நிதி அமைச்சகம்
வங்கித் துறை சீர்திருத்தம் தொடர்ந்து முன்னுரிமை பெற்று வருகிறது.
வைப்புத் தொகைகளுக்கான காப்பீட்டு வசதி ஒவ்வொரு வைப்புதாரருக்கும் ரூ. 5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதிய நிதிக்கான ஒழுங்குமுறை ஆணையத் திருத்தங்கள்: அரசு ஊழியர்களுக்கென தனியாக தேசிய ஓய்வூதிய திட்ட அறக்கட்டளை.
ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் உள்ள அரசுப் பங்குகளில் ஒரு பகுதியை துவக்க நிலை பொது கேட்பு மூலம் விற்பதற்கான திட்டம்: சிறு முதலீட்டாளர்களுக்கு ஒரு வாய்ப்பு.
சிறு, குறு, நடுத்தர தொழில்களில் கவனம்: விற்பனைப் பட்டியல் அடிப்படையிலான நிதியுதவி, துணைநிலை கடன், ஏற்றுமதி உதவித் திட்டங்கள் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன.
சிறு,குறு, நடுத்தர தொழில்களின் கடன்களை சீரமைப்பதற்கான காலக் கெடுவை 2021 மார்ச் 31 வரை நீட்டிக்குமாறு இந்திய ரிசர்வ் வங்கிக்கு அரசு கோரிக்கை.
தேசிய அளவிலான கட்டமைப்பிற்கென ரூ. 103 லட்சம் கோடி ஒதுக்கீடு.: கட்டமைப்புக்கான நிதி நிறுவனங்களுக்கு உதவும் வகையில் ரூ.22,000 கோடி பங்குகளாக வழங்கப்படும்.
சிறந்த தங்க விற்பனை விலையை கண்டறியவும் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் குஜராத்தில் உள்ள சர்வதேச நிதி தொழில்நுட்ப நகரத்தில் சர்வதேச தங்க பரிமாற்ற நிலையம் உருவாக்கத்திற்கான
இடுகை இடப்பட்ட நாள்:
01 FEB 2020 2:24PM by PIB Chennai
நிதித்துறையில் மூலதனம் வந்து சேர்வதை எளிமையாக்கும் நோக்கத்துடன் மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் பல்வேறு சீர்திருத்தங்களை அறிவித்துள்ளார். இவை வங்கித் துறை, நிதிச் சந்தைகள், கட்டமைப்பிற்கான நிதி வசதி ஆகிய துறைகள் சார்ந்தவை ஆகும்.
இன்று நாடாளுமன்றத்தில் 2020-21 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் “தூய்மையான, நம்பிக்கையான, துடிப்புள்ள நிதித்துறை என்பது நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் அவசியமானதாகும். 5 ட்ரில்லியன் டாலர்களைக் கொண்ட பொருளாதாரமாக நாட்டை உருவாக்குவதற்கான நமது முயற்சிகளில் நிதிசார் கட்டமைப்பு தொடர்ந்து மாற்றங்களை உள்வாங்கியதாக வலுப்பெற்றுக் கொண்டே வரவேண்டும்.”
தனியார் மூலதனத்தை வெளிக்கொண்டு வருவதற்காக ஐடிபிஐ வங்கியில் உள்ள இந்திய அரசின் மீதமுள்ள பங்குகளை பங்குச் சந்தை மூலம் தனியார், சில்லறை மற்றும் நிறுவன ரீதியான முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்வதென முன்மொழிந்தார். பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ. 3,50,000 கோடி அளவிற்கு மூலதனத்தை அதிகரித்து, வங்கிகளை நிலைநிறுத்துவதற்கான முயற்சிகளின் பின்னணியில், துடிப்பானதொரு வங்கி முறையை உறுதிப்படுத்த அவை மேலும் போட்டித்திறன் வாய்ந்தவையாக, வெளிப்படைத்தன்மை கொண்டவையாக, தொழில்முறை திறன் கொண்டவையாக செயல்படும் வகையில் நிர்வாகரீதியான சீர்திருத்தங்களை அரசு மேற்கொள்ளும் என்று நிதியமைச்சர் உறுதிபடக் கூறினார். கூடுதல் மூலதனத்தை திரட்ட மூலதன சந்தையை அணுகவும் ஒரு சில பொதுத்துறை வங்கிகளுக்கு ஊக்கம் தரப்படும்.
மேலும் வைப்புநிதிக்கான காப்பீட்டு செய்வதற்கான உச்சவரம்பு முன்பு ரூ. 1 லட்சமாக இருந்தது. இதை வைப்புநிதி முதலீட்டாளர் ஒவ்வொருக்கும் ரூ. 5 லட்சமாக உயர்த்த வைப்புநிதி காப்பீடு மற்றும் கடன் உறுதிக்கழகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் அறிவித்தார். வைப்பு நிதி முதலீட்டாளர்களின் பணத்திற்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்து பட்டியல் மற்றும் வணிக வங்கிகளின் செயல்திறனை கண்காணிக்க துடிப்பான ஏற்பாடு உள்ளது என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
நிதித்துறையின் முக்கியமான அங்கங்களான கூட்டுறவு வங்கிகள், வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் ஆகியவையும் மேம்படுத்தப்பட்ட நிர்வாகத்தின் மூலம் வலுப்படுத்தப்படும். கூட்டுறவு வங்கிகளைப் பொறுத்தவரையில் தொழில் நிபுணத்துவம், மூலதனத்தை அணுகுவதற்கான ஏற்பாடு, ரிசர்வ் வங்கியின் மேம்படுத்தப்பட்ட மேற்பார்வை ஆகியவற்றிற்கென வங்கி செயல்பாட்டிற்கான ஒழுங்குமுறை சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. 2002 ஆம் ஆண்டின் சர்ஃபேசி சட்டத்தின் மூலம் கடன் மீட்பிற்கு தகுதிபெற்றவையாக வங்கியல்லாத நிதிநிறுவனங்கள் இருப்பதற்கு அவற்றின் சொத்து அளவு ரூ. 500 கோடியில் இருந்து ரூ. 100 கோடியாகவும் கடன் அளவு தற்போதுள்ள ரூ. 1 கோடி என்பதில் இருந்து ரூ. 50 லட்சமாகவும் குறைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
ஓய்வூதிய நிதி மற்றும் வளர்ச்சிக்கான ஆணையத்தின் ஒழுங்கமைப்பு பங்கினை மேலும் வலுப்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்திய நிதியமைச்சர், இது தொடர்பான ஓய்வூதிய நிதி மற்றும் வளர்ச்சிக்கான ஆணைய சட்டத்தில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார். இந்த திருத்தங்களின் விளைவாக அரசு ஊழியர்களுக்கான தேசிய ஓய்வூதிய திட்ட அறக்கட்டளை ஆணையத்தின் அதிகார வரம்பிலிருந்து பிரிவதற்கு வழியேற்படும். அரசு ஊழியர்கள் அல்லாத இதர ஊழியர்களுக்கான ஓய்வூதிய அறக்கட்டளையை உருவாக்கவும் இது வழிவகுக்கும். மேலும் பரஸ்பர இயங்குதன்மை மற்றும் இது வரை சேர்ந்துள்ள மொத்த தொகையைப் பாதுகாப்பது ஆகியவற்றுக்கான ஏற்பாடுகள் மட்டுமின்றி அனைவருக்குமான ஓய்வூதிய ஏற்பாட்டிற்குள் தானாகவே இணைவதை ஊக்குவிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. “இந்த ஏற்பாடுகள் தங்களது முதுமைக் காலத்திற்கான திட்டமிடலை மேற்கொள்ள குடிமக்களைத் தூண்டும் என்று தான் நம்புவதாகவும்” அவர் மேலும் தெரிவித்தார்.
குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள்
சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களே புதிய கண்டுபிடிப்புகளை செய்பவர்களாகவும், வேலைவாய்ப்புகளை உருவாக்குபவர்களாகவும், ஆபத்துகளை தைரியமாக எதிர்கொள்பவர்களாகவும் உள்ளனர் என்ற நிலையில் இவர்களே நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமானவர்களாக உள்ளனர். சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் பொருளாதார, நிதிசார் நிலைத்தன்மையை மேம்படுத்தும் வகையில் பல்வேறு முன்முயற்சிகளும் அறிவிக்கப்பட்டன.
பெருநிறுவனங்களிடமிருந்து சிறு, குறு, நடுத்தர தொழில்நிறுவனங்களுக்கு வந்து சேர வேண்டிய தொகைக்கான நிதியை விலைப்பட்டியலுக்கு ஏற்ப வங்கியல்லாத நிதிநிறுவனங்கள் டிஆர் இடிஎஸ் மூலம் வழங்க உதவும் வகையில் 2011-ஆம் ஆண்டின் ஃபாக்டர் ஒழுங்குமுறை சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. தாமதமாகப் பணம் பெறுதல், அதன் விளைவாக பணக் கையிருப்பு பிரச்சனை ஆகியவற்றை தவிர்க்கும் வகையில் விலைப்பட்டியல் அடிப்படையில் நிதிசார் கடன் வழங்குவதற்கென செயலி ஒன்று தொடங்கப்படும் என்றும் நிதியமைச்சர் அறிவித்தார்.
செயல்மூலதனக் கடன் பிரச்சனைகளை சமாளிக்கும் வகையில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவன தொழில்முனைவர்களுக்கு துணைக் கடன் வழங்குவதற்கான புதிய திட்டம் ஒன்றும் திட்டமிடப்பட்டுள்ளது. வங்கிகளால் வழங்கப்படவிருக்கும் இந்தத் துணைக்கடன் வசதி அரைச் சம பங்காக கருதப்படும் என்பதோடு, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவர்களுக்கான கடன் உறுதி அறக்கட்டளையினால் முழுமையாக உறுதி செய்யப்பட்டதாகவும் இருக்கும். இந்த அறக்கட்டளைக்கான தொகையை அரசு வழங்கும்.
சிறு, குறு, நடுத்தர தொழில்நிறுவனங்களின் கடன்களை சீரமைப்பதற்கான ஏற்பாட்டை 2021 மார்ச் 31 வரை நீட்டிக்க ஒப்புதல் வழங்குமாறு அரசு ரிசர்வ் வங்கியை கேட்டுக் கொண்டுள்ளது. கடந்த ஆண்டில் இத்தகைய ஏற்பாட்டின் மூலம் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயனடைந்தன. இந்த ஏற்பாடு 2020 மார்ச் 31 அன்று முடிவடைய இருந்தது.
ஏற்றுமதி சந்தையில் நடுத்தர அளவிலான நிறுவனங்களுக்கு உதவி செய்திடும் வகையில் எக்சிம் வங்கி, சிறு தொழில் வளர்ச்சி வங்கி ஆகியவற்றினால் செயல்படுத்தப்படும் ரூ. 1000 கோடி அளவிலான ஒரு திட்டத்தையும் அரசு அறிவித்துள்ளது. இந்த இரண்டு வங்கிகளும் தலா ரூ. 50 கோடியை இதற்காக முதலீடு செய்யும். இதில் ரூ. 100 கோடி பங்குத்தொகை மற்றும் தொழில்நுட்ப உதவி ஆகியவற்றின் அடிப்படையிலும் மீதமுள்ள ரூ.900 கோடி வங்கிகளிடமிருந்து பெறப்படும் கடனாகவும் இருக்கும். இத்திட்டமானது மருந்து உற்பத்தி, வாகன உதிரி பாகங்கள் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில்களில் கவனம் செலுத்துவதோடு, தொழில்நுட்ப மேம்பாடு, ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி, வர்த்தக திட்டமிடல்கள் போன்றவற்றுக்கும் உதவி செய்யும்.
அரசு பங்குகளை விற்பனை செய்தல்
நிதிசார் சந்தைகளில் மேலும் அதிகமாக நுழையவும், உண்மையான மதிப்பை பெறவும், சந்தை சார் ஒழுங்கை நிலைநாட்டவும் ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் (எல் ஐ சி) உள்ள தனது பங்கில் ஒரு பகுதியை துவக்கநிலை பொது விற்பனை மூலம் விற்பதென அரசு முடிவு செய்துள்ளது. இதுவரை உருவாக்கப்பட்டுள்ள செல்வத்தில் பங்கெடுப்பதற்கான வாய்ப்பு இதன் மூலம் சிறு முதலீட்டாளர்களுக்கு இதன் மூலம் கிடைக்கும்.
கட்டமைப்புக்கான நிதி ஏற்பாடு
வரிசைப்படுத்தப்பட்டுள்ள தேசிய கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ. 103 லட்சம் கோடி அளவிற்கான நிதி ஒதுக்கீட்டை அறிவித்ததன் மூலம் கட்டமைப்பு தொடர்பான முதலீடுகளில் அரசுக்குள்ள உறுதிப்பாட்டை நிதியமைச்சர் வலியுறுத்தினார். இதற்கென ஏற்கனவே ரூ. 22,000 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் அவையினரிடம் தெரிவித்தார். தேசிய முதலீடு மற்றும் கட்டமைப்பு நிதியின் துணை நிறுவனமான இந்திய கட்டமைப்பு நிதிநிறுவனம் போன்ற கட்டமைப்புக்கான நிதிநிறுவனங்களுக்கான பங்குத் தொகையாக இது அமையும். இதன் மூலம் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ளபடி ரூ. ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமான நிதியுதவியை வழங்குவதற்கு வழியேற்படும்.
*****
(வெளியீட்டு அடையாள எண்: 1601554)
வருகையாளர் எண்ணிக்கை : 270