தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
புனே இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் (எஃப்டிஐஐ), கொல்கத்தா சத்யஜித்ரே திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் (எஸ்ஆர்எஃப்டிஐ) ஆகியவற்றில் மாணவர் சேர்க்கைக்கு இந்த ஆண்டு முதல் பலநிலை தேர்வு நடைமுறை
Posted On:
17 JAN 2020 4:29PM by PIB Chennai
திரைப்படத் தயாரிப்பு மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பு ஆகியவற்றில் முன்னணி கல்வி நிறுவனங்களான புனேயில் உள்ள இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் (எஃப்டிஐஐ), கொல்கத்தாவில் உள்ள சத்யஜித்ரே திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் (எஸ்ஆர்எஃப்டிஐ) ஆகியவற்றில் சேர விரும்புவோர் இந்த ஆண்டு முதல் பலநிலைத் தேர்வு முறையைச் சந்திக்க வேண்டும்.
இந்தத் தேர்வின் முதல் நிலையில், கூட்டு நுழைவுத் தேர்வு (ஜெஇடி 2020) என்ற அகில இந்திய எழுத்துத் தேர்வில் வெற்றி பெற வேண்டும். இந்த 3 மணி நேர எழுத்துத் தேர்வு வினாத்தாளில் புறநிலை வகை வினாக்களும், அகநிலை வினாக்களும் இடம் பெற்றிருக்கும். நாட்டில் உள்ள 26 மையங்களில் இந்தத் தேர்வு நடைபெறும். ஜெஇடி 2020 தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் எஃப்டிஐஐ, எஸ்ஆர்எஃப்டிஐ ஆகிய இரண்டு நிறுவனங்களும் விண்ணப்பதாரர்களுக்கு இரண்டாம் நிலையில் பங்கேற்பதற்கு அழைப்புக் கடிதங்களை அனுப்பும். இரண்டாம் நிலைத் தேர்வு நெறிப்படுத்தும் தொடக்கநிலை தேர்வாக இருக்கும். இதனையடுத்து 3-ம் நிலையில் நேர்முகத்தேர்வும் நடைபெறும். இந்த 3 நிலைகளையும் வெற்றிகரமாக முடித்த மாணாக்கர் 2020ஆம் கல்வி ஆண்டில் முழு நேர முறையான படிப்புகளில் சேர்க்கப்படுவார்கள்.
இந்த ஆண்டு ஜெஇடி 2020 தேர்வை எஸ்ஆர்எஃப்டிஐ நடத்துகிறது. இந்தத் தேர்வு 15.02.2020 சனிக்கிழமை பிற்பகல் மற்றும் 16.02.2020 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் பிற்பகல் இரு அமர்வுகளிலும் நடைபெறும். ஜெஇடி 2020 குறித்த தகவலை பரப்புவதற்காக நாடெங்கும் பல்வேறு நுழைவுத் தேர்வு கருத்தரங்குகள் நடத்தப்பட உள்ளன. விருப்பம் உள்ள மாணவர்கள் தங்களுக்கு சவுகரியப்பட்ட தேதி மற்றும் இடங்களில் இவற்றில் பங்கேற்றுப் பயனடையலாம்.
சென்னையில் இந்த நுழைவுத் தேர்வு கருத்தரங்கு, சென்னை ஆயிரம் விளக்கு கிழக்குப் பகுதியில், அண்ணா சாலை, இலக்கம் 604-ல் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் மன்றத்தில் 19.01.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை மணி 10.30 முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறும். இதில் பங்கேற்பதற்கு முன்பதிவு அவசியம் இல்லை. இக்கருத்தரங்கில் எவர் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.
படிப்பு விவரங்கள் மற்றும் தேர்வு விவரங்கள் குறித்த தகவல்களுக்கு கீழ்கண்ட இணையதளத்தைப் பார்க்கவும்.
https://applyadmission.net/jet2020
http://ftii.ac.in/
http://srfti.ac.in/
----
(Release ID: 1599683)
(Release ID: 1599707)
Visitor Counter : 186