், மாறிச் செல்லும் முறை, நோய்த் தொற்று, வைரஸ் பரவுதல் போன்ற தொற்று நோய்க்கான தன்மைகள் ஆராயப்பட்டு வருகின்றன. ஒருவருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டால் உடல்நிலை பாதிப்புக்கு சுமார் 2 வார காலம் தேவைப்படும். காய்ச்சல், இருமல், மூச்சுவிட சிரமப்படுதல் போன்றவை கொரோனா வைரஸ் நோயின் முக்கியமான அறிகுறிகள் ஆகும். நிமோனியா காய்ச்சலுக்கான அறிகுறிகளும் இருக்கும். 10 முதல் 20 சதவீதம் பேருக்கு நோய் கடுமையாகும் போது சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது. உயிரிழப்பு 2 சதவீதமாக உள்ளது. கொரோனா வைரஸ் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவுவது கண்டறியப்பட்டுள்ளது. அருகில் இருக்கும் மனிதர்களின் இருமல்/தும்மல் மூலம் இது பரவுகிறது. நோய்த் தொற்று உள்ளவர்களின் மல மாதிரிகளில் இந்த வைரஸ் தொற்றினைக் கண்டுபிடிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நோய் மேலும் பரவாமல் இருக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதோடு புதிய கொரோனா வைரஸ் (என்சிஓவி) பாதிக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றனர்.

7. நமது நாட்டில் இதுவரை கேரளாவைச் சேர்ந்த 3 பேருக்கு  பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இவர்கள் அனைவரும் சீனாவின் வூஹானிலிருந்து பயணம் செய்தவர்கள். இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மருத்துவ ரீதியாக இவர்கள் சீரான நிலையில் இருப்பதாகத் தெரிகிறது.

8. நோய் பரவல் அதிகரித்து வரும் நிலையில், சுகாதாரத் துறை மட்டுமின்றி அரசின் அனைத்துப் பிரிவுகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்த நோய் வராமல் தடுக்க மத்திய அரசு தொடர்ச்சியான முயற்சிகளை செய்து வருகிறது. தினந்தோறும் நான் நிலைமையை ஆய்வு செய்து வருகிறேன். நிலைமையைக் கண்காணிக்க எனது தலைமையில் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் வெளியுறவு அமைச்சர், விமானப் போக்குவரத்து அமைச்சர், உள்துறை இணையமைச்சர், கப்பல் போக்குவரத்து இணையமைச்சர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். சுகாதாரம், பாதுகாப்பு, வெளியுறவு, விமானப் போக்குவரத்து, ஜவுளி, மருந்து, வர்த்தகத் துறைகள் மற்றும் மாநிலத் தலைமைச் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் ஆகியோருடன் அமைச்சரவை செயலாளர் தினந்தோறும் ஆய்வு நடத்தி வருகிறார். எனது அமைச்சகமும் தொடர்ச்சியாக ஆய்வு செய்கிறது. ஒருநாள் விட்டு ஒருநாள் மாநிலங்களுடன் காணொலிக் காட்சி மூலம் கருத்தறியப்படுகிறது.

9. இந்தியாவில் இந்த நோய்த் தொற்று அபாயத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 2020 ஜனவரி 17 அன்று முதலாவது அறிவுரைகள் வெளியிடப்பட்டன. நிலைமை மேலும் தீவிரமானதால் மீண்டும் அதற்கேற்பப் பயண அறிவுரைகள் திருத்தியமைக்கப்பட்டன. தற்போது,

10. அ. சீனாவிலிருந்து பயணம் செய்யும் வெளிநாட்டைச் சேர்ந்த எவரின் தற்போதைய விசாக்களும் செல்லாது. (ஏற்கனவே வழங்கப்பட்ட இ விசா உட்பட)

11. ஆ. அவசிய காரணங்களால் இந்தியாவுக்கு வர வேண்டியவர்கள் முதலில் பெய்ஜிங்கில் உள்ள இந்தியத் தூதரகத்தையும், ஷாங்காய் அல்லது குவாங் ஷூவில் உள்ள துணைத் தூதரகங்களை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

12. இ. ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிவுரையின்படி சீனாவுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இனிமேல் சீனாவுக்குப் பயணம் செய்வோர் திரும்பி வரும்போது தனிமைப்படுத்தப்படுவார்கள்.

13. 2020 ஜனவரி 18-ல் இருந்து விமானப் பயணிகள் பரிசோதிக்கப்பட்டு வருகின்றனர். தொடக்கத்தில் தில்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஐதராபாத், கொச்சி ஆகிய விமான நிலையங்களில் தொடங்கப்பட்ட சோதனை பின்னர் 21 விமான நிலையங்களுக்கு விரிவு செய்யப்பட்டது. சோதனை செய்யப்படுவதற்காக ஹாங்காங், சீனா விமானங்கள் தவிர சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட அனைத்து விமானங்களும் குறிப்பிட்ட பகுதியில் சோதனைக்கு உட்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்களிலும், துறைமுகங்களிலும் உள்ள முக்கியமான இடங்களில் விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. அனைத்துப் பயணிகளும் சுய அறிவிப்புப் படிவங்களை பூர்த்தி செய்யுமாறு விமானத்திற்குள் அறிவிப்பு செய்யும் போது அறிவுறுத்தப்படுகிறது. இது நாள் வரை 1818 விமானங்களில் வந்த 1,97,192 பயணிகள் சோதனை செய்யப்பட்டுள்ளனர். தீவிர கண்காணிப்பை உறுதி செய்வதற்கு அனைத்து விமான நிலையங்களுக்கும் சிறப்பு மருத்துவர்களின் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளனர். இணைக்கப்பட்ட மருத்துவமனைகளில் நோயாளிகளைத் தனிமைப்படுத்தும் ஏற்பாடும் உள்ளது.

14. சீனாவிலிருந்து வருகின்ற பயணிகள், மாலுமிகளை அடையாளம் காண 12 பெரிய துறைமுகங்களிலும் மற்ற சிறிய ரக துறைமுகங்களிலும் பயணிகளைப் பரிசோதனை செய்யும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நோய்த் தொற்று கண்டறியப்பட்டால் தனிமைப்படுத்தி வைக்கப்படுகிறார்கள்.

15. நேபாளத்தில் ஒருவருக்கு நோய் உறுதி செய்யப்பட்டிருப்பதை அடுத்து உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், மேற்கு வங்கம், சிக்கிம், பீகார், சீமா சாஸ்திர பால், துறைமுக நுழைவுப் பகுதி ஆணையங்கள் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து நேபாளத்திலிருந்து வரும் அனைத்து சோதனைச்சாவடிகளிலும் கண்காணிப்புக்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த நோய் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த நேபாள எல்லைக்கு அருகில் உள்ள கிராமங்களில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு பஞ்சாய்த்துராஜ் அமைச்சகத்துடன் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

16. சீனாவின் ஹூபே மாகாணம் தொடர்ந்து மூடப்பட்டிருப்பதால் ஹூபே மாகாணத்தின் அருகில் உள்ள நகரங்களிலும், வூஹானிலும் உள்ள இந்திய மாணவர்களையும் மற்றும் பணிகளில் இருப்போரையும் வெளியேற்ற மத்திய அரசு முடிவு செய்தது. சிவில் விமான அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் இரண்டு சிறப்பு ஏர்இந்தியா விமானங்களை 2020 ஜனவரி 31, பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் தில்லியிலிருந்து வூஹானுக்கு அனுப்பியது. இவற்றின் மூலம் மொத்தம் 654 பயணிகள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர். இவர்களில் (வெளியேற்ற நடவடிக்கையை ஒருங்கிணைப்பதற்காக வூஹானில் இருந்த இந்தியத் தூதரகத்தின் இரண்டு அதிகாரிகள் உட்பட) 647 பேர் இந்தியர்கள், 7 பேர் மாலத்தீவைச் சேர்ந்தவர்கள். சவால்மிக்க இந்தப் பணியை நிறைவேற்றியதற்காக ஏர்இந்தியா, அதன் ஊழியர்கள், மருத்துவக் குழுவினர், மருத்துவ உதவியாளர்கள் ஆகியோருக்கு நன்றி சொல்லவும் அவர்களின் பங்களிப்புக்கு இந்த மேன்மை தங்கிய அவை சார்பில் பாராட்டு தெரிவிக்கவும் இந்த சந்தர்ப்பத்தை நான் பயன்படுத்திக் கொள்கிறேன்.

17. வெளியேற்றத்திற்குப் பின் இவர்கள் இந்திய ராணுவத்தால் மனேசாரிலும் இந்திய திபெத் எல்லைக் காவல் படையால் சாவ்லா முகாமிலும் உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவமனைகளில் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 10 பேருக்கு நோய்த் தொற்று அறிகுறிகள் காணப்பட்டதால் தனிமைப்படுத்தும் இடத்திற்கு மாற்றப்பட்ட இவர்கள் அனைவருக்கும் நோய்த் தொற்று இல்லையென்பது சோதனையில் தெரிய வந்துள்ளது. மற்ற அனைவரும் தினந்தோறும் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்டு ஆரோக்கியமாக உள்ளனர்.

18. சீனாவின் மற்ற பகுதிகளில் உள்ள இந்திய சமூகத்தினருடன் இந்தியத் தூதரகம் மற்றும் துணைத் தூதரகங்கள் தொடர்ச்சியான தொடர்பை ஏற்படுத்தி அவர்களின் நலனைக் கண்காணித்து வருகின்றன.

19. சீனாவிற்கு சென்று வந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பு வைத்திருப்போர் மற்றும் காய்ச்சல், இருமல் அல்லது மூச்சுத்திணறல் பாதிப்பு இருப்பவர்களை நாடு முழுவதும் கண்காணித்து வருகிறோம்.  ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு அமைப்பு மூலம் இதுபோன்ற நபர்கள்  கண்டறியப்பட்டு, இதுவரை 29 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ள 9,452 பயணிகளை கண்காணித்து வருகிறோம். மாநில, மாவட்ட கண்காணிப்பு அதிகாரிகளும் மாநில சுகாதாரத்துறைச் செயலாளர்கள் தலைமையிலான சுகாதார வல்லுநர்கள் அடங்கிய விரைவுப்படையினரும், இது போன்ற நபர்களை அன்றாட அடிப்படையில் ஆய்வு செய்து வருகின்றனர். நாட்டின் எந்தப்பகுதியிலும், கொடிய தொற்றுநோய்கள் பரவினால் அதனை  எதிர்கொள்ள தேவையான அளவிற்கு தனிமைப்படுத்தப்பட்ட  படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நோய் அறிகுறி  தென்பட்ட 369 பயணிகள், தனிமைப்படுத்தப்பட்ட பிரிவுகளில் வைத்து  கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
 

20. நுழைவு வாயில்கள், ஆய்வுக்கூடங்களில் ரத்தமாதிரியை சேகரித்தல், அவற்றை அடைத்து வைத்து அனுப்புதல், ஆய்வுக்கூட கட்டுப்பாடு மற்றும் தொற்றுப் பரவாமல் தடுத்தல் மற்றும் கட்டுப்பாட்டு சுகாதார சேவை மையங்கள் போன்ற இடங்களில், நோய் கண்டறிதல் மற்றும் கண்காணிப்புப் பணிகளில் மாநில அரசுகளுக்கு உறுதுணையாக, வழிகாட்டும் நெறிமுறைகளை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. தனிநபர் பாதுகாப்பு கவசங்கள், முகமூடிகள், போன்ற அத்தியாவசியப்  பொருட்கள் இருப்பில் வைத்திருப்பதை உறுதி செய்வதோடு, இவற்றை ஏற்றுமதி செய்ய தடை விதித்தும் வெளி வர்த்தக தலைமை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.  தனிநபர் பாதுகாப்புக் கவசங்கள் மற்றும் முகமூடிகள், மாநில அரசுகளிடமும், மத்திய அரசிடமும் போதுமான அளவிற்கு கையிருப்பு உள்ளது.
 

21. புனேயில் உள்ள தேசிய கிருமியியல் ஆய்வு நிறுவனம் பிரதான ஆய்வுக்கூடமாக செயல்பட்டு வருகிறது. புதிதாக உருவாகும் / மீண்டும் உருவாகும் தொற்றுநோய் தொடர்பான இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் ஆயத்த நிலையின் ஒரு பகுதியாக, புனேயில் உள்ள தேசிய கிருமியியல் நிறுவனம் நோவல் கொரோனா வைரஸ் நோயின் மூலக்கூறுகளைக் கண்டறிவதற்கான வசதிகளை ஏற்படுத்தியுள்ளது.  இந்நோயைக் கண்டறிவதற்கான ரத்த மாதிரிகளை பரிசோதிக்க மேலும் 11 ஆய்வுக்கூடங்களிலும் உரிய வசதி செய்யப்பட்டுள்ளது.  இதுவரை பரிசோதிக்கப்பட்ட 1,510 ரத்த மாதிரிகளில், 1,507 பேருக்கு நோய் பாதிப்பில்லை என்றும், 3 பேருக்கு மட்டுமே பாதிப்பு இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 27 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு வருகிறது.
 

22. அபாயநிலையில் தொடர்புகொள்வதற்கான சாதனங்களும் தயாராக வைக்கப்பட்டிருப்பதோடு, மாநில அரசுகள் மூலம் அந்தந்த மாநில மொழிகளிலும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. வானொலி மற்றும் தொலைக்காட்சி மூலம் தொழில்நுட்ப ரீதியாகவும் சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய சுகாதார அமைச்சகத்தால் நோய் பாதிப்பு குறித்து ஊடகங்களுக்கு தகவல் அளிக்கப்படுவதுடன், சமூக ஊடகங்கள் மூலமாகவும், தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.   24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையும் (011 – 2 3 9 7 8 0 4 6) செயல்பட்டு வருகிறது.

 

23. அவ்வப்போதைய நிலைமையை அறிந்து கொள்ள மத்திய அரசு, உலக சுகாதார அமைப்பின் தலைமையகம், மண்டல அலுவலகம் மற்றும் இந்தியாவிற்கான அலுவலகத்துடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளது.

24. நோவல் கொரோனா வைரஸ் நோய் காரணமாக எழுந்துள்ள சவால்களை எதிர்கொள்வதில்  பிறநாடுகளுக்குத் தேவையான உதவிகளையும் இந்திய அரசு வழங்கி வருகிறது. தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் உள்ள பிறநாடுகளில் ரத்தப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான உதவிகளையும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வழங்கி வருகிறது.   மாலத்தீவிலிருந்து அனுப்பப்படும் ரத்த மாதிரிகளை பரிசோதிக்கும் பணி ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரத்த மாதிரிகளை பரிசோதிக்குமாறு ஆப்கானிஸ்தான் விடுத்த வேண்டுகோளையும் ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.  இந்தத் தொற்று நோயை கட்டுப்படுத்துவதிலும், பயணிகளை பரிசோதிக்கவும், பூடானுக்குத் தேவையான  தொழில்நுட்ப உதவிகளை வழங்கவும் நாம் ஒப்புக்கொண்டிருக்கிறோம்.
 

25. மத்திய அரசு நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதோடு, நோவல் கொரோனா  வைரஸ் பரவுவதைத் தவிர்க்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

 

 

****


(Release ID: 1602661) Visitor Counter : 1022